Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன?
துபாய் சர்வதேச மைதானத்தில் ஆசியக் கோப்பை 2025-க்கான இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியுள்ளனர்.
இரண்டு கேப்டன்களுக்கும் உற்சாகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் டாஸின்போது வழக்கமான செயல்முறையின்படி இருவரும் கைகொடுத்துக்கொள்ளவில்லை.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா இருவரும் தங்களது அணியினரின் பட்டியலை நடுவரிடம் கொடுத்துவிட்டு, வர்ணனையாளர் ரவி சாஸ்திரியிடம் பேசிவிட்டு உடை மாற்றும் அறைக்குச் சென்றுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் கூறுவதன்படி, சூர்யகுமார் யாதவ் இன்று காலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தான் நிச்சயமாக கைகுலுக்கப் போவதில்லை என்று தனது அணியினருக்கு சூர்யா தெரிவித்ததாகவும், போட்டியின் முடிவில் கை குலுக்கப் போவதில்லை என்று அவர் கூறியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு கடந்த சில நாள்களாக ஆன்லைனில் எதிர்ப்புகள் இருந்தன.
பகல்ஹாம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பெரும் சரிவை சந்தித்திருக்கின்றன. அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.
இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன. வட இந்தியாவின் சில பகுதிகளில் போராட்டங்களும் எழுந்தன.
இதற்கு முன்னரும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இணைந்து விளையாடுவதைத் தவிர்த்திருக்கின்றன. இதைவிட அழுத்தமான போருக்குப் பிறகான சூழலில் விளையாடியிருக்கின்றன.

ஆனால் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைத் தவிர எப்போதும் கை குலுக்குவதைத் தவிர்த்தது இல்லை என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம்.
கடும் பரபரப்புக்கு நடுவில் இந்த போட்டி நடைபெற்றாலும், சாதாரண அளவை விட சில காவலர்களே கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரசிகர்களும் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசிப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்திருக்கிறது.