Basics of Share Market 25: CAGR கணக்கிடுவது எப்படி தெரியுமா?!
CAGR பற்றி நாம் ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தாலும், இன்னும் தெளிவாக தெரிந்துகொள்வது மிக மிக அவசியம். அப்போதுதான் நீங்கள் பங்குச்சந்தையில் எவ்வளவு லாபம் பெற்றிருக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
'பேராசை பெருநஷ்டம்' என்ற பழமொழி நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். 'இன்னும் வேண்டும்...இன்னும் வேண்டும்' என்று நினைக்காமல், ஆண்டுக்கு இவ்வளவு 'CAGR' கிடைத்தால் போதும் என்று நிர்ணயித்து செயல்படுவது நல்லது. இவ்வளவு பில்டப் தரப்படும் CAGR பற்றி இனி பார்ப்போம்.
இன்று நீங்கள் ரூ.1,000 பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். அது சில நாள்களில் 50 சதவிகித வருமானத்தை ஈட்டி ரூ.1,500 ஆக லாபம் பெறுகிறீர்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துகொள்வோம். இன்னொரு நாள் ரூ.500 முதலீடு செய்கிறீர்கள். அது 10 சதவிகிதம் நஷ்டம் ஆகி ரூ.450 ஆகிவிடுகிறது என்று இதையும் ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.
இந்த இரண்டு சம்பவத்திலுமே, ஒரு தடவை ஏறியிருக்கிறது என்பதால் நீங்கள் 50 சதவிகிதம் லாபம் பெற்றிருக்கிறீர்கள் என்றும், இன்னொரு தடவை இறங்கியிருக்கிறது என்பதால் 10 சதவிகிதம் நஷ்டமாகி இருக்கிறீர்கள் என்றும் எடுத்து கொள்ளக் கூடாது. ஏனெனில், இது அன்றைய கணக்கை பொறுத்தது. உங்கள் லாபத்தை நீங்கள் ஆண்டு அளவில்தான் கணக்கிட வேண்டும். அதற்கு உதவுவதுதான் CAGR.
இப்போது, நாம் CAGR பற்றி முன்பு பார்த்திருந்ததை திரும்பவும் காண்போம்...Compound Annual Growth Rate-ன் சுருக்கமே CAGR. ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஆண்டிற்கு எத்தனை சதவிகித வளர்ச்சியை முதலீடு எட்டியிருக்கிறது என்பது தான் CAGR. நீங்கள் ரூ.100 முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலாம் ஆண்டு 10 சதவிகித வளர்ச்சியை எட்டியிருக்கலாம். இரண்டாவது ஆண்டு 8 சதவிகித வளர்ச்சியை எட்டியிருக்கலாம் - இப்படி ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சியில் சதவிகித மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், இதை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு அடிப்படை சதவிகிதம் வந்திருக்கும். அது தான் CAGR.
ஆக, மொத்தம் ஒரு ஆண்டுக்கு நீங்கள் எவ்வளவு லாபம் பெற்றிருக்கிறீர்கள் என்று உதவுவது CAGR. CAGR கணக்கிடும் ஃபார்முலா இதோ...
CAGR = (கடைசியாக முதலீடு மூலம் பெற்றிருக்கும் அல்லது பெருகியிருக்கும் தொகை / ஆரம்பத்தில் முதலீடு செய்த தொகை)1/எத்தனை ஆண்டுகள் முதலீடு– 1
இந்த ஃபார்முலா வேலை எல்லாம் கஷ்டமாக இருந்தால், ஆன்லைனில் இருக்கும் CAGR கால்குலேட்டர்களில் எளிதாக கணக்கு செய்துவிடலாம்.
அதிக லாபம் பார்க்க ஆசைப்பட்டு நாம் நிர்ணயித்திருக்கும் CAGR-க்கு மேல் சென்று, ஏதோ ஒரு கட்டத்தில் நஷ்டமாகிவிட்டால், நமக்கு தான் நஷ்டம்.
நாளை: Candlestick pattern பற்றி தெரிந்துகொள்வோமா?!