Ajith: 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல' - நடிகர் அஜித்
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.
‛குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றிருக்கிறது.
இந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்து சாதித்திருக்கிறது.

3ம் இடத்தை பிடித்த அஜித்குமார் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்குமார் 'India Today'-விற்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து பேசிய அவர், "மோட்டார் ஸ்போர்ட்ஸ் கவர்ச்சிகரமான ஸ்போர்ட்ஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஆனால் இது கடினமான ஸ்போர்ட்ஸ்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்பது பணக்காரர்களுக்கானது மட்டுமல்ல அதை எல்லோருக்குமானதாக மாற்ற வேண்டும். 80 % ரேஸர்களுக்கு சரியான ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதில்லை.
அதனால் அவர்கள் சிரமப்படுகிறார்கள். இந்தியா 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடு. நான் என் மனதில் உள்ளதை சொல்கிறேன்.
மாநில அரசாங்கத்திடம் இருந்தோ, மத்திய அரசாங்கத்திடம் இருந்தோ நிதியை எதிர்பார்ப்பது மிகவும் தவறு. ஏனென்றால் அரசாங்கத்திற்கு தீர்க்கவேண்டிய பிரச்னைகள் நிறைய இருக்கிறது.

அரசு மட்டும்தான் உதவி செய்ய வேண்டும் என்றில்லை. தனியார் நிறுவனங்களும் உதவுவதற்கு முன்வர வேண்டும். அரசு நல்ல திறமையாளர்களையும், ஸ்பான்சர்களையும் ஒன்றிணைத்து வழிநடத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.