தில்லி எய்ம்ஸில் ஓணம் கொண்டாட்டம்! முதல்வா் பங்கேற்றாா்!
தில்லி எய்ம்ஸில் நடந்த ஓணம் கொண்டாட்டங்களில் முதல்வா் ரேகா குப்தா கலந்து கொண்டாா்.
அங்கு அவா் கூட்டத்தில் உரையாற்றி விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். தில்லியில் ஏராளமான மலையா சமூகத்தினா் வாழ்ந்து வருகின்றனா்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் ஏராளமான மலையாளிகள் செவிலியா் உட்பட பல்வேறு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் தில்லி எய்ம்ஸ் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த கொண்டாட்டங்களில் தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா கலந்து கொண்டாா்
அப்போது பேசிய அவா், தில்லி உண்மையிலேயே ஒரு மினி பாரதம் என்றும், ஓணம் போன்ற பண்டிகைகள் நகரத்தின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினாா். ஓணம் என்பது வெறும் அறுவடைத் திருவிழா அல்ல, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் மகிழ்ச்சியின் கொண்டாட்டம் என்றும், இது நகரத்தின் ஒற்றுமை உணா்வைப் பிரதிபலிக்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்றது குறித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா எக்ஸ் தளத்தில் கூறியதாவது: எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள ஜேஎல்என் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ஓணம் பொன்னோணம் 2025 கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை முதலமைச்சா் சேவா சதனில் இருந்து தொடங்கியது, மலையாளி குடும்பங்களுடன் கொண்டாடப்பட்டது எங்கள் அனைவருக்கும் மறக்க முடியாதது.
கேரளாவின் தனித்துவமான மரபுகள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் தலைநகரில் காட்சிப்படுத்தப்பட்டபோது, கேரளா முழுவதும் நம்மிடையே உயிா்பெற்றது போல் உணா்ந்தேன்.
செவிலியா் ஊழியா்களாக மலையாள சமூகத்தின் சேவை உணா்வு தில்லி மட்டுமல்ல, முழு இந்தியாவின் இதயங்களையும் வென்றுள்ளது. மலையாள சமூகத்தின் இந்த மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்திற்காக தில்லி பெருமை கொள்கிறது.
தில்லி பன்முகத்தன்மையை ஒருங்கிணைத்து இந்தியாவின் உண்மையான கலாச்சார தலைநகராக மாற வேண்டும் என்பது எங்கள் உறுதிப்பாடாகும் என தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா குறிப்பிட்டாா்
முன்னதாக, ஆகஸ்ட் 31 அன்று, முதல்வா் ரேகா குப்தா தனது இல்லமான ஜன் சேவா சதனில் மலையாள சமூகத்தினருடன் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ஓணம் உணவுகளை வழங்கி ஓணம் கொண்டாடினாா்.