BB Tamil 8 Day 45: `இதுக்கு லவ்வே பரவாயில்ல பாஸ்' - களேபரமான ராஜா ராணி டாஸ்க்
இந்த வார வீக்லி டாஸ்க்கான ‘BB தர்பார்’, ‘பாகுபலி’ திரைப்படம் போல கம்பீரமாகவும் பரபரப்பாகவும் அமையும் என்று பார்த்தால் பாகுபலி தலைவலியாக மாறியதுதான் மிச்சம்.
ராஜா - ராணி டாஸ்க்கையும் வழக்கம் போல் சுமாராகவே கையாண்டு போட்டியாளர்கள் வெறுப்பேற்றினார்கள். ஆங்காங்கே தென்பட்ட சில சுவாரசியங்களைத் தவிர பெரிதாக ஒன்றுமில்லை. ‘இந்த நாடும் மக்களும் நாசமாகப் போகட்டும்’ என்கிற வசனம் மாதிரிதான் இருந்தது.
பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது? - நாள் 45
‘பொன்னி நதி பார்க்கணுமே.. தீயாரி எசமாரி’ என்று பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து பாடலை ஒலிக்க விட்டு ராஜா - ராணி டாஸ்க்கை வார்ம்-அப் செய்தார் பிக் பாஸ். கல்லில் கோலம் போட்டு வர்ஷினி சிற்பியாக செதுக்கிக் கொண்டிருந்தார்.
‘யாரை ஒற்றனாகப் போடுவது?’ என்கிற விவாதம் பெண்கள் அணியில் நடந்தது. முத்துவைப் போடலாமா?’ என்று ஆரம்பித்து “வேண்டாம். அவன் அதிபுத்திசாலி... டபுள் கேம் ஆடி விடுவான்” என்று சிவக்குமாரை ஒற்றனாக நியமித்தார்கள். ஆனால் ‘மண்டையை மறைத்துக் கொண்டையை மறைக்காமல் அவர் சொதப்பப் போகிறார்’ என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
வாழ்த்தொலிகள் முழங்க, எக்காளம் ஒலிக்க ‘கோமகள் கோட்டை’யின் அரசியான சாச்சம்மா தேவியின் சபை விஜயம் நடந்தது. அரசி ஒப்பனையில் சாச்சனா எத்தனை கம்பீரமாக வந்தாலும் ‘யாருப்பா.. இந்தப் பொண்ணு.. எந்த ஸ்கூல்ல நடக்கற ஃபேன்ஸி டிரஸ் காம்படிஷன்?’ என்றுதான் கேட்கத் தோன்றியது.
அந்தப் பக்கம் ராஜாவாக ராணவ். ‘அரிமா தேசத்தின் மகாராஜா ‘வீர ராணவ கேசரி.. பராக்.. பராக்..’ என்று காக்காய்க்கு சோறு வைத்து சாப்பிடக் கூப்பிடுவது போலவே கத்திக் கொண்டிருந்தார் ஜெப்ரி. ராணவ்வின் உயரத்திற்கும் எடைக்கும் ராஜா வேடம் பொருத்தமாக இருந்தாலும் அவருடைய லுக்தான் ரொம்பவும் டம்மியாக இருந்தது.
‘அருணாச்சலம்’ வடிவுக்கரசி கெட்டப்பில் பவித்ரா
கரகரப்ரியா ராகத்தில் ராணிக்கு வாழ்த்தொலி சொன்னார் சவுந்தர்யா. ராணியின் ராஜகுருவாக பவித்ரா. ‘அருணாச்சலம்’ படத்தின் வடிவுக்கரசி பாத்திரம்தான் இன்ஸ்பிரேஷன் போல. எனவே கிழவி கெட்டப்பில் முதுகை வளைத்தபடியே அவர் வர “பாட்டி. கீழே ரொம்ப நேரமாக என்ன தேடுகிறீர்கள்?” என்று கலாய்த்துக் கொண்டிருந்தார் ஜெப்ரி.
ராஜாவை வாழ்த்தி ‘ராப் சாங்’ பாணியில் பாடி கலவரமூட்டினார் ஜெப்ரி. அரசரை வாழ்த்தி வணங்கும் போது விஷாலுக்கு சிரிப்பு வந்து விட்டது. தாங்க முடியாமல் வாய் விட்டு சிரித்து விட்டார். ‘எனது வாக்கே நீதி.. அதுவே நியதி’ என்று ரைமிங்கில் வசனம் பேசிக் கொண்டிருந்தார் சாச்சனா. ‘எனது கட்டளையே சாசனம்’ வசனம் மாதிரி இது கெத்தாக இருக்கும் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. (எழுதித் தந்தவர் மஞ்சரியாக இருக்கலாம்!).
அநாதைப் பெண்ணாக அன்ஷிதா வந்து ‘கோமகள் கோட்டை’யில் அடைக்கலம் கேட்க, பரிசோதனைக்குப் பின்பு அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஒருபக்கம் ஸ்வீல்லெஸ் அணிவது அந்தக் காலத்தின் ஃபேஷன் உடை போலிருக்கிறது. அன்ஷிதா அணிந்திருந்த ஜாக்கெட் அப்படித்தான் இருந்தது. ராணிக்கான உணவை பரிசோதித்த பின்பு சாப்பிடத் தந்தார் தளபதி மஞ்சரி. ஆனால் டேஸ்ட் செய்த அதே தட்டைத் தருவது அவமரியாதை அல்லவா? இதே பாணியிலான மரியாதைதான் ராஜாவின் இடத்திலும் நடந்தது. தளபதி தீபக் நக்கிப் பார்த்து தந்த உணவைதான் ராஜா வாங்கி சாப்பிட்டார்.
அன்ஷிதாவைத் தொடர்ந்து வர்ஷினியும் அநாதைப் பெண்ணாக ‘கோமகள் கோட்டை’யில் அடைக்கலம் தேடி வந்தார். அந்த நாட்டை அநாதைகள் முகாமாக மாற்றி விடுவார்கள் போலிருக்கிறது. ‘இவள் உளவாளியாக இருக்கலாம்’ என்று சந்தேகப்பட்ட தளபதி மஞ்சரி, எல்லைக்கோடருகே காத்திருக்கச் சொன்னார்.
அந்தப்புரத்தில் அத்துமீறி நுழைந்த முத்துக்குமரன்
இந்தப் பக்கம், ராஜாவின் ஏரியாவில் ஒரு காதல் கலவரம். தனது காதலி ஆனந்தியோடு அடைக்கலம் தேடி வந்திருக்கிறார் அருண். (இந்தாளு இதே வேலையா இருப்பாரா?!). கமல், விக்ரம், சூர்யாவின் வரிசையில் இனி ரஞ்சித்தையும் சொல்லலாம். தனது ஒப்பனைக்காக மிகவும் சிரத்தை எடுத்து ஏதோ செய்திருந்தார். முகத்தில் கருப்பாக ஏதோ கறைகள் தெரிந்தன. வித்தியாசம் என்று நினைத்து அவர் செய்திருந்தாலும் தீபாவளி பட்டாசு முகத்தில் பட்டுவிட்டதோ என்று நமக்குத்தான் பதட்டமாக இருந்தது.
ராணியின் அந்தப்புரத்தின் வழியாக இந்தப்புறம் ஓடி வந்து மாட்டிக் கொண்டார் முத்து. அவர்தான் உளவாளி என்று எதிரிகள் குழம்பட்டும் என்பதற்கான ஏற்பாடு போல. ஒரு கட்டத்தில் கேர்ல்ஸ் டீம் படுக்கையறையில் போய் ஒளிந்து கொண்டார். ‘நைசாக ஓடி விடு” என்று ஐடியா கொடுத்தார், ஒற்றர் ஜாக்குலின்.
அந்தப்புரத்திற்குள் அத்துமீறி நுழைந்த அயோக்கியனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று தளபதிகள் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள். “அவனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று தீபக் சொல்ல “நல்ல நாடு.. தங்களின் குடிமகனையே காப்பாற்றத் தெரியாத தேசம்” என்று மஞ்சரி நக்கலடிக்க “ஹலோ.. அவரை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் யோசித்து விட்டு சொல்கிறோம்” என்று சமாளித்தார் தீபக். ஒரு ப்ளோவில் ‘ஆல்ரெடி’ என்கிற ஆங்கில வார்த்தையை விட்டு விட்டார் தீபக். அவர் மட்டுமல்ல பலரும் சமகால ப்ளோவில் சறுக்கினார்கள்.
எல்லையைத் தாண்டி வந்த பணியாள் ஜெப்ரிக்கு நூறு தோப்புக் கரணம் தந்து கடுமையான தண்டனையைத் தந்தார் சாச்சம்மா தேவி. இதை ராஜகுரு பவித்ரா மேற்பார்வை செய்தார்.
களிமண்ணைக் கொண்டு கலைச் சிற்பங்கள்
‘மக்களுக்கான வேலை வாய்ப்பு’ என்கிற தலைப்பில் ஒரு டாஸ்க்கை தந்தார் பிக் பாஸ். களிமண்ணைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்ய வேண்டும். யார் சிறப்பாகச் செய்வது என்பதைப் பொறுத்து சுற்றுகளின் வெற்றி அமையும். இந்தப் பணியை மக்கள் மேற்கொள்ள வேண்டும். “ராணியின் பக்கம் ஐந்து மக்கள் இருக்கிறார்களே?’ என்கிற கேள்வியை சாச்சனா எழுப்ப “டவுட்டு வந்தா நீங்கதான் அதுக்கு விடை கண்டுபிடிக்கணும். எத்தனை முறை சொல்வது” என்று சலித்துக் கொண்டார் பிக் பாஸ்.
வைக்கப்பட்டிருக்கும் களிமண்ணை அள்ளி வருவதற்காக இரு அணிகளும் போட்டி போட்டன. பலசாலிகளான சத்யாவும் சிவக்குமாரும் ஓடி ஓடி களிமண்ணை அள்ளி வந்தார்கள். தன்னைக் கலாய்த்துக் கொண்டிருந்த ஜெப்ரியிடம் “இவனிடம் பிராணன் போகிறது” என்று சொல்வதற்குப் பதிலாக “பிராணி போகிறது” என்று தவறாக டயலாக் பேசி காமெடி செய்தார் ராஜகுரு பவித்ரா.
ராணியின் பிரஜைகள் செய்து கொண்டிருந்த பொம்மைகளைப் பார்த்து கிண்டல் செய்து கொண்டிருந்தார் அருண். ‘இதுதான் பாம்பா…?’ என்று அவர் எடுத்துக் காட்ட பெண்களுக்கே சிரிப்பு தாங்கவில்லை. அந்த லட்சணத்தில் விநோதமான வடிவில் இருந்தது பாம்பு. அன்ஷிதா கஷ்டப்பட்டு செய்து உருவாக்கித் தந்த ஒரு கலைப்பொருளை, வர்ஷினி அலட்சியமாக வாங்கி தூக்கிப் போட அன்ஷிதாவிற்கு கோபம் வந்து ‘இல்லா.. இல்லா..’ என்று ரிப்பீட் மோடில் கத்த ஆரம்பித்து பிறகு தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டார்.
திருட்டுக்கொட்டு ராஜாவின் அணியினர், பக்கத்து நாட்டின் குச்சியை.. மன்னிக்கவும் செங்கோலை எப்படியோ சுட்டு விட்டனர். இதைத் தாமதமாக அறிந்த சாச்சம்மா தேவி பதறிப்போக, அதை மீட்டெடுப்பதற்காக ஆண்கள் அறைக்குள் பதுங்கி பதுங்கிச் சென்றார் தளபதி மஞ்சரி. தங்களின் ஏரியாவில் சிவப்பு ஆடை அணிந்திருந்த ஒரு உருவம் பதுங்கி வருவதைக் கவனித்து விட்ட ராஜா, அது குறித்து எச்சரிக்கை செய்ய தீபக் பாய்ந்து சென்று மஞ்சரிக்கு தண்டனை தர முயற்சித்தார்.
செங்கோலா.. குச்சியா? - சவுந்தர்யா கன்ப்யூஷன்
ஆனால் மஞ்சரியோ.. ‘எனது அணிகலன் விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக குனிந்தேன். அவ்வளவுதான்’ என்று அண்டப்புளுகு சொல்ல தீபக் ஏற்கவில்லை. ‘நான்தான் அத்துமீறி நுழைந்தேன். எனக்கு தண்டனை கொடுங்கள்” என்று தங்களின் தளபதியைக் காப்பாற்ற முன்வந்தார் பணியாள் தர்ஷிகா. “நான் இந்த வார கேப்டன். எல்லை மீறி வருவதற்கு எனக்கு உரிமையுண்டு” என்பதை மறைமுகமாக உணர்த்த முயன்றார் மஞ்சரி.
“திருட்டு வேலை செய்வதே பக்கத்து நாட்டுக்கு பழக்கமாகி வி்ட்டது” என்று தீபக் அவதூறாகப் பேச இரு நாட்டாருக்கும் முட்டிக் கொண்டது. “நீதான் களவாணி. மொள்ளமாறி.. முடிச்சவிக்கி’ என்று செந்தமிழில் திட்டிக் கொண்டார்கள். ராஜகுரு ரயான் உரத்த குரலில் கத்த, அதற்கு சவால் விட்டுக் கொண்டிருந்தார் மஞ்சரி.
‘எங்கள் நாட்டில் வீரம் இல்லை, தைரியம் இல்லை’ என்று சொல்ல வேண்டும்’ என்று தர்ஷிகாவிற்கு டாஸ்க் தந்தார் தீபக். ‘எங்கள் நாட்டைப் பற்றி தவறாக பேச மாட்டேன்” என்று விசுவாசமான பிரஜையாக அதை மறுத்தார் தர்ஷிகா.
தளபதி மஞ்சரியே எல்லை மீற முயன்று தோற்றுப் போனாலும் ‘நானும் செல்வேன்’ என்று அடம்பிடித்து சாகசம் செய்ய முயன்றார் சவுந்தர்யா. தனது பிரத்யேகமான முழியுடன் அவர் பதுங்கி பதுங்கி ஆண்கள் அறைக்குச் செல்ல “உன் முழியைப் பார்த்தாலே சந்தேக கேஸ்ல கேள்வி கேக்காம அரஸ்ட் பண்ணிடலாம்” என்பது போல அவரைக் கண்டுபிடித்த ஜெப்ரி கைது செய்து அழைத்துச் சென்றார்.
‘ராணவ கேசரியே சிறந்த அரசன். அரிமா தேசமே சிறந்த தேசம். இந்த நாட்டின் ராஜாவை நான் தலை வணங்குகிறேன்’ என்று சொல்வதுதான் சந்தேக கேஸில் மாட்டிய சவுந்தர்யாவிற்கு அளிக்கப்பட்ட தண்டனை. “மற்றதெல்லாம் ஓகே. ஆனால் நான் ராணிக்கு மட்டுமே தலை வணங்குவேன்’ என்று சவுந்தர்யாவும் விசுவாசமான பிரஜையாக இருந்தார்.
நாமினேஷன் ஃப்ரீ பாஸில் ஆண்கள் அணி வெற்றி
ராஜா ராணியை அப்படியே நிறுத்திய பிக் பாஸ், நாமினேஷன் ஃப்ரீ பாஸின் இரண்டாவது சுற்றை ஆரம்பித்தார். “மேப்பு.. வெச்சிட்டியே ஆப்பு’ என்பது அதன் தலைப்பு. உலக வரைபடத்தில் நாடுகளின் பெயர்களை சரியாகக் கண்டுபிடித்து ஒட்ட வேண்டும். ஆண்கள் அணியில் இருந்து தீபக்கும் அருணும் சென்றார்கள். பெண்கள் அணியில் மஞ்சரியும் வர்ஷினியும். இந்த டாஸ்க்கில் ஆண்கள் அணி வெற்றி. எனவே நாமினேஷன் பாஸ் அவர்களுக்கே. இதில் பெண்கள் அணி தோற்றதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கலாம். எந்தச் சூழலிலும் தங்களின் நாட்டை காட்டித் தராத விசுவாசிகளாக அவர்கள் இருக்கிறார்கள் போல.
பாஸை வைத்து யாரைக் காப்பாற்றுவது? ஆண்கள் அணியில் அமைதியாக கூடிப் பேசி சிவக்குமாரைக் காப்பாற்றுவது என்று முடிவு செய்தார்கள். நாமினேஷன் ஃப்ரீ பாஸிற்கு ‘நியமன விடுதலைப் பத்திரம்’ என்று சுவாரசியமாக மொழி பெயர்த்தார் பிக் பாஸ்.
‘அரியணையைக் கைப்பற்றுவதான’ போட்டியில் ஆண்கள் அணி முதல் படியில் வென்றிருப்பதாக அறிவித்தார் பிக் பாஸ். அது என்ன கணக்கு என்று தெரியவில்லை. அது வரை நடந்ததை உத்தேசமாக வைத்துக் கணக்குப் போட்டிருப்பார் போல. இன்னமும் நான்கு படிகள் உள்ளன.
பெண்கள் அறையின் பாத்ரூம் ஏரியாவில் விஷால் ஒளிந்து கொண்டிருந்ததைப் பார்த்த பவித்ரா, கிண்டலுடன் சொல்லி விட்டு சென்று விட்டார். ஆனால் காட்டிக் கொடுக்காதது ஏன்? செங்கோலை ‘குச்சி’ என்று சொல்லி அவமானப்படுத்தியதால் சவுந்தர்யா மீது காண்டனார் தீபக். ‘எனக்கு அதன் பெயர் தெரியவில்லை’ என்று சாதித்தார் சவுண்டு.
டாஸ்க் செய்யாமல் தப்பித்து ஓடிய சவுந்தர்யா
‘வாழ்க ரணகேசரி’ என்று சவுந்தர்யா முழங்க வேண்டும்’ இதுதான் அவருக்கான டாஸ்க். ‘எல்லோரும் வாழ்ந்து விட்டுப் போகட்டும். சொல்லி விடு” என்று மஞ்சரி சர்காஸ்டிக்காக சொன்னாலும் ‘குச்சி.. குச்சி’ என்று அனத்திக் கொண்டிருந்த சவுந்தர்யா, டாஸ்க் செய்யாமல் குடுகுடுவென்று தங்களின் பகுதிக்கு ஓடி தப்பித்து விட்டார். ‘சவுந்தர்யா சொன்ன பேச்சைக் கேட்டாதான் ஆச்சரியம்” என்று விஜய்சேதுபதியே பல முறை கிண்டலடித்தாலும் அதையே தொடர்ந்து செய்கிறார் சவுண்டு.
“நீதியே இல்லாத நாடு. பல்லே இல்லாத ராணி’ என்று பக்கத்து நாட்டை பங்கம் செய்து கொண்டிருந்தார் ஜெப்ரி. “என்னையே கலாய்க்கறீங்களா?’ என்று ரீப்பீட் மோடில் கேட்டு டென்ஷன் ஆனார் சாச்சம்மா தேவி. (இந்த ரிப்பீட் மோடு, அன்ஷிதாவின் மேனரிசமாச்சே?!) ‘தொடர்ந்து கலாய்த்தால் போர் நிகழும்’ என்று எச்சரித்தார் தளபதி மஞ்சரி. என்ன அது போர் என்று பார்த்தால் டாஸ்க்கில் ஜெயிப்பதுதானாம்.
கார்டன் ஏரியாவில் ஒரு திருட்டு வேலை. பெண்கள் எல்லோரும் உள்ளே பஞ்சாயத்திற்கு சென்ற நேரம் பார்த்து அவர்களின் ‘கைவினைப் பொருட்களை’ முத்து திருடிக் கொண்டிருக்க வர்ஷினி அதைப் பார்த்து கூப்பாடு போட ‘இல்லவே இல்லை’ என்று சாதித்தார் முத்து. “ராஜாவே. டாஸ்க் துவங்கி நீங்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இப்போதாவது ஏதாவது டயலாக் பேசுங்கள்’ என்று ராணவ்வை கலாய்த்தார் மஞ்சரி. ‘அது வந்து.. இப்ப நான் என்ன சொல்றது?’ என்கிற வடிவேலு மோடில் என்னவோ பேசி சமாளித்தார் ராணவ்.
இரண்டு படிகள் முன்னேறியிருக்கும் ஆண்கள் அணி
‘ஒப்புக் கொள்கிறார்’ என்பதற்கு உப்புக் கொள்கிறார் என்று உங்கள் ராஜா தவறாக டயலாக் பேசுகிறார் என்று மஞ்சரி கலாய்க்க, செங்கோலை குச்சி என்றதற்கும் இதற்கும் சரியாகப் போய் விட்டது என்று சமாளித்தார் தீபக். பாத்ரும் போவதற்கு பர்மிஷன் கேட்ட சிவா, கீழே பதுங்கியபடி எதிரி நாட்டின் ராஜகுருவிற்கு ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்க, அது கண்ணாடியில் பகிரங்கமாக தெரிந்தது.
“அடேய்.. இவன்தான் எதிரி நாட்டின் ஒற்றனா?” என்று அறிந்து கொண்ட ராஜாவின் அணி “தெரியாதது போல் கமுக்கமாக இருப்போம்’ என்று திட்டமிட்டார்கள். “நம் நாட்டிற்குள் ஒற்றன் புகுந்து விட்டதாக சொல்கிறார்கள். உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?” என்று சிவக்குமாரிடமே விசாரிக்க “தெரியவில்லை” என்று சொல்லி எஸ்கேப் ஆனார் அவர். அதாவது அப்படியாக நினைத்துக் கொண்டார்.
ஆனால் தங்களின் ஒற்றன் மாட்டிக் கொண்டான் என்கிற விஷயம் ராணி தேசத்திற்கு தெரிந்து விட்டது. தங்கள் நாட்டின் ஒற்றர் யார் என்பதை பெண்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை
அரியணை போட்டியின் இரண்டாவது சுற்றை ஆரம்பித்தார் பிக் பாஸ். மக்கள் தயார் செய்த கைவினைப் பொருட்களை பக்கத்து நாட்டில் விற்க வேண்டும். யாருடைய மதிப்பு அதிகமாக இருக்கிறதோ அவர்களே வெற்றி. தளபதிகள் இந்தப் பேரத்தை நடத்துவார்கள். பொருட்கள் எக்ஸ்போர்ட் க்வாலிட்டியில் இருக்க வேண்டுமாம்.
பெண்கள் களிமண்ணை வைத்து விநோதமான உருவங்களை செய்து வைத்திருந்தார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் அணியைச் சும்மா சொல்லக்கூடாது. நாட்டின் மினியேச்சர், வாள், மஞ்சள் ரத்தினம் பொறித்த சிங்கத்தின் உருவம், அன்னப்பறவை என்று விதம் விதமாகச் செய்து அசத்தியிருந்தார்கள். மஞ்சரி என்னதான் லோ பட்ஜெட்டில் பேரம் பேசினாலும் அவரால் அதிகம் விலையைக் குறைக்க முடியாததே ஆண்கள் அணியின் கலைத்திறமைக்குச் சான்று. மற்ற டாஸ்க்குகளில் களிமண்ணாக இருந்தாலும் இந்த டாஸ்க்கில் ஆண்கள் பிரமிப்பை ஏற்படுத்தினார்கள். எனவே இரண்டாவது சுற்றிலும் ஆண்கள் அணி வெற்றி.
சாச்சம்மா தேவிக்கு வந்த பயங்கர கோபம்
இத்துடன் இன்றைய நாளின் டாஸ்க் தற்காலிமாக நிறுத்தப்படுகிறது’ என்று அறிவித்தார் பிக் பாஸ். அதுவரை பல்லைக் கடித்துக் கொண்டிருந்த சாச்சம்மா தேவி, “எப்படிடா.. என்னைக் கலாய்ப்பீங்க?” என்று சேலையை வரிந்து கட்டிக் கொண்டு போரை அறிவிக்க “எமோஷனைக் குறை.. எல்லோரும் டயர்டா இருப்பாங்க.. காலைல பார்த்துக்கலாம்” என்று ராணியின் தலையில் தட்டி அறிவுறுத்தி அழைத்துச் சென்றார் மஞ்சரி.
ஆண்கள் அணி ஒளித்து வைத்திருந்த தங்களின் செங்கோலை மீட்டுக் கொண்டு வந்த சாச்சனா, கூடவே பல பொருட்களையும் அள்ளிக் கொண்டு வந்தார். இதைப் பார்த்து விட்டார் ராணவ். இருவருக்கும் இழுபறி நடந்தது. “வெளில சொல்லிடாத. நமக்குள்ள டீல் பேசிக்கலாம். எங்கள் பொருட்களைக் கொடுத்துடுங்க.. உங்க பொருட்களைத் தந்துடறோம்’ என்று பெண்கள் அணி சிரித்துக் கெஞ்சி சொல்ல, அதில் மயங்கிய ராணவ் பொருட்களைத் தந்து விட “டேய் முட்டாளாடா நீ?” என்று பிறகு வந்த ரயான் திட்ட, பெண்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
வீர ராணவ கேசரி, ஆறிப் போய் கெட்டுப் போன கேசரியான வரலாறு இது. இந்த டாஸ்க் அடுத்தடுத்த சுற்றுகளிலாவது சுவாரசியமாக அமையுமா?