திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
Basics of Share Market 26: `Candlestick pattern பற்றி தெரிந்து கொள்வோமா?!’
பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்யும்போது, அந்த நிறுவனத்தின் போக்கு முன்னால் எப்படி இருந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறிக்கொண்டிருக்கோம்.
அதற்கு உதவுவது தான் 'Candlestick pattern'. பங்கின் போக்கு எப்படி போயிருக்கிறது என்பது ஒரு சார்ட் (chart) மூலம் பங்குச்சந்தையில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதுநாள் வரை, நாம் அதை பார்க்கும்போது ஒரு கிராப் (Graph) என நினைத்து கடந்திருப்போம். அதை உற்று கவனிக்கும்போது மெழுகுவர்த்தி போல இருக்கும். அது தான் கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன்.
இது ஜப்பானியர்கள் கண்டுபிடித்த முறை ஆகும். 'உன் ஜாதகமே எங்கிட்ட இருக்கு' என்ற சினிமா டயலாக்குகளை கேட்டிருப்போம். அந்த மாதிரி பங்கின் ஜாதகத்தை கூறுவது தான் இந்த கேண்டில் ஸ்டிக் என்று எடுத்துகொள்ளலாம்.
இந்த கேண்டில் ஸ்டிக்கில் நடுவில் ஒரு செவ்வகம் மற்றும் இரு பக்கங்களிலும் சின்ன கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் எல்லாவற்றிலும் இருக்கும் என்று கூறமுடியாது. அவைகளை பற்றி பின்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
கேண்டில் ஸ்டிக்கில் செவ்வகத்தை முதலில் எடுத்துகொள்வோம். ஒரு செவ்வகத்தை நீள வாக்கில் கீழே இருந்து வரைவதாக வைத்துகொள்வோம். அப்போது நாம் கீழே வரைய தொடங்குவோம் அல்லவா...அது குறிப்பிட்ட நேர அளவில் பங்கு விற்பனை தொடங்கும்போது எந்த விலையில் விற்பனை தொடங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. செவ்வகத்தை வரைந்து முடிக்கும்போது மேலே சென்று முடியும் அல்லவா... அது பங்கு விற்பனை முடியும் காலகட்டத்தில் கடைசியாக எந்த விலைக்கு விற்பனை ஆகியிருக்கிறது என்பதை காட்டுகிறது. ஆரம்ப விலைக்கு கீழே கோடு இருப்பது, அந்தப் பங்கின் அதற்கும் கீழ் விற்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச விலையை குறிக்கிறது. முடிவு விலைக்கு மேலே இருக்கும் கோடு அதற்கும் மேல் பங்கு அதிகபட்சமாக எவ்வளவு விலைக்கு விற்பனை ஆகியிருக்கிறது என்பதை காட்டுகிறது.
இதுவே, அந்தக் கேண்டில் ஸ்டிக் பச்சை நிறத்தில் இருந்தால் பங்கு ஏறுமுகத்தில் இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இருந்தால் பங்கு இறங்குமுகத்தில் இருக்கிறது.
நாளை: கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் வகைகள் என்னென்ன?