AI: 'பெரிய நிறுவனங்களில் இன்ஜினீயர்களுக்கு மாற்றாக ஏ.ஐ...' - என்ன சொல்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்?!
2025-ம் ஆண்டு இறுதிக்குள் மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் மிட் லெவல் இன்ஜினீயர்களின் பணியானது AI வசம் ஒப்படைக்கப்படும் என்று மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ குறித்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் மார்க் ஜுக்கர்பெர்க், "மெட்டா நிறுவனம் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதர்களால் செய்யப்படும் சில வேலைகளை இன்னமும் எளிதாகச் செய்ய ஏ.ஐ கருவிகளை உருவாக்கி வருகிறோம். இதன்மூலம், மனிதர்கள் செய்யும் சிக்கலான கோடிங் பணிகளை ஏ.ஐ செய்யும். இது மிட் லெவல் இன்ஜினீயர்களுக்கு மாற்றாக செயல்படும். இதன் மூலம் மெட்டா நிறுவனம் தன் பணிகளை ஏ.ஐ மூலம் கையாளும் வாய்ப்பைப் பெறுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் 2025-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வரும். அதற்கு பின்பு, மூன்றாம் நிலை இன்ஜினீயர்கள் தங்களது பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இழப்பீடாக தலா 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்" என்று பேசியுள்ளார்.
இதுவரை செலவுகள் குறைப்பு, மறுசீரமைப்பு போன்ற காரணங்களுக்காகத் தான் பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இனிமேல் ஏ.ஐ-யால் பலர் வேலை இழக்கலாம் என்ற செய்தி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய செயலிகளை நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.