``சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் வாக்குறுதி என்ன ஆனது?'' - அண்ணாமலை கேள்வி
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க அரசிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
இது குறித்து, எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, ``தமிழகத்தில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இறுதியில் கோபாலபுரம் குடும்பம் வரை, தனியார் பள்ளிகள் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை. இந்த நிலையில், தி.மு.க-வின் தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைத்தலைவராக இருக்கும் B.T.அரசகுமார், தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும், தனது தலைமையில் ஒரு புதிய சங்கம் தொடங்குகிறார். அதன் தொடக்கவிழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் பங்கேற்கிறார்.
விழா பற்றிய செய்திக் குறிப்பு, தமிழக ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்தச் செய்திக் குறிப்பின் அடிப்படையில், தினமணி உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள், `தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் தனியார் பள்ளிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு' என்ற தலைப்பில், கடந்த 31.12.2024 அன்று செய்தி வெளியிடுகின்றன. அமைச்சர்கள் பங்கேற்கும் இது போன்ற தனியார் நிகழ்ச்சிகளில், ஊடகங்கள், தாங்கள் பெற்ற செய்திக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் வெளியிடுவது வழக்கமான ஒன்று.
எங்களுடைய கேள்விகள் என்னவென்றால், தமிழக பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 44,042 கோடி எங்குச் சென்றது? சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்ற தி.மு.க-வின் வாக்குறுதி என்ன ஆனது? அடிப்படைத் தேவைகள் எதையுமே நிறைவேற்றாமல், எதற்காக தி.மு.க அரசு ஒவ்வொரு ஆண்டும், புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...