Kangana Ranaut:``அவர்களின் வேடிக்கையான ஆஸ்கர் விருதை அவர்களே வைத்துக்கொள்ளட்டும்'' - கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'எமர்ஜென்சி'. முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவானது. இப்படத்தில் கங்கனா ரனாவத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்திருந்தார். அவரே இத்திரைப்படத்தை இயக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. வசூலிலும் பெரிய பின்னடைவைச் சந்தித்தது. சமீபத்தில் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி வெளியீட்டிற்கு பின் ரசிகர்களிடையே ஓரளவு நல்ல விமர்சனத்தைப் பெற்றுவருகிறது.

திரைப்படம் வெளியானதையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் "எமர்ஜென்சி திரைப்படம் ஆஸ்கருக்கு இந்தியா சார்பாக செல்ல வேண்டும்" என்றார். அதற்கு பதிலளித்த அவர்," ஆனால் அமெரிக்கா வளரும் நாடுகளை எவ்வாறு கொடுமைப்படுத்துகிறார்கள், அடக்குகிறார்கள் மற்றும் ஆயுதங்களைத் திருப்புகிறார்கள் என அதன் உண்மையான முகத்தை ஒப்புக்கொள்ள விரும்பாது. இது எமர்ஜென்சியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வேடிக்கையான ஆஸ்கார் விருதை அவர்களே வைத்திருக்கட்டும். நம்மிடம் தேசிய விருதுகள் உள்ளன." எனக் கூறினார்.
கங்கனா ரனாவத் இதற்கு முன்பு நான்கு முறை தேசிய விருதுகளை வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.