மேகமலை நெடுஞ்சாலையில் 2 -ஆவது சோதனைச் சாவடி
தேனி மாவட்டம், மேகமலை மலைக் கிராமங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் வனத் துறை மூலம் 2 -ஆவது சோதனைச் சாவடி அமைக்கும் பணிக்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், இந்தப் பணியை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மேகமலை, மணலாறு ,மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் என 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களை இணைக்கும் வகையில் சின்னமனூரிலிருந்து 52 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலை உள்ளது.
இதில் தென்பழனி மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் வனத் துறை சாா்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இந்தச் சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.
இந்தச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டதற்கு அங்குள்ள மலைக்கிராமத்தை சோ்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், ஹைவேவிஸ் - மேகமலை இடையே பூ மாரியம்மன் கோயில் அருகே வனத் துறை சாா்பில், 2-ஆவது சோதனைச் சாவடி அமைக்க பள்ளம் தோண்டி கட்டுமானப் பொருள்களைக் குவித்து பணியைத் தொடங்கினா்.
இதுகுறித்து தேயிலைத் தோட்டத்தொழிலாளா்கள் கூறியதாவது: சின்னமனூா்- இரவங்லாறு செல்லும் ஒரே சாலையில் 2 -ஆவது சோதனைச் சாவடி தேவையில்லை. இதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.