கொலையா, தற்கொலையா? - AI முன்னாள் ஊழியர் சுசீர் பாலாஜி மரணத்தில் நடந்தது என்ன? - பகீர் பின்னணி!
'உலகில் 'AI' நிறைய சாதனைகளையும், பெரும் சாகசங்களையும் செய்யும்' என்று பதின் வயதில் கனவு கண்ட இளைஞனின் உயிரை பறித்திருக்கிறது அவர் கனவு கண்ட அதே ஏ.ஐ.
ஏ.ஐ மனிதக்குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று ஒருபுறம் புகழப்பட்டாலும், அது மனிதனின் வேலையையே பறிக்கும் என இன்னொரு புறம் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருகிறது. அந்த எச்சரிக்கை குரல்களின் ஒன்று சுசீர் பாலாஜியின் குரல்.
யார் அந்த சுசீர் பாலாஜி?
இந்தியாவை சேர்ந்த 26 வயது இளைஞர் சுசீர் பாலாஜி. 2021-ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் முடித்த இவர், கல்லூரி காலங்களில் பல புரோகிராமிங் போட்டிகளில் முக்கிய மற்றும் குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடித்துள்ளார்.
2016 - 17 ஆண்டுகளில் மென்பொருள் பொறியாளர் ஆகத்தான் பணிபுரிந்திருக்கிறார். ஆனால், 2020-ம் ஆண்டு தனது துறையை, கனவை ஏ.ஐ பக்கம் திருப்பியிருக்கிறார். அதே ஆண்டு OpenAI நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைக்க, அதில் உற்சாகமாக சேர்ந்துள்ளார். அந்த நிறுவனத்தின் பெரும் திட்டங்களான ChatGPT, GPT-4 போன்றவற்றில் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறார்.
பிரச்னை எப்போது ஆரம்பமானது?
ஏ.ஐ நிறுவனத்தில் சேர்ந்து, ஏ.ஐ ஆழமாக புரிய புரிய, அந்த நிறுவனங்களின் மோசடிகள் சுசீர் பாலாஜிக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியிருக்கிறது. அவற்றைக் குறித்து நிறுவனத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், நிறுவனத்தின் பதில் எதுவும் திருப்திகரமாக இல்லாமல் போக, சுசீர் பாலாஜி கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
குற்றச்சாட்டுகள்...
வேலையை ராஜினாமா செய்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, அதாவது கடந்த அக்டோபர் மாதம், அமெரிக்கா செய்தித்தாளான 'தி நியூயார்க் டைம்ஸ்'க்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் பேசியதாவது, "ஏ.ஐ உருவாக்கும் கன்டென்ட் எதுவும் அதனுடையது அல்ல. இணையத்தில் இருக்கும் தகவல்களை கொஞ்சம் மாற்றி ஏ.ஐ தருகிறது. இது பதிப்புரிமை சட்டத்திற்கு எதிரானது.
இந்த பதிப்புரிமை மீறல்களால் இந்த சட்டம் மனிதக்குலத்திற்கு நன்மையை விட, அதிக தீமையை தான் கொண்டுவரும்" என்று கூறியிருந்தார்.
2022-ம் ஆண்டு ஏ.ஐ அறிமுகமானதில் இருந்து இப்போது வரை, அது பிறரது கன்டென்டுகளை திருடுகிறது என்றும், ஏ.ஐ பதிப்புரிமையை மீறுகிறது என்றும் அதன் மீது ஏகப்பட்ட குற்றசாட்டுகள் எழுவது யாராலும் மறுக்கமுடியாது.
இந்தக் குற்றச்சாட்டுகள் மேலே கூறியிருப்பது போல முன்னரே எழுந்தாலும், அதை ஏ.ஐ-யில் பணிபுரிந்த சுசீர் பாலாஜியே அழுத்தமாக கூறியபோது, அது இன்னமும் வலுவடைந்தது.
இதனால், சுசீர் பாலாஜிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல்கள் எழுந்தன. ஆதரவு குரல்களும் எழுந்தன என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால், அவருக்கு கிடைத்த ஆதரவுகளை விட, மிரட்டல்கள் மிகவும் பலமான மற்றும் சக்திவாய்ந்த இடங்களில் இருந்து வந்தன.
போன் வரவில்லையே...
மிரட்டல்கள் ஏகப்பட்டது வந்தாலும், சுசீர் பாலாஜி ராஜினாமாவிற்கு பிறகான தனது வேலைகளில் நன்றாகவே இயங்கி வந்துள்ளார். ஆனால், நவம்பர் மாதம் கடைசியில், சுசீர் பாலாஜியிடம் இருந்து காலிபோர்னியாவில் இருக்கும் அவரது பெற்றோர்களுக்கு போன்கால், மெசேஜ்கள் எதுவும் வராமல் போகவே, அவரது பெற்றோர்களுக்கு சந்தேகப்பொறி தட்டியுள்ளது.
இதையடுத்து, அவர்கள் புகார் அளித்திருக்கின்றனர். அதை விசாரிக்க போலீசார் சென்றப்போது தான், சுசீர் பாலாஜியின் சான் பிரான்சிஸ்கோ அப்பார்ட்மெண்டில் அவரது உடல் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலகெங்கிலும் சுசீர் பாலாஜியின் மரணம் வெட்ட வெளிச்சமானது டிசம்பர் 13-ம் தேதி தான். அதன் பின் நடந்த விசாரணையில் 'சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார்' என்று வழக்கை முடித்துவிட்டது காவல்துறை.
தற்கொலை இல்லை!
சமீபத்தில் 'சுசீர் பாலாஜியின் மரணம் தற்கொலை இல்லை...கொலை' என்று அவரது அம்மா குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கில் எஃப்.பி.ஐ அமைப்பின் விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுக்குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள சுசீர் பாலாஜியின் அம்மா பூர்ணிமா, "என் மகன் தற்கொலை செய்துகொள்ளும் ஆள் கிடையாது. இந்தக் குற்றச்சாட்டுகள், பிரச்னைகள் எல்லாம் ஒருபக்கம் போய்கொண்டிருந்தாலும், அவன் மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தான்.
தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட, தனது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கட்டலினா தீவிற்கு சென்றிருந்தான்.
ஆராய்ச்சியில் இருக்கிறேன்...
இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, 'ஏ.ஐ மோசடிகள் குறித்து ஆராய்ச்சி செய்துவருகிறேன். அது முழுமடைந்த பிறகு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன். இதுக்குறித்து சில செய்தி நிறுவனங்களுடனும் நேர்காணல்களை ஏற்பாடு செய்துள்ளேன்' என்று கூறினான்.
இரண்டாவது முறையாக செய்த சுசீர் பாலாஜியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், சுசீர் பாலாஜியின் தலையில் அவர் தன்னை காப்பாற்றுவதற்காக போராடிய அறிகுறிகள் தெரிகிறது.
சுசீர் பாலாஜி இறந்த இரண்டு நாள்களில் அவரது மொபைல் உள்ளிட்ட சாதனங்களை யாரோ இயக்கியிருக்கிறார்கள். மேலும், அவரது அப்பார்ட்மெண்டில் பல பொருள்கள் கலைத்து போடப்பட்டுள்ளன. பாத்ரூமில் ரத்தத்துளிகள் தெறித்துள்ளது.
என் மகன் கொல்லப்பட்டிருக்கிறான். ஆனால், அது போலீசாரால் மறைக்கப்படுகிறது. அதனால், எஃப்.பி.ஐ விசாரணை வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
தனி ஆளாக முடியாது!
'எங்களால் தனி ஆளாக உண்மையை கண்டுபிடிக்க முடியாது. எதாவது பெரிய ஆளின் துணை வேண்டும்' என்பது சுசீர் பாலாஜி பெற்றோரின் கூற்றாக உள்ளது. இதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, சுசீர் பாலாஜியின் அம்மா பூர்ணிமா தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமாசாமியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அதில், "தனியார் இன்வெஸ்டிகேட்டர் ஒருவரை சுசீர் பாலாஜி மாரணத்தை விசாரிக்க நியமித்துள்ளோம். இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்துள்ளோம். அது போலீசார் கூறிய காரணத்துடன் ஒத்துப்போகவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "இது தற்கொலை போல தெரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
அதன் பின்பான எக்ஸ் பக்கப் பதிவுகளில், அமெரிக்க மீடியாக்கள் அவர் கொடுத்த நேர்காணல்களை ஒளிபரப்பவில்லை என்று பூர்ணிமா குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய உலகத்தில் அரசு எவ்வளவு பலமாக உள்ளதோ, அதே அளவிற்கான பலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களும் கொண்டுள்ளது. அப்படியான கார்ப்பரேட் உலகை எதிர்த்து போராடிய சுசீர் பாலாஜியின் மரணம் 'கொலையா, தற்கொலையா?' என்ற கேள்விக்கு உண்மை வெளிவருமா? அல்லது ஊமையாகவே உறங்கிவிடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.