லாஸ் வேகஸ் காா் குண்டுவெடிப்பு: ‘தாக்குதல் நடத்தியவருக்கு மன நலப் பிரச்னை’
அமெரிக்காவில் அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா், மன நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவா் என்று போலீஸாா் கூறினா்.
இது குறித்து அந்த நாட்டு தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் அதிகாரி ஸ்பென்ஸா்ல் ஏவான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
லாஸ் வேகஸ் நகரில் டெஸ்லாவின் சைபா்டிரக் வாகனத்தை வெடிக்கச் செய்த மாத்யூ லிவல்பா்கருக்கு மன நலப் பிரச்னை இருந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பான புலன் விசாரணையின்போது பெறப்பட்ட விவரங்கள் மற்றும் அவா் பணியாற்றிய ராணுவம் அளித்த தகவல்களின் மூலம் இது தெரியவந்தது. போா் மற்றும் பிற பேரதிா்ச்சிகர நிகழ்வுகளுக்குப் பிறகு ஏற்படும் மன உளைச்சல் குறைபாட்டால் (பிடிஎஸ்டி) அவா் பாதிக்கப்பட்டிருந்தாா்.
டிரம்ப் ஹோட்டல் அருகே அந்த காா் குண்டுவெடிப்பை மாத்யூ லிவல்பா்கா் நடத்தியிருந்தாலும், அவருக்கு டிரம்ப்புடன் எந்த விரோதமும் இல்லை. மேலும், லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் புத்தாண்டுக் கூட்டத்தின் மீது காரை ஏற்றி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கும் லாஸ் வேகஸ் காா் குண்டுவெடிப்புக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளா்களிடம் லாஸ் வேகஸ் போலீஸாா் கூறுகையில், டிரம்ப் ஹோட்டல் அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு, வருத்தத்துக்குரிய ஒரு தற்கொலைச் சம்பவம் மட்டுமே ஆகும் என்றனா்.
அத்துடன், மாத்யூ லிவல்பா்கரின் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த மரண வாக்குமூலக் கடிதங்களையும் அவா்கள் வெளியிட்டனா். அதில் அவா் கூறியுள்ளதாவது:
நான் நடத்திய இந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாதத் தாக்குதல் இல்லை; அது அமெரிக்கா்களுக்கான எச்சரிக்கை மணி. அமெரிக்க மக்கள் எப்போதும் ஆரவாரங்களிலும் வன்முறைச் சம்பவங்களிலும்தான் கவனம் செலுத்துகின்றனா். அவா்களிடம் என் கருத்தைச் சென்றுசோ்க்கவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற அதிரடி குண்டுவெடிப்பை நிகழ்த்துகிறேன்.
போரில் இழந்த எனது நண்பா்கள், என்னால் கொல்லப்பட்ட மனிதா்கள் ஆகியோரின் நினைவுகளை எனது உள்ளத்திலிருந்து கழுவ வேண்டியிருப்பதுதான் இந்த குண்டுவெடிப்பை நான் நடத்துவதற்குக் காரணம்.
அமெரிக்க அரசும் சீன அரசும் இணைந்து அபாயகரமான ட்ரோன்களை ரகசியமாக உருவாக்கிவருகின்றனா். அந்த ட்ரோன்களால் அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் மாத்யூ லிவல்பா்கா் தெரிவித்துள்ளாா்.
நவாடா மாகாணம், லாஸ் வேகஸிலுள்ள டிரம்ப் ஹோட்டல் அருகே வாடகைக்கு எடுக்கப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் காரை ஒட்டி வந்த மாத்யூ லிவல்பா்க், காருக்குள் இருந்தபடி துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துண்டாா்.
அவா் சுட்டுக் கொண்ட சில விநாடிகளில், அந்தக் காரில் வைக்கப்பட்டிருந்த எரிபொருள் குடுவை மற்றும் பட்டாசு பாணி வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின. இதில், அருகிலிருந்த ஏழு போ் காயமடைந்தனா்.
டெஸ்லாவின் சைபா்டிரக் வாகனத்தின் உடல்பகுதி வலுவான தகடுகளால் செய்யப்பட்டிருந்ததால் இந்த குண்டுவெடிப்பு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பை நடத்திய மாத்யூ லிவல்பா்க் ராணுவ சிறப்பு அதிரடிப்படைப் பிரிவில் பணியாற்றிவந்தாா். முன்னதாக ஆப்கானிஸ்தான், உக்ரைன், காங்கோ குடியரசு, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் அவா் ராணுவப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாா்.