Warren Buffett: தொடரும் நன்கொடை... இந்த முறை 1.2 பில்லியன் டாலரை அள்ளிக்கொடுத்த ...
Baakiyalakshmi: தந்தையைத் திருத்திய இனியா; அப்ப இனி யாரு வில்லன்?
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில வாரங்களாக கோபியின் கதாபாத்திரம் பயங்கரமாக வில்லத்தனம் செய்வது போல காட்டப்பட்டது.
பாக்கியா-கோபிக்கு இளம் வயதிலேயே பெற்றோர்கள் கட்டாயத்தின் பேரில் திருமணம் நடத்தி வைக்கப்படும். கோபிக்கு ஆரம்பம் முதலே பாக்கியாவை பிடிக்காது.
அப்பாவித்தனமான கிராமத்துப் பெண்ணாக இருந்த பாக்யா தன் சுய விருப்பு - வெறுப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கணவன், மாமியார், மாமனார், பிள்ளைகள் என இருப்பார். ஒருகட்டத்தில் பாக்கியா, அந்த வீட்டில் தனக்கான மதிப்பு கிடைக்கவில்லை என்பதை உணர்கிறார், அதே சமயம் கோபி கல்லூரிக் கால காதலி ராதிகாவைச் சந்திக்கிறார். இருவரும் மறுமணம் செய்ய முடிவெடுக்கின்றனர்.
இதுவரை கோபி கதாபாத்திரம் மீது ரசிகர்களுக்கு கோவம் வரவில்லை. சந்தர்ப்ப சூழலில் இப்படி செய்கிறார் என்பது போன்று அவரின் கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டது.
ஆனால், ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக பாக்கியாவுக்கே தெரியாமல் விவாகரத்துக்கு கோர்ட் வரை கூட்டிச் சென்றது, அவரை மட்டம்தட்டி பேசியது என கோபி மீதான பார்வை ரசிகர்களுக்கு மாறியது.
சுயநலவாதி, காரியவாதி என்பது போன்ற பிம்பம் கோபி கதாபாத்திரம் மீது இருந்தது. ஆனால் விவாகரத்துக்குக் பின் பாக்கியாவின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் அவர் செய்யும் வில்லத்தனங்களால் சீரியலில் முழு நேர வில்லனாகவே கோபி மாறிவிட்டார்.
45 வயதைத் தாண்டி பிடித்த வாழ்க்கையைத் தேர்வு செய்து, மறுமணம் செய்து கொண்ட கோபி அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழாமல் பாக்யாவுக்குத் தொல்லை கொடுக்கும் வேலையைக் கையிலெடுத்தார்.
சமீபத்தில் பாக்யா ஹோட்டலில் உணவில் கெட்டுப் போன இறைச்சியை கலந்தது வேற லெவல் வில்லத்தனம். இனி கோபி திருந்தவே மாட்டார், அவர் தான் இந்த சீரியலில் வில்லன், அவரை பாக்யா எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதே இனி வரும் எபிசோடுகளில் இருக்கும் என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்த்த வேலையில் இயக்குநர் கதையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டார்.
கோபிக்கு எதிராக பாக்கியா வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில் ஜாமீனில் அவர் வெளியே வருகிறார். இதனிடையே பாக்கியலட்சுமி-கோபி இடையே நடக்கும் பிரச்னைகள் இணையத்தில் வைரலாகிறது.
பெற்றோர் விவாகரத்து செய்வதாலும், ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதாலும் பாதிக்கப்படப் போவது குழந்தைகள் தான் என்பதை இனியா கதாபாத்திரம் ஆழமாக பிரதிபலிக்கிறது.
செழியன், எழில் ஆகியோர் வயதில் பெரியவர்கள் என்பதாலும் அவர்களுக்கென்று குடும்பம் குழந்தை என இருப்பதாலும் அம்மா, அப்பா இடையே நடக்கும் பிரச்னைகள் அவர்களை அந்தளவுக்கு பாதிக்கவில்லை. ஆனால் கல்லூரி பருவத்தில் இருக்கும் இனியா அம்மா அப்பாவின் பிரச்னையில் அதிகம் பாதிப்புகளை சந்திக்கிறார். நண்பர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்.
பாக்கியா-கோபி இடையே நடக்கும் சண்டை இணையத்தில் வைரலானதும் இனியா நண்பர்கள் அவரை ட்ரோல் செய்கின்றனர். அப்பா மீது தான் தவறு என்றபோதும், இனியாவால் கோபி ஜெயிலுக்கு போவதைத் தாங்க முடியவில்லை. பாக்யா படும் கஷ்டங்களையும் இனியாவால் பார்க்க முடியவில்லை. ஆக, குழப்பம், மனவருத்தம், ஆற்றாமை என அத்தனை வலிகளும் இருப்பதை இனியா வெளிக்காட்டாமல் வைத்திருக்கிறார்.
ஒருக்கட்டத்தில் கோபியைச் சந்தித்து தன் மனதில் இருந்த அனைத்து வருத்தங்களையும் கொட்டித் தீர்க்கிறார், கோபி மீதிருக்கும் தவறுகளை எடுத்துச் சொல்கிறார். கோபியால் பதில் பேச முடியாமல் நிற்கிறார். தனது ஈகோ தன் செல்ல மகளை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கோபி நிலைகுலைகிறார். ``நான் நல்லா இல்ல, நான் சந்தோஷமா இல்ல, எங்க சந்தோஷம் மொத்தமா போச்சு” என்று இனியா பேசியது கோபியை ஆழமாகப் பாதிக்கிறது.
பாக்கியா மீதிருந்த ஈகோ சுக்குநூறாகிறது. உண்மையிலேயே ஒரு மகள் தன் தந்தையிட இப்படி கேள்வி கேட்டால், ஒரு குற்றவுணர்ச்சி மிக்க தந்தை எப்படி ரியாக்ட் செய்வாரோ அதை அப்படியே கண்முன் நிறுத்துகிறார் நடிகர் சதீஷ். அவரை தவிர அந்த இடத்தில் வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கோபியாக மனதில் பதிந்து விட்டார் சதீஷ்.
பெற்றோரின் ஈகோ மற்றும் பிரச்னையால் சமூகம் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ளும் மகளாக இனியாவின் நடிப்பு கச்சிதம். மேலும் கணவன் மனைவி சண்டையை மீடியா வரை எடுத்து வரும் அனைவருக்குமே இந்தக் காட்சி பாடம் தான்.
சமீபத்தில் வெளியான புரோமோவில் இனியா கேட்ட கேள்விகள் கோபியின் மனதை ஆழமாகப் பாதிக்கிறது. மனவலி உடலிலும் வெளிப்பட்டு நெஞ்சு வலி வருகிறது. ராதிகாவுக்கு போன் செய்கிறார் எடுக்கவில்லை, பாக்யாவுக்கு கால் செய்கிறார். அவர் தான் கோபியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி கதை விறுவிறுப்பாக நகரும். பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.