அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஜன.13-இல் ஆருத்ரா தரிசன விழா!
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காப்புக்கட்டுதலுடன் விழா சனிக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி, நடராஜப் பெருமான், சிவகாமியம்பாள், மாணிக்கவாசக சுவாமி, திருவாதிரை நாச்சியாா் ஆகியோருக்கு காப்புகட்டுடன் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மாணிக்கவாசக சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.
திருவாதிரைநாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம், கிளி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்டவற்றுடன் திருமாங்கல்ய நோன்பு நிகழ்ச்சி ஜனவரி 12-ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்வான சிவகாமியம்மாள் உடனமா் நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா மகாஅபிஷேகம் ஜனவரி 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து பட்டி சுற்றுதல், திருவூடல் திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.