கனடா: பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!
ஒட்டாவா: ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா முடிவை நாளை மறுநாள் புதன்கிழமை (ஜன. 8) அறிவிப்பார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக இன்று(ஜன. 6) அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ இன்று(ஜன. 6) செய்தியாளர்களுடன் பேசியதாவது, லிபரல் கட்சிக்கு அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், தான் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் விலகப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை தான் நேற்றே(ஜன. 5) எடுத்துவிட்டதாகவும், மார்ச் 24 வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லிபரல் கட்சித் தலைவரிடம் ஏற்கெனவே தெரிவித்து விட்டதாகவும், ஆகவே அடுத்தக்கட்டமாக கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, அடுத்த தேர்தலில், பிரதமர் பதவிக்கு தான் பொருத்தமான நபராக இருக்க மாட்டேன் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டுவிட்டதாகவும் பேசியுள்ளார்.