மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
கனடா பிரதமர் விரைவில் ராஜிநாமா?
ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது ராஜிநாமா முடிவை நாளை மறுநாள் புதன்கிழமை (ஜன. 8) அறிவிப்பார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவது குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
கனடாவில் ஆளுங்கட்சியான ‘லிபரல் கட்சி’ தலைமைப் பொறுப்பிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. கனடாவில் தற்போதைய அரசியல் சூழலில், எதிர்வரும் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைச் சந்திக்கும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. எதிர்க்கட்சியான ‘கன்சர்வேட்டிவ் கட்சி’ ஆட்சியைப் பிடிக்கும் என்பதே அங்குள்ள கள நிலவரமாக உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ட்ரூடோ கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவது ஆளுங்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
லிபரல் கட்சியின் உயர்நிலைக் குழு வரும் புதன்கிழமை(ஜன. 8) கூடி, அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன், அவர் ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து, கனடா பிரதமர் அலுவலகம் தரப்பிலிருந்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ஜஸ்டின் ட்ரூடோ மீது உள்கட்சியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. ட்ரூடோ பதவி விலக வேண்டுமென்பதை அக்கட்சி எம்.பி.க்கள் பலர், பொதுவெளியில் வலியுறுத்தியிருந்ததும் அண்மைக் காலங்களில் நடந்தது.
ஒருவேளை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தாலும், லிபரல் கட்சிக்கு அடுத்ததாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராகாவே ட்ரூடோ நீடிப்பாரா? அல்லது அரசுப் பொறுப்புகளைத் துறப்பாரா? என்ற சந்தேகமும் நிலவுகிறது.
இதனிடையே, இடைக்கால பிரதமராக கனடா நிதியமைச்சர் டோமினிக் லேபிளங்க் பொறுப்பேற்றுக்கொள்வது குறித்தும் அவருடன் ட்ரூடோ ஆலோசனை நடத்தியதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், லிபரல் கட்சி தலைமைப் பொறுப்புக்கு லேபிளங்க் போட்டியிடுவார் என்பதால், அவர் இடைக்கால பிரதமராக எப்படிச் செயல்பட முடியுமென அக்கட்சியைச் சேர்ந்தோர் கேள்வியெழுப்புகின்றனர்.