டாப் 5 மிக குறைந்த விலை, அதிக மைலேஜ் பைக்குகள்!| Top 5 Affordable Commuter Bikes...
Aus vs Ind: "ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது பிடிக்கும்; காரணம்" - ரோஹித் சர்மா
வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கும் ரோஹித் சர்மா, கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டு முதல் கேப்டனாகச் செயல்படும் ரோஹித் சர்மாவின் இடத்தை சுப்மன் கில்லைக் கொண்டு நிரப்பியிருக்கிறது பிசிசிஐ. ஷ்ரேயஸ் ஐயர் துணைக் கேப்டனாகச் செயல்படுகிறார். டி 20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் மற்றும் ரோஹித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம்தான் ரோஹித் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இந்த நிலையில் அவரிடமிருந்து கேப்டன்ஸி பொறுப்பு பறிக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த முடிவுக்குப் பிறகு முதல்முறையாக இதுகுறித்து பேசியிருக்கிறார் ரோஹித் சர்மா.
ஆஸ்திரேலியாவில் விளையாடுவது தனக்கு விருப்பமானது எனக் கூறி, போட்டியில் கலந்துகொள்வது பற்றி ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரோஹித் சர்மா.
"எனக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது பிடிக்கும். அங்குச் செல்வதை விரும்புவேன். ஆஸ்திரேலிய மக்கள் கிரிக்கெட்டை அதிகம் நேசிப்பவர்கள்" என மும்பையில் நடந்த CEAT கிரிக்கெட் மதிப்பீட்டு விருதுகள் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் ரோஹித்.

2027 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா?
கேப்டன்சி மாற்றம் குறித்து ரோஹித்துக்கு ஏற்கெனவே தெரியப்படுத்திவிட்டதாகக் கூறியுள்ளார் பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர். ஆனால் 2027 உலகக்கோப்பையில் விராட் மற்றும் ரோஹித் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் சென்றார்.
"ரோஹித், கோலி விளையாடும் ஃபார்மெட் இதுதான். அணியில் இருக்க தேவையான அனைத்து விஷயங்களையும் அவர்கள் பூர்த்தி செய்துள்ளனர். 2027 ஒருநாள் உலகக் கோப்பை வெகு தொலைவில் உள்ளது. இப்போது அதைப் பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இதுவொரு கேப்டன்சி மாற்றம்.
அதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன. நடைமுறையில் மூன்று ஃபார்மெட்டுகளுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது சாத்தியமற்றது. அடுத்து வரும் உலகக் கோப்பையை நீங்கள் பார்க்க வேண்டும். இப்போது மிகக் குறைவாக ஆடப்படும் ஃபார்மெட் இதுதான் (ODI)...
.jpg)
இப்போதோ அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகோ எடுக்க வேண்டிய முடிவு இது. மூன்று ஃபார்மெட்டுகளுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது மிகவும் கடினம். தேர்வாளர்களுக்கு மட்டுமல்லாமல், பயிற்சியாளர்களுக்கும் கடினம்தான்" எனக் கூறியிருந்தார் அகர்கர்.