BB Tamil 8 Day 25 : 'யாரு செஞ்சதுன்னு..' - சீறிய சுனிதா...கிப்ட் கொடுத்து கூல் செய்ய நினைத்த சவுண்ட்
தீபாவளி எபிசோடு. எனவே ‘அதுல ஒண்ணுமில்ல. கீழே போட்டுரு’ என்னுமளவிற்கு விருந்து, புன்னகை, பெருக்கெடுத்தோடும் திடீர் பாசம், கொண்டாட்டம். பிரிவுத் துயரம் என்கிற வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகள். என்றாலும் ஆங்காங்கே என்ன சுவாரசியம் நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 25
பப்பும் மப்புமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவனை, திடீரென்று நெற்றியில் விபூதியுடன் கோயிலில் பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? அப்படியே இதுவரை பிக் பாஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பக்திப்பாடலுடன் பொழுது விடிந்தது. ‘அடடே! என்னவொரு தெய்வீகம்!’ என்று கந்தசஷ்டி கவசப்பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் போதே சட்டென்று ரூட் மாறி ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’ என்கிற பழைய பாடலின் அதிரடியான ரீமிக்ஸ் வெர்ஷனை அலற விட்டார் பிக் பாஸ். சாமிப் பாட்டுக்கு எப்படி டான்ஸ் ஆடுவது என்று தயங்கிக் கொண்டிருந்த மக்கள், இந்த துள்ளலான இசையைக் கேட்டதும் இறங்கி குத்தி ஆடினார்கள்.
தீபாவளி என்பதால் தலைக்குத் தேய்த்துக் கொள்ள நல்லெண்ணைய், சீயக்காய் என்று புது மாப்பிள்ளை வரவேற்பு போல அமர்க்களப்படுத்தியிருந்தார் பிக் பாஸ். ‘பெத்த அம்மா கூட இப்படிச் செய்வாங்களான்னு தெரியல பாஸூ’ என்று நம்மைக் கண்கலங்க வைக்குமளவிற்கு ஒவ்வொருவரின் தலையிலும் எண்ணைய் மசாஜ் செய்து கொண்டிருந்தார், செய்கூலி சேதாரமற்ற அசல் தங்கமான ரஞ்சித்.
பண்டிகை என்றால் கொண்டாட்டம் என்பது ஒரு ரொமான்டிஸ பிம்பமே. அன்றுதான் வீடுகளில் உக்கிரமான சண்டைகள் நடக்கும். பாத்ரூமில் குளிப்பதற்கு இடம் கிடைக்காதது முதல், விரதம் என்கிற பெயரில் சாப்பாடு தாமதம் ஆவது வரை மக்கள் கொலைவெறி மோடில் இருப்பார்கள். அப்படியே பிக் பாஸ் வீட்டிலும் ஒரு பஞ்சாயத்து. சுனிதாவின் குளிக்கும் பிரஷ்ஷை யாரோ பாத்ரூம் மூலையில் போட்டு விட்டார்கள் போல. ‘யாரு இதை செஞ்சது.. கண்டுபிடிக்காமல் விட மாட்டேன்’ என்று உக்கிரத்துடன் வீடெங்கும் உலவிக் கொண்டிருந்தார் சுனிதா.
தீபாவளி நாளன்றும் விடாது பஞ்சாயத்து
“யாரு செஞ்சதுன்னு பச்சையா தெரியுது’ என்று சவுந்தர்யா கிராஸ் செய்யும் போது சுனிதா ஜாடையில் சொல்லி கத்த “என்னா மச்சான்.. அவ இப்படிச் சொல்றா” என்று ஜாக்கிடம் கோபமாகி புலம்பினார் சவுண்டு. ‘நீ பண்ணலைல்ல.. விடு.. அவ அப்படித்தான்..” என்று ஜாக் சமாதானப்படுத்தினார். கத்தியதையும் கத்தி விட்டு பிறகு ஏன் சுனிதா அழுதார் என்று தெரியவில்லை. அவரை அன்ஷிதா சமாதானப்படுத்தினார்.
பெண்கள் அணிக்குச் சென்றிருக்கும் விஷால் அங்கு ஜோதியில் ஐக்கியமாகி விசுவாச உறுப்பினராக மாறியிருக்கிறார். ‘சவுந்தர்யா பர்மிஷன் கேட்காம நம்ம ஏரியாவுக்குள்ள வந்துட்டா. விடிய விடியச் செய்யற மாதிரி அவளுக்கு ஒரு டாஸ்க் தரணும்.” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி வாக்குவாதம் செய்து, மதியத்திற்கு மேல் செய்யவும் வைத்து விட்டார். ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு ஜாடியில் பந்தை சரியாகப் போட வேண்டும் என்கிற டாஸ்க். பிக் பாஸ் கூட இப்படி இம்சையான டாஸ்க்கைத் தருவாரா என்று தெரியவில்லை.
இனிமையான குரலில் தீபாவளி வாழ்த்து சொன்ன பிக் பாஸ் “இன்னிக்கு நல்ல நாள். இன்னிக்கும் வீட்ல பிரிவினை தேவையா.. நாம ஒண்ணு மண்ணா.. இருக்கலாமே?!’ என்று உருக்கமாக ஆரம்பித்து பிறகு டெரர் மோடிற்கு மாறி “அப்படில்லாம் சொல்வேன்னு நெனக்காதீங்க. இது பிக் பாஸ் வீடு. அப்படித்தான் இருக்கணும்” என்று வில்லத்தனத்தைக் காட்டினார்.
மணமாலை நிகழ்ச்சியாக மாறிய பிக் பாஸ் வீடு
‘பாஸ்.. அப்ப நாம காட்டியும் கொடுக்கறோம்’ என்கிற விவேக் காமெடி மாதிரி ஒரு விஷயம் நடந்தது. பிக் பாஸ் வீட்டில், திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்களுக்கும் பையன்களுக்கும் வரன் தேடும் ‘மணமகன்/ள் தேவை’ விளம்பரம். ‘எங்க பொண்ணு அல்லது பையனுக்கு எப்படிப்பட்ட வரன் வேண்டும்.. என்னென்ன எதிர்பார்ப்பு’ என்பதை அந்தந்த வீட்டார் சொல்ல வேண்டும். இந்த சீசனில் இன்னமும் ஏன் எந்தவொரு ‘லவ் டிராக்கும்’ இதுவரை உருவாகவில்லை என்பதற்காக பிக் பாஸ் செய்யும் ரொமான்ஸ் முயற்சியோ, என்னமோ?!
கழுத்தில் மாலையுடன் ஜாக்குலினை நடுவில் அமர வைத்து ‘இவ ஒளிஞ்சிருந்தா கூட தெரிஞ்சுடும். அந்த அளவிற்கு அமைதியா இருப்பா’ என்று அறிமுகப்படுத்தினார் ஆனந்தி. ‘ஒரு விஷயத்தை எட்டாக்கி வீட்டை பத்தாக்கி எல்லோரையும் ஓட விடற’ என்று டெரராக ஆரம்பித்து ‘அப்படிப்பட்ட குழந்தை இல்ல.. எங்க குழந்தை..’ என்று சர்காஸத்துடன் பேசினார் முத்து. அன்ஷிதாவின் முறை வரும் போது ‘மாப்பிள்ளை ரொம்ப உயரமாக இருக்கணும்’ என்றார் சுனிதா. (நம்ம மைண்ட் வேற சும்மா இருக்காது!). ‘எங்க பொண்ணுக்கு டிராவல்ன்னா ரொம்ப பிடிக்கும். அதுக்கேத்த மாப்பிள்ளை வேணும்’ என்று தர்ஷிகா குறித்து அறிமுகப்படுத்த ‘அப்படின்னா லாரி டிரைவர் ஓகேவா?” என்று நக்கலடித்தார் விஷால்.
விஷாலை மாப்பிள்ளையாக அமர வைத்து ‘நான்தானுங்க.. இவனோட தாய் மாமன்’ என்று ரஞ்சித் சொல்ல, ‘மாப்பிள்ளையை விட தாய்மாமன் க்யூட்டா இருக்காரு’ என்று கமெண்ட் அடித்தார் அன்ஷிதா. (ஓ.. இவர்தான் அந்த உயரமான மாப்பிள்ளையா?!) சவுந்தர்யா வந்த போது வீடே உற்சாகமானது. ‘எங்க பொண்ணு பல குரல்ல பேசுவா.. பேசிக் காட்றா செல்லம்’ என்று சொல்ல எம்.ஆர்.ராதாவிற்கே டஃப் பைட் தருமளவிற்கு அசத்தினார் சவுண்டு. மணமகன் கோலத்தில் முத்து அமர வைக்கப்பட்ட போது “பிறக்கும் போதே திருக்குறள் சொன்ன குழந்தைம்மா இவன். மாப்பிள்ளைக்கு திருட்டு முழி, ஆனால் அவரிடம் இருப்பது சுவையான மொழி’ என்று ரைமிங்கில் கலாய்த்தார் விஷால்.
‘அந்தப் பறவையாவது நிம்மதியா இருக்கட்டும்’ - சவுந்தர்யாவின் விரக்தி
அமரன் திரைப்படக் குழு சார்பில் அசைவ உணவு வந்திருந்தது. ‘அய் மட்டனு.. சிக்கனு.. சிவாண்ணா.. ரொம்ப நன்றிண்ணா..’ என்று மக்கள் உற்சாகமானார்கள். சிவாவின் குரல் கேட்ட போது அருண், ஜாக், சுனிதா ஆகியோர் கண்கலங்கினார்கள். டாஸ்க் செய்யச் சொல்லி தன்னை விஷால் டார்ச்சர் செய்வதை ஜாக்கிடம் பகிர்ந்த சவுந்தர்யா, ‘இதுக்கு சுனிதாதான் காரணமா இருக்கணும்.. இருக்கட்டும்… அவளுக்கு நான்தான் டாஸ்க் தருவேன்’ என்று பொரும.. ‘இவ புலம்பும் போது தடுக்கக்கூடாது. புலம்பட்டும்ன்னு விட்டுடணும்.. அதுதான் அவளுக்கு மருந்து’ என்று ஜாக் கிண்டலடிக்க வெடித்து சிரித்தார் சவுந்தர்யா. ‘அங்க பாரேன் ஒரு பறவை’ என்று ஜாக் வானத்தைக் காண்பிக்க ‘அதாவது வெளிய நிம்மதியா இருக்கட்டும். இங்க வந்தா செத்துடும்” என்று சொல்லி கசப்பான புன்னகையுடன் சிரித்தார் சவுந்தர்யா.
இரு வீட்டு அணிகளும் ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ‘பாசமான’ டாஸ்க்கை ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ். இதன் பிளான் என்னவெனில் பாசமும் கிடையாது, மண்ணாங்கட்டியும் கிடையாது. யார் யாருக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் சடங்கு. இதன் மூலம் புதிய புகைச்சல்கள் ஆரம்பிக்கும்.
ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள பெட்ஷீட், மோதிரம், கர்ச்சீப், சோப்புத்துண்டு போன்றவற்றை ‘இது என்னோட சென்ட்டிமென்ட் பொருள். ஆக்சுவலி யாருக்குமே தர மாட்டேன்.. ஆனா உனக்கு இதைத் தர விரும்புகிறேன்’ என்று பாசத்தை பாயாசம் போல வழிய விட்டார்கள். ‘தனக்கு சாப்பாடு ஊட்டி வளர்த்த’ முத்து குறித்து பேசும் போது தொடர முடியாமல் கண்கலங்கினார் சாச்சனா. விஷாலுக்கு வாசனைத் திரவியம் பரிசளித்த ரஞ்சித் செய்த காமெடிக்கு நல்ல வரவேற்பு. குறிப்பாக பெண்கள் அணி ரஞ்சித் மீது பாசமழை பொழிகிறது.
பவித்ரா - ரஞ்சித் - அப்பா மகள் சென்டிமென்ட்
பெண்களை மரியாதையாகப் பார்ப்பது எப்படின்னு ரஞ்சித் அவர்களிடம்தான் கத்துக்கணும். எங்க வீட்லயும் அப்படி நடந்திருந்தா நல்லாயிருக்கும்” என்று பவித்ரா சொன்னதில் ஒரு நெகிழ்வான உண்மை இருந்தது. ‘நான் உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் உனக்குண்ணா ஓடி வந்துருவம்மா.. பிக் பாஸ் மாதிரியே 24x7 நான் உனக்காக இருப்பேன்” என்று பவித்ரா மீது பதிலுக்கு பாசத்தைக் கொட்டினார் ரஞ்சித்.
சுனிதா மீது கொலை காண்டில் இருந்தாலும் ‘எதுக்கு பிரச்சினை?’ என்று சவுந்தர்யாவின் மனதில் ஓடியதோ எண்ணமோ. ஆனால் பரிசளிக்கும் விஷயத்தைக் கூட சொந்தமாக சிந்திக்காமல் ‘யாருக்கு தரலாம்?” என்று முன்பே ரஞ்சித்திடம் தனியாக யோசனை கேட்டார். ‘ஜாக் அல்லது சுனிதா’ என்பதாக சவுண்டின் தேர்வு இருந்தது. ஆனால், ‘சுனிதாவிற்கு கொடு” என்று ரஞ்சித் ஐடியா தர அதை சபையில் செயல்படுத்தினார்.
“சுனிதா ஒருத்தர் மேல மட்டும் அன்பு செலுத்தறாங்க. அதை வீடு முழுக்க தந்தா நல்லாயிருக்கும். முடிஞ்சா செய்யட்டும்… இல்லைன்னா நாசமாப் போகட்டும்’ என்கிற மாதிரி சவுந்தர்யா சொல்ல, ‘மத்தவங்க கிட்ட இருந்து என்ன கெடைக்குதோ.. அதைத்தான் நான் கொடுப்பேன். புரிஞ்சுதாடா…” என்று சுனிதா சொல்ல, இருவரும் சர்காஸ்டிக் அன்பை பரஸ்பரம் பொழிந்து கொண்டார்கள். இந்த வேடிக்கையைப் பார்த்து ‘ஓஹோ..’ என்று ஒட்டு மொத்த வீடும் நமட்டுச் சிரிப்புடன் ஆரவரித்தது.
இந்த டாஸ்க் முடிந்தாலும் கூட மக்கள் ஆங்காங்கே கூடி நின்று ‘இதுதான் என்னோட சென்டி மோதிரம். ஆக்சுவலி யாருக்கும் தர மாட்டேன். உனக்காக தரேன்’ என்று பாசத்தை ஓவர் டோஸில் பொழிந்து கொண்டிருந்தார்கள்.
ஜாக்குலின் பற்றி சொல்லப்பட்ட கமெண்ட்டுகள் அவரைப் புண்படுத்தியிருக்கும் போல. சவுந்தர்யாவை தனியாக அழைத்து வந்து “நாம ஒரு இடத்துக்குப் போறோம்னா. அதுக்கேத்த மாதிரி ஆயிடுவோம்.. இங்க எல்லோரும் நடிக்கறாங்க.. என்னால அப்படி முடியல மச்சான்.. என்னை சண்டைக்காரின்ற மாதிரியே பிரொஜக்ட் பண்றாங்க .. ஒரு வார்த்தை கூட நல்லதா சொல்ல மாட்றாங்க.. அதுலயும் இந்த சுனிதா என்னைக் குத்திக்கிட்டே இருக்கா” என்று ஜாக் புலம்ப, அவரைச் சமாதானப்படுத்தினார் சவுந்தர்யா.
‘பிளடி பெக்கர்’ -கவின் என்ட்ரி
‘ஆளப் போறான் தமிழன்’ என்கிற, ஏ.ஆர். ரஹ்மான் அட்டகாசமாக இசையமைத்த பாடல் ஒலித்தது. வீட்டுக்குள் நுழைந்த கவினைப் பார்த்ததும் சீசன் 3-ன் சுவையான நினைவுகள் சட்டென்று மலர்ந்தன. சாண்டி, கவின், முகேன், தர்ஷன், லொஸ்லியா என்று ஐவர் கூட்டணி பிக் பாஸ் வீட்டை காலேஜ் காம்பஸ் மாதிரி மாற்றி அடித்த லூட்டிகள்தான் எத்தனை சுவாரசியமானவை?! .. ம்.. அதுவொரு அழகிய நிலாக்காலம்.. அப்படியொரு சீசன் இனியும் வருமா என்று தெரியவில்லை!.
‘எங்க பக்கம் வாங்க..’ என்று இரண்டு வீடுகளும் கவினைப் பிடித்து இழுக்க “நான் சிவாண்ணா எபிசோடுல்லாம் பார்த்துட்டுதான் வந்திருக்கேன்’ என்று ஜாக்கிரதையாக சொன்னவர், “ஆண்கள் பக்கம் ஆட்கள் குறைவு. அவங்க பாவம்ல.. அந்தப் பக்கம் போறேன்” என்று பாய்ஸ் டீமிற்கு ஆதரவு தந்தார். கவின் கையில் கொண்டு வந்திருக்கும் ஸ்பெஷல் கிஃப்ட்டை (ஒருத்தருக்குத்தான் தருவாராம்!). ‘எங்கே வைக்கலாம்?” என்று கேட்க, அதையே சாக்காக வைத்து தங்கள் வீட்டின் பக்கம் இழுத்து விட்டார் விஷால். குடிப்பதற்காக தண்ணீர் கேட்ட கவின், ‘இதுக்கு டாஸ்க் பண்ணனுமா?’ என்று கேட்டு தலையில் சிறிய பூச்செடியை சுமந்து வந்தார். (முன்னாடியே யோசிச்சிட்டு வருவாங்க போல!).
தனக்குப் பிரியமானவர்கள் என்றால் பிக் பாஸ் குரலில் ஒருவகையான தனிப்பாசம் ஓடுவதைக் கவனித்திருக்கலாம். கவினைக் கண்டதும் பிக் பாஸிற்கும் மலரும் நினைவுகள் வந்திருக்கும் போல. ‘என்னா கவினு… நல்லாயிருக்கியா?” என்று பிரியத்துடன் விசாரிக்க “தல.. சூப்பரா இருக்கேன்.. தல.. நீங்க?” என்று கவினும் பதிலுக்கு பாசத்தைப் பொழிந்தார். ‘குருநாதா..’ என்று சாண்டி கூவுவதும் நம் மைண்ட் வாய்ஸில் வந்து போனது. “நான் போற வரைக்கும் வீடு நடுவுல இருக்கற கோட்டை அழிச்சிடலாமே. ப்ளீஸ் தல..” என்று கவின் வேண்டுகோள் வைக்க, ‘ஓகே’ என்று ஸ்பெஷல் பர்மிஷன் தந்தார் பிக் பாஸ்.
தீபாவளி நாளில், தன்னுடைய நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்தைப் பற்றிய தகவலைப் பகிர்ந்து கொண்ட கவின், பிக் பாஸ் சீசன் 8, இருபத்தைந்து நாட்களைக் கடந்திருக்கும் விஷயத்திற்காக கேக் வெட்டி கொண்டாடினார். “கவின்.. ஏதாவது பாட்டு எழுதிப் போடுங்க..” என்று நாஸ்டால்ஜியா நினைப்பில் பிக் பாஸ் ‘நேயர் விருப்பம்’ கேட்க, ‘ஓகே.. தல’ என்று சம்மதித்த கவின், ‘விதம்.. விதமா சோப்பு சீப்பு கண்ணாடி’ பாடலின் மெட்டில் வரிகளை எழுதி வீட்டாருடன் இணைந்து பாடினார்.
‘நான் எழுந்துக்கறதுக்குள்ள தீபாவளி முடிஞ்சுடும் - சவுண்டு காமெடி
நண்டு பிராண்டு ஏற்பாடு செய்திருந்த உணவு கார்டன் ஏரியாவில் காத்திருந்தது. (நண்டு வறுவல் இருக்குமா?!) பச்சை நிறத்தில் உள்ள பானத்தை ‘ம்.. செம டேஸ்ட்’ என்று உற்சாகத்துடன் குடித்தார்கள். பின்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட, ‘உங்க தீபாவளி அனுபவம் பத்தி சொல்லுங்களேன்.. இதுவரைக்கும் வீட்ல உறவுகளோட.. நண்பர்களோட கொண்டாடியிருப்பீங்க.. இந்த தீபாவளி வித்தியாசமா இருந்திருக்கும்ல” என்று ஆரம்பித்து வைத்தார் கவின்.
‘நான்லாம் தீபாவளியே கொண்டாடியதில்ல. இன்னிக்குத்தான் நல்ல சாப்பாடு சாப்பிட்டு புதுத்துணி போடறேன்..” என்று ஜெப்ரி சொன்னதில் வறுமையான குடும்பங்கள் பண்டிகையை தூர நின்று வேடிக்கை பார்க்கும் துயரம் தெரிந்தது. இப்படி ஒவ்வொருவரும் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் துயரத்தைப் பற்றி பேச, சவுந்தர்யா சொன்ன அனுபவம்தான் பாசாங்கின்றி வெளிப்படையாக இருந்தது. “நான் தூங்கி எழுந்திருக்கறதுக்குள்ள.. தீபாவளியே முடிஞ்சுடும். நைட்டு நண்பர்களோட வெளியே போவேன். பிரெண்ட்ஸை ரொம்ப மிஸ் பண்றேன்” என்று சொல்ல “அப்ப இங்க?” என்று கோர்த்து விட்டார் கவின். “இங்க ஒண்ணும் பெரிசா இல்ல. ஓகேதான்” என்று உண்மையை உரக்கச் சொன்ன சவுண்டின் நேர்மையைப் பார்த்து சபை சிரித்தது.
“எனக்கெல்லாம் தீபாவளின்னா சினிமாதான். முதல் ஷோ பார்க்க ஓடிருவேன். ஆனா இப்போ ஒவ்வொரு செலவையும் பத்தி யோசிக்க வேண்டியிருக்கு’ என்று மிடில் கிளாஸ் ஆளாக கவின் பேசியது சிறப்பு. அவர் கிளம்புவதற்கான நேரம் வர “ஒரு கிஃப்ட் தரேன்னு சொன்னீங்களே..” என்று சத்யா நினைவுப்படுத்த “ஆமாம்ல.. “ என்று அதை எடுத்து வந்த கவின் “ஆக்சுவலி.. நான் பொய் சொல்லிட்டேன்.. இது ஒருத்தருக்கானது இல்ல. உங்க எல்லோருக்கும்தான். உங்க வீடுகளில் இருந்து செய்தி வந்திருக்கு” என்று சொல்ல மக்கள் உற்சாகமாகி விட்டார்கள். அப்போதே கண்கலங்கத் துவங்கி விட்டார் அருண். ‘கவினு.. பல பணப்பெட்டிகளை சம்பாதிக்க வாழ்த்துகள்’ என்று நையாண்டியாக சொல்லி கவனிற்கு விடை தந்தார் பிக் பாஸ். (அந்த சீசனில் கவின் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார் என்பது நினைவிருக்கலாம்).
நெகிழ வைத்த உறவுகளின் கடிதங்கள்
வீடுகளில் இருந்து வந்த கடிதத்தை ஆங்காங்கே நின்று உணர்வுப்பூர்வமாக மக்கள் வாசிக்க ஆரம்பித்தார்கள். சாச்சனா, ஜெப்ரி, சுனிதா ஆகியோரால் அழுகையை அடக்க முடியவில்லை. தன் அம்மாவை நினைத்து வாய் விட்டுக் கதறிய ஜெப்ரியை மற்றவர்கள் வந்து சமாதானப்படுத்தினார்கள். ‘உள்ளே வந்து அழுங்க’ என்று பாசத்துடன் அழைத்தார் பிக் பாஸ். ‘மத்தவங்களுக்கு வந்த லெட்டரைப் படிக்கறது நாகரிகமில்லை’ என்கிற விஷயத்தை உதறி எறிந்து விட்டு ‘லெட்டரைப் படிங்க’ என்றார் பிக் பாஸ்.
‘உறவுகளின் அருமை அருகில் இருக்கும் போது தெரியாது. புரியாது. விலகியிருக்கும் போதுதான் உறைக்கும்’ என்கிற நிதர்சனம் இப்போதும் நிரூபணமாயிற்று. ஒவ்வொருவரும் நெகிழ்ச்சியுடன் கண்கலங்கி கடிதத்தை வாசித்தார்கள். “வயிறும்.. மனசும் நிறைஞ்சிருக்கும்.. போய் நல்லாத் தூங்குங்க” என்று விடை கொடுத்தார் பிக் பாஸ். “நாளைக்கு வெச்சுக்கறேன் என்னோட தீபாவளிய” என்பது அவர் சொல்லாமல் விட்ட வசனம்.