Aus v Ind : 'ஐசிசி யை விட பிசிசிஐதான் அதிகாரமிக்கது' - ஆஸி வீரர்கள் ஓப்பன் டாக்!
பார்டர் கவாஸ்கர் தொடர் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், 'ABC Sports' என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் ஐ.சி.சியை விட பிசிசிஐதான் அதிக அதிகாரம் மிக்கதென கூறியிருக்கின்றனர்.
கம்மின்ஸ், மேக்ஸ்வெல், ஹெட், ஸ்மித் என முக்கியமான ஆஸ்திரேலிய வீரர்களிடம் 'பிசிசிஐ, ஐ.சி.சி, இந்தியன் கிரிக்கெட்' என மூன்று விஷயங்களை குறிப்பிட்டு ஒவ்வொன்றை பற்றியும் ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள் என சொல்லப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், 'பிசிசிஐ, ஐ.சி.சி, இந்தியன் கிரிக்கெட்' மூன்றுக்குமே 'Big' - பெரியது என ஒரே வார்த்தையில் பதில் கூறினார்.
மேக்ஸ்வெல், ஸ்மித், அலெக்ஸ் கேரி என மூவரும் பிசிசிஐ யை 'Powerful' எனக் குறிப்பிட்டனர். இதில் ஸ்மித் அடுத்ததாக கூறியதுதான் ஹைலைட். முதலில் பிசிசிஐ யை 'Powerful' எனக்கூறியவர், ஐ.சி.சி பற்றி 'பிசிசிஐ அளவுக்கு இவர்களுக்கு அதிகாரமில்லை.' எனக் கூறினார். நான் நகைச்சுவையாக கூறினேன். இதை எடிட் செய்துவிடுங்கள் என வேடிக்கையாகவும் கூறினார்.
டிராவிஸ் ஹெட் பதில் சொல்கையில், பிசிசிஐ யை 'Rulers' அதாவது ஆட்சியாளர்கள் எனக் குறிப்பிட்டார். ஐ.சி.சி யை 'Second' - இரண்டாம்பட்சம் எனக் குறிப்பிட்டார்.
உலக கிரிக்கெட்டில் பிசிசிஐதான் வலிமையான போர்டு. அவர்களை தாண்டி ஐ.சி.சியால் எந்த முடிவையும் எடுக்க முடியாதென ஒரு கருத்து இருக்கிறது. அதை வலுப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்களே ஓப்பனாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.