அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: அரசாணை
Ambedkar : `அம்பேத்கர் ஒன்றும் கடவுள் இல்லை என்பதை...' - அம்பேத்கர் நூல் குறித்து இந்திரன்
விகடன் பிரசுரத்தில் சமீபத்தில் வெளியான ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலின் விமர்சனக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கலை விமர்சகர் இந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூல் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர், சிறப்பு அழைப்பாளர்கள்.
இந்நிகழ்வில் பேசிய கலை விமர்சகர் இந்திரன், ``இலக்கியம் என்பது 'நான் பாதி எழுதுகிறேன்... மீதி அர்த்தத்தை வாசகன் எழுதி முடிக்கிறான்' என்பதுதான். வாசகனோடு உறவை ஏற்படுத்துவதற்காக ஒன்று எழுதப்படுகிறது எனில், அது தனிமனித செயல்பாடு அல்ல; அது ஒரு சமூக செயல்பாடு.
இந்தச் செயல்பாட்டில் ஈடுபடுகிற அனைவருக்காமான பைபிளாக 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை உருவாக்கி உள்ளனர். இந்த புத்தகத்தை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தக் கூட்டம் கூடியுள்ளது.
வெவ்வேறு துறை!
இந்த புத்தகத்தில் உள்ள 'அம்பேத்கர் அறிதலும் உரையாடலும்' என்ற ஒரு தொகுதியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதன் முதல் பகுதியில் தொல்.திருமாவளவன், கி.வீரமணி, பா.ரஞ்சித், அந்தியூர் செல்வராஜ், தனபால், டி.எம்.கிருஷ்ணா, வா கீதா ஆகியோரின் நேர்காணல்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். இதில் டி.எம் கிருஷ்ணானின் பேச்சு இந்தப் புத்தகத்தைப் படிக்க தூண்டும்.
அடுத்தது, 'அண்ணலால் நாங்கள்' என்ற பகுதியில் இயக்குநர் மாரி செல்வராஜ், பேராசிரியர் கல்யாணி, எழுத்தாளர் பாமா, ஞானவேல் போன்றவர்களின் கருத்துகள். அதன் பிறகு, 'அம்பேத்கர் வாழ்வும் போராட்டமும்' பகுதியில் அவரது பிறப்பு, வளர்ப்பு குறித்துப் பார்க்கிறோம். அம்பேத்கர் சுயசரித குறிப்புகளே எழுதி வைக்கவில்லை. காரணம், ‘ஹீரோ வர்ஷிப் இஸ் டேஞ்சரஸ் டு டெமாக்ரசி’ என்று சொல்பவர் அவர்.
அரசியல் தலைவர் அல்ல...
அம்பேத்கர் ஒரு அரசியர் தலைவரோ, தலித் தலைவரோ, பொருளாதார நிபுணரோ, எழுத்தாளரோ கிடையாது. அவர் ஒரு லைஃப் கோச். அம்பேத்கரை பார்த்து தான் எப்படி இயங்க வேண்டும்...எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
அம்பேத்கர் மாதிரி 'சத்தம் இல்லாமல் ஜெயிப்பது எப்படி' என்பது தமிழ் சமூகத்திற்கு மிக முக்கியப் பாடம். ஏனென்றால் சத்தம் போட்டுக்கொண்டே இருப்பதுதான் இந்த தமிழ் சமூகம். ஒன்றுமே செய்யாமலேயே சத்தம் போட்டே ஜெயித்து விடுவதை ஒரு தந்திரமாக கற்று வைத்து இருக்கிறது தமிழ் சமூகம். தமிழ் சமூகத்தில் சத்தமில்லாமல் ஜெயிப்பது எப்படி என்பதை அம்பேத்கர் எனக்கு கற்றுக் கொடுக்கிறார். அம்பேத்கர் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடவில்லை.
ஆப்பிரிக்க கவிதை!
அவருடைய வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் பள்ளி முதல் அமெரிக்கா வரை அவருக்கு இந்திய சமூகத்தில் இடமே இருக்கவில்லை. 'என்னை நீங்கள் இன்று சமையலறையில் போய் சாப்பிடு...எங்களோட சமமாக மேசையில் அமர்ந்து சாப்பிடாதே என்று சொல்கிறீர்கள்; நான் சமையலறைக்கு போய் மிக சத்தான நிறைய பொருட்களை உங்களுக்கு தெரியாமல் சாப்பிட்டு சதை திரட்சியோடு வந்து உங்களோடு சமமாக மேடையில் அமர்கிறபோது என்னை சமையலறைக்கு போ என்று சொல்வதற்கு உங்களால் முடியாது' என்பது லாங்ஸ்டைனுடைய ஆப்பிரிக்க கவிதை. இந்தக் கவிதைக்கான டெமோவே அம்பேத்கர் தான்.
அவருடைய படிப்பு சாதரண படிப்பு அல்ல. குடும்பத்தை விட்டுவிட்டு லண்டனுக்கு படிக்கச் செல்கிறார். இங்கு அவருடைய துணைவியார் வறுமையில் வாடுகிறார். வரட்டி சுற்றி, தட்டி, அதை விற்று வாழ்கிறார் அந்த பெண்மணி. இந்த நிலையில், அவருடைய பிள்ளைகள் எல்லாம் இங்கே இறந்து போகிறார்கள். லண்டனில் அவருக்கும் பணமில்லாமல், தான் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களை விற்று சொற்ப பணத்தில் சாப்பிட்டு, படிக்கிறார் அம்பேத்கர்.
இந்திய அறிவு ஜீவி...
நாமும் நம்முடைய சுய வளர்ச்சிக்காக அமெரிக்கா, லண்டனுக்கு செல்கிறோம். ஆனால், சமூக முன்னேற்றத்துடன் கூடிய சுய முன்னேற்றத்தை அடைந்தார் அம்பேத்கர்.
இந்தியாவினுடைய மாபெரும் அறிவு ஜீவி அம்பேத்கர். காரல் மார்க்ஸ்க்கு அடுத்தபடியாக ஒரு மேலைநாட்டு பல்கலைக்கழகத்தில் இவருக்குத்தான் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கருடைய சரியான அறிவு ஜீவிதத்தை சிறப்பாக கூறியிருக்கிறது 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல். இந்த நூலை உருவாக்கியவர்கள் 'அம்பேத்கர் கடவுளாக்கி வழிபடுவதற்கு அல்லர்' என்பதை தெளிவாக்கி இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் சொல்ல வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது. அம்பேத்கரை கடவுளாக்கி விட்டால், இதுவரை கடவுள் நமக்கு எதுவும் கொடுக்காததுபோல, அம்பேத்கரும் நமக்கு எதுவும் கொடுக்கமாட்டார்.
இந்த நூல் தனி மனிதன் அம்பேத்கரை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்...அவரிடம் இருந்து என்ன கற்றுகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
அம்பேத்கர் எல்லோருக்குமானவர்...
'அம்பேத்கர் எல்லோருக்குமானவர்' என்று சொல்லும் நிர்பந்தமான சோகமான நிலையில் தற்போது நாம் உள்ளோம். அதற்கேற்ற மாதிரி தான் இந்த நூலின் தலைப்பு உள்ளது. இந்த நூல் நமக்கு தெரியாத பல தகவல்களை தருகிறது. ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன், வெ.நீலகண்டன், ஷாஜன் கவிதா ஆகிய மூவரும் சரியாக திட்டமிட்டு, கலந்தாலோசித்து இந்தப் புத்தகத்தை உருவாக்கி உள்ளனர்.
இந்தப் புத்தகத்தில் வரும் ஆனந்த் டெல்டும்டே, விஜய் சிருவாடே, நாகராஜ் மஞ்சுலே, அசோக் கோபால், விஜெதாகுமார், கிறிஸ்டோப் ஜாப்ரீஸ் ஆகியோரின் கருத்துகள் மூலம் அம்பேத்கர் எலும்பு கூட்டில் இருந்து கோட் சூட்டோடு எழுந்து நிற்கிறார். இது ஒரு விலை மதிப்பில்லாத புத்தகம்.
இந்த நூலில் அம்பேத்கர் பற்றி எதிரும் புதிருமாக கருத்து சொல்பவர்கள் கூட இடம்பெற்றிருக்கிறார்கள். அடையாளம் தெரியாத சூழலில் தான் நம்முடைய வரலாறு உள்ளது. இது தான் நம்முடைய வரலாற்றின் ஆரம்பக்கட்டம். ஆக, அந்த அடையாளம் தெரியாத சூழ்நிலையை தாண்டி இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் வாசிப்பை பரவலாக கொண்டுவர வேண்டும். அப்போது தான் அம்பேத்கர் என்பவர் தனி மனித இயக்கம் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள முடியும்" என்று பேசினார்.