போபால் நச்சுக் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு: பீதம்பூரில் ஆலை மீது கல்வீச்சு
ரோஹித் சர்மாவுக்கும் கௌதம் கம்பீருக்கும் என்ன பிரச்னை? இந்திய அணியில் என்ன நடக்கிறது?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 3) தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணிக்குள் நடக்கும் நிகழ்வுகள் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கிய போதிலும், அதன் பின் நடைபெற்ற போட்டிகள் இந்திய அணிக்கு சாதகாக அமையவில்லை. பெர்த் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஃபார்ம், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, கௌதம் கம்பீரின் அணுகுமுறை ஆகியன சிட்னி போட்டிக்கு முன்பாக கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இவை அனைத்துமே மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த தோல்விக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான இந்திய அணியின் வாய்ப்பு குறைந்துவிட்டது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் கேப்டன்சி முடிவுக்கு வருகிறதா? சிட்னி டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனா?
கௌதம் கம்பீருக்கும் ரோஹித் சர்மாவுக்கும் பிரச்னையா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்குள் நடக்கும் நிகழ்வுகள் பல்வேறு கேள்விகளை எழச் செய்கிறது.
சிட்னி மைதானத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அணியின் துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர்களுடன் இணைந்த ரோஹித் சர்மா அதிகமாக பேசவில்லை. குறிப்பாக, கௌதம் கம்பீருடன் அவர் பேசவில்லை.
பொதுவாக போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாளில் அணியின் கேப்டன் பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால், சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ரோஹித் சர்மா பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. மாறாக, கௌதம் கம்பீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். நாளை நடைபெறும் போட்டியில் ரோஹித் சர்மா அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு கௌதம் கம்பீர் பதிலளிக்க மறுத்துள்ளார்.
இதையும் படிக்க: இந்திய அணிக்குள் எந்த ஒரு பிளவும் இல்லை; கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பேட்டி!
ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மீதான அதிருப்தியின் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கும் முடிவுக்கு தலைமைப் பயிற்சியாளர் வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ரோஹித் சர்மா தாமாக முன்வந்து சிட்னி போட்டியில் விளையாடப் போவதில்லை என முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கான விடை நாளை போட்டியின்போது தெரிந்துவிடும்.
இந்திய அணியில் என்ன நடக்கிறது?
கௌதம் கம்பீர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இடையேயான உரையாடல் முடிவடைந்த பிறகு, இந்திய அணியின் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய அணியில் மற்ற வீரர்கள் அனைவரும் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்ட நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா நீண்ட நேரமாக வலைப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு வரவில்லை. ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்க, ரோஹித் சர்மா, பும்ரா இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் ஆச்சரியமில்லை: முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்
35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது கிட் பேக் இல்லாமல் ரோஹித் சர்மா வலைப்பயிற்சிக்கு வந்தார். அப்போதும் ரோஹித் சர்மாவும் கௌதம் கம்பீரும் பேசிக் கொள்ளவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது பயிற்சியை முடித்த பிறகு, ரோஹித் சர்மா அரை மணி நேரம் மட்டும் பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சியின்போது, ரோஹித் சர்மா டைமிங் மிஸ் செய்து பந்துகளை எதிர்கொண்டார்.
சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவார் எனக் கூறப்படுகிறது. பும்ரா தலைமையிலான இந்திய அணி பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.