Warren Buffett: தொடரும் நன்கொடை... இந்த முறை 1.2 பில்லியன் டாலரை அள்ளிக்கொடுத்த ...
BB Tamil 8 Day 51: `லவ் ட்ராக் எல்லை தாண்டுகிறதா?' - கண்ணீர்விட்ட அன்ஷிதா
எல்லைக்கோடு கலைக்கப்பட்ட பிறகு ஒரு வழியாக இந்த சீசன் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அதன் தொடக்கம்தான் பொம்மை டாஸ்க். மஞ்சரி, அன்ஷிதா, ஜாக்குலின் ஆகியோருக்கு இடையில் நடந்த மும்முனைப் போட்டி மிக அற்புதமான டிராமாவாக இருந்தது. ‘விட்டுத்தர மாட்டேன்’ என்று ஆரம்பத்தில் பிடிவாதமாக இருந்த அன்ஷிதா ஏன் பிறகு தோற்றார்? காரணங்களை ஆராய்வோம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 51
‘நீதான் பலியாடு’ என்று போட்டியாளர்களைக் குறிக்கிற அனிருத்தின் பாடலோடு பொழுது விடிந்தது. இளையராஜா எப்படி ஒரு காலகட்டத்தின் அற்புதமான திரையிசையின் அடையாளமாக இருந்தாரோ, அப்படியே ஒரு மோசமான காலக்கட்டத்தின் அடையாளமாக அனிருத் போன்ற இசையமைப்பாளர்களைச் சொல்லலாம். இதை தலைமுறை இடைவெளியின் எரிச்சலுடன் நான் சொல்லவில்லை. அனிருத்தும் பல அற்புதமான பாடல்களைத் தந்திருப்பவர். ஆனால் சகிக்கவே முடியாத, நாராசமான சத்தங்களைக் கொண்ட குத்துப்பாடல் என்று விஷச் சூழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர்களுள் முதன்மையானவராக அனிருத் இருக்கிறார் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.
தீபக்கை பிக் பாஸ் பாராட்டியதால் அவருடைய தன்னம்பிக்கை வீங்கி விட்டதோ என்னமோ. இன்று காலையில் பொருத்தமே இல்லாத தலைப்பில் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார். “இந்த வீட்டில் தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் நட்புடன் நெருக்கமாக இருப்பார்கள். அதையெல்லாம் புகாராக பொதுவில் கொண்டு வராதீர்கள்” என்று தீபக் சொன்னது கேப்டனின் வேலையல்ல. “இது அவங்க கேமா இருந்தா?” என்று சரியாக கேள்வி எழுப்பினார் சவுந்தர்யா. ஆன்ந்தியும் இதைத் திறமையாக வழிமொழிந்தார்.
‘ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது தொந்தரவு செய்வது போல பிரச்னைகளை எழுப்பாதீர்கள்’ என்று தீபக் சொன்னது மட்டுமே கரெக்ட் பாயிண்ட். மஞ்சரியின் குழம்பு பிரச்னை மீண்டும் எழுந்தது. அதைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் வந்து விளக்க ஆரம்பிக்க “இதை நீங்க மூணு பேரும் நேத்தே பேசி சொல்யூஷன் கண்டுபிடிச்சிருப்பீங்கள்ல.. ஏன் இந்தக் குழம்பை மறுபடியும் சூடுபடுத்தறீங்க?” என்பது போல் தர்ஷிகா எழுப்பிய ஆட்சேபம் சரியானது. காலையில் இதர வேலைகள் இருக்கும் போது ஆறிப் போன குழம்பை மீண்டும் கலக்க ஆரம்பிக்கக் கூடாது.
மீண்டும் கொதிக்க ஆரம்பித்த குழம்பு பிரச்னை
“நான் இதை பொதுப் பிரச்சினையாக பார்க்கிறேன்” என்று குழம்பு பிரச்சினையை சாச்சனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. அப்படித் தெரியவில்லை. அருணிடம் கொண்ட ஈகோவாகத்தான் அவர் பார்ப்பதுபோல் தெரிகிறது. தன்னை விட இன்னொரு புத்திசாலி வீட்டில் உருவாகி விடக்கூடாது என்று முத்து தவிப்பதை உணர முடிகிறது.
“நாம பிரெண்ட்ஸூதான். அதுக்காக அந்த லைன்லயே போக வேண்டாம். அப்பப்ப இதுல மாற்றம் வரும். நாமதான் புரிஞ்சுக்கணும்” என்று கார்டன் ஏரியாவில் வாக்கிங் சென்று கொண்டே ரயானிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சவுந்தர்யா. அவர் அறிவுப்பூர்வமாக பேசும் அபூர்மான தருணங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அடுத்த நிமிடத்திலேயே இதை வெற்றிகரமாக உடைத்து விட்டார் சவுந்தர்யா. மஞ்சரியுடனான உரையாடலில் இந்த முட்டாள்தனம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“நான் பொய் சொன்னதா குற்றம் சுமத்தினே. எந்த இடத்துல அப்படிப் பண்ணேன்?” என்று சவுந்தர்யாவிடம் வந்து விளக்கம் கேட்டார் மஞ்சரி. மஞ்சரியின் கேள்வி தெளிவாக இருந்தது. ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் அறிவுத்திறன் சவுந்தர்யாவிடம் இல்லை. எனவே “மாத்தி மாத்திப் பேசறீங்க. அதைச் சொல்லக்கூடாதா.. எனக்கு அப்படி ஃபீல் ஆச்சு” என்று விதாண்டாவாதம் செய்ய “அது வேற. அப்படிச் சொல்லியிருந்தா விளக்கம் கேட்டு நான் வந்திருக்கவே மாட்டேன். பொய் சொல்றேன்னு நீ சொன்னதாலதான் விளக்கம் கேக்கறேன்” என்று மஞ்சரி தெளிவாகவே தன்னுடைய கேள்வியை முன்வைத்தாலும் அதைப் புரிந்து கொள்ள முடியாத சவுந்தர்யா “இப்ப என்னதான் உன் பிரச்னை?” என்று வழக்கம் போல் தன் ரியாக்ஷன் சேஷ்டைகளை செய்யத் தொடங்கி விட்டார்.
விதாண்டாவாதம் செய்யும் சவுந்தர்யாவின் சிறுபிள்ளைத்தனம்
ஒரு கேள்விக்கு தெளிவான பதில் இல்லாதவர்கள் இப்படித்தான் கோபம், கிண்டல், விலகல் போன்ற வழிகளில் எஸ்கேப் ஆவார்கள். சவுந்தர்யாவின் எதிர்வினையும் இப்படித்தான் இருந்தது. மஞ்சரியிடம் எப்படியோ தப்பித்து வந்து விட்டாலும் தான் சொன்னதில சவுந்தர்யாவிற்கே பயங்கர சந்தேகம். எனவே ரயான் மற்றும் விஷாலிடம் சென்று “மஞ்சரி பொய் சொல்லுவாங்கதானே?” என்று தான் நினைத்த விஷயத்தை நண்பர்களின் வாயால் வரவழைப்பதற்காக படாத பாடு பட்டார். “இல்லை. மாத்தி மாத்திப் பேசுவாங்க. ஆனா பொய் சொல்றது வேற. இருக்கிற உண்மையை மறைக்கறது” என்று ரயான் தெளிவாக விளக்கம் அளித்தும் சவுந்தர்யாவால் ஏற்க முடியவில்லை.
சவுந்தர்யாவைப் போலவே இன்னொரு ஆர்வக் கோளாறு சாச்சனா. ‘மைக்கை ஒழுங்கா மாட்டுங்க' என்று அவருக்கு பிக் பாஸிடமிருந்து எச்சரிக்கை குறிப்பு வந்தது. கேப்டன் தீபக்கும் அதை வழிமொழிந்தார். தன்னுடைய தவறு அம்பலப்படும் போதெல்லாம் அசட்டுத்தனமாக சிரித்து மழுப்புவது சாச்சனாவின் பழக்கங்களுள் ஒன்று. இப்போதும் அதையே அவர் செய்ய அதை தீபக் ஆட்சேபித்தார். “மனுஷன் சிரிக்கறதுக்கு கூட உரிமையில்லையா?” என்று விதாண்டாவாதமாக பேசினார் சாச்சனா. மைக்கை சரியாகத்தான் மாட்டியிருக்கிறேன் என்பது அவருடைய வாதம். “அப்ப பிக் பாஸ் தப்பா சொல்றாரா.. ஒரு சீரியஸான அறிவிப்பிற்கு சிரிச்சா என்ன அர்த்தம்.. மத்தபடி உங்களை யாரு சிரிக்க வேண்டாம்ன்னு சொன்னா?” என்று தீபக் சரியாக விளக்கம் தந்தாலும் சாச்சனாவால் அதை ஏற்க முடியவில்லை. இதே விஷயத்தை கடந்த வார விசாரணையில் விஜய் சேதுபதி சொன்ன போது இறுக்கமான முகத்துடன் ஏற்றுக் கொண்டவர் இதே சாச்சனாதான்.
எல்லை தாண்டி பாதிப்பு ஏற்படுத்தும் லவ் டிராக்
விஷால் - தர்ஷிகாவின் so called ‘லவ் டிராக்’ எல்லை தாண்டி மற்றவர்களையும் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. தர்ஷிகாவிடம் ஏற்படத் துவங்கியிருக்கும் மாற்றம் குறித்து அன்ஷிதா வெளிப்படையாக நெருடல் அடையத் துவங்கியிருக்கிறார். அவர் விஷாலுக்கும் நண்பர் என்பதால் தத்தளிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தங்களின் தனிப்பட்ட விவகாரம் குறித்து மற்றவர்கள் ஏன் இத்தனை அக்கறை கொள்ள வேண்டும் என்று தர்ஷிகாவும் விஷாலும் எரிச்சல் கொள்கிறார்கள்.
இதனால் நட்பு ரீதியாக அன்ஷிதாவிற்கும் தர்ஷிகாவிற்கும் இடையே விரிசல் ஆரம்பித்திருக்கிறது. இது சக நண்பர்களான பவித்ரா மற்றும் ஆனந்தியை கவலை கொள்ளச் செய்திருக்கிறது. ஆனந்தி எதையும் பொறுமையாகவும் தர்க்கரீதியாகவும் அணுகக்கூடியவர். எனவே இந்தச் சிக்கலை அவர் அணுகிய விதம் சிறப்பானது. “ஒருவேளை உனக்கு பொசசிவ் இருக்கா?” என்று நேரடியாகவே அன்ஷிதாவிடம் அவர் நாசூக்காக கேட்டு விட்டார். அந்த பொசசிவ் என்பது விஷாலாகவும் இருக்கலாம். தர்ஷிகாவாகவும் இருக்கலாம்.
ஆனந்தியின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டு அன்ஷிதா மனம் புண்பட்டு கண்ணீர் விடத் துவங்கி விட்டார். கலங்கலான முகத்துடன் அவர் சொல்ல வந்ததை சுருக்கமாகப் புரிந்து கொண்டால் “நான் இங்க கேம் ஆடத்தான் வந்திருக்கேன். வேறு எந்த ஃபீலீங்ஸூம் எனக்கு நிச்சயம் வராது. நான் நிறையப் பட்டுட்டேன். ஏன் இன்னொரு அவஸ்தையை தூக்கி சுமக்கப் போறேன்?’ என்பதுதான். எனில் நட்பு ரீதியாக மட்டுமே அவரின் கவலை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இவர்களின் தரப்பில் இது சீரியசான பிரச்னையாக அலசப்பட்டாலும், வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு ‘ஒரு புறாவுக்கு அக்கப்போரா?’ என்பது மாதிரிதான் காமெடியாகத் தெரிகிறது. ஏன், சமயங்களில் எரிச்சல் கூட வருகிறது. நட்பு உடையக் கூடாது என்பதற்காக ஆனந்தியும் பவித்ராவும் எடுத்துக் கொள்ளும் கண்ணியமான முயற்சிகள் பாராட்ட வைக்கின்றன. “எனக்கு கேம்தான் முக்கியம்” என்று தர்ஷிகா தெளிவாகச் சொன்னாலும் இந்த லவ் டிராக் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
இத்தனை களேபரமான உரையாடல்கள் நடந்தாலும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல தர்ஷிகாவின் கையில் மருந்து தடவிக் கொண்டிருந்தார் விஷால். எனில் நண்பர்களை விடவும் இந்தக் கிளுகிளுப்பு தர்ஷிகாவிற்கு முக்கியமாகத் தெரிந்திருக்கிறது என்பதே பொருள். காதல் கண்ணை மட்டுமல்ல, கையையும் மறைக்கும்.
பரபரப்பை ஏற்படுத்திய ‘பொம்மை டாஸ்க்’
முந்தைய சீசன்களில் கொலைவெறித் தருணங்களை ஏற்படுத்திய ‘பொம்மை டாஸ்க்கை’ தூசு தட்டி ஆரம்பித்தார் பிக் பாஸ். இது வெற்றிகரமாக பற்றிக் கொண்டு விட்டது. அதுவரை போட்டியாளர்களின் மனதில் இருந்த மிருகங்கள் உக்கிரமாக விழித்தெழ ஆரம்பித்து விட்டன.
அதே விதிகள். ஒருவர் தன்னுடைய பெயர் போட்ட பொம்மையை எடுக்க முடியாது. மற்றவரின் பொம்மையை எடுத்து இலக்கில் சேர்க்க வேண்டும். யாருடைய பெயர் போட்ட பொம்மைக்கு இடமில்லையோ அவர் அவுட். இப்படியே ஒவ்வொருவராக ஆட்டத்தில் இருந்து வெளியேற கடைசியில் எஞ்சுபவர் வெற்றியாளர். இது மற்றவர்களுக்காக ஆடும் ஆட்டம். யாரைக் காப்பாற்றுவது என்பதோடு யாரைக் காப்பாற்றக்கூடாது என்பதற்காகவும் வியூகங்களை வகுக்கலாம்.
சவுந்தர்யா, ஜெப்ரி, ஜாக், ரயான் ஆகிய நால்வரும் கூட்டணி வைத்துக் கொண்டார்கள். ஆட்டம் ஆரம்பித்தது. அனைவரும் பாய்ந்து சென்று பொம்மைகளை அள்ளினார்கள். தண்ணீர்த் தொட்டியில் பாய்வது போல ஜெப்ரி பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும் தொட்டிக்குள் குதித்தார். முட்டி மோதி அனைவரும் பொம்மைகளை ஸ்லாட்டிற்குள் வைத்தார்கள். வழக்கம் போல் ஆர்வக்கோளாறு சேஷ்டைகளை செய்தார் சாச்சனா.
ராணவ் பெயர் போட்ட பொம்மை ரஞ்சித் கையில் இருந்தது. “சார்.. அதைக் கொடுங்களேன்” என்று அவசரப்படுத்தி வாங்கிக் கொண்ட ஜாக்குலின், அதற்குப் பதிலாக தர்ஷிகாவின் பொம்மையை திணித்து விட்டார். சவுந்தர்யாவின் பொம்மையை தர்ஷிகா எடுத்துக் கொண்டு வைக்காமல் உலவியதால் அவருக்கு செக் பாயிண்ட் வைக்க ஜாக்குலின் செய்த தந்திரம் இது. இதனால் ஜாக்கிற்கும் தர்ஷிகாவிற்கும் இடையில் உஷ்ணமான வாக்குவாதம். இந்தச் சண்டை பிறகு ரயானிடமும் பரவியது. இதனால் வெறுப்படைந்த தர்ஷிகா, சவுந்தர்யாவின் பொம்மையைக் கொண்டு போய் உள்ளே வைத்தார். விளைவு தர்ஷிகா அவுட்.
இதனால் கோபம் கொண்ட தர்ஷிகா “தனியா ஆடறதுன்னா ஆடுங்க. நீங்க ஆடறது கேங் பிளே” என்று கோபித்துக் கொண்டு விலகினார். இந்த ஆட்டத்தை தனியாக ஆட முடியாது. மற்றவர்களின் துணையோடுதான் தொடர முடியும் என்பது எளிய லாஜிக். தர்ஷிகாவின் குழப்பத்திற்கு என்ன காரணம்?
தர்ஷிகாவை காப்பாற்ற விரும்பினாரா பிக் பாஸ்?
நடந்து முடிந்த முதல் சுற்றில் சவுந்தர்யாவின் பொம்மை காப்பாற்றப்பட்டது. ஆனால் தர்ஷிகாவின் கோபம் காரணமாக, தன்னுடைய பொம்மையை வெளியில் எடுத்து வந்து விட்டார் சவுந்தர்யா. வைத்த பொம்மையை மீண்டும் எடுக்கக்கூடாது என்பது எளிமையான லாஜிக். இப்படி சிறுபிள்ளைத்தனமாக ஆடுபவர்களை சேர்த்தால் சீசன் எப்படி சுவாரசியமாகும்?
‘பொம்மையை வெளியில் வைத்து மாற்றக்கூடாது’ என்கிற ‘புதிய’ அறிவிப்பை செய்தார் பிக் பாஸ். ஒருவேளை தர்ஷிகாவை அவர் காப்பாற்ற விரும்பினாரோ? இந்த அறிவிப்பு விதிப்புத்தகத்தில் இருந்ததைப் போல் தெரியவில்லை. “ரஞ்சித்.. என்ன நடந்ததுன்னு சொல்லுங்க” என்று பிக் பாஸ் விசாரிக்க, ரஞ்சித்தால் அதற்கு சரியாகப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். குழந்தையை ஏமாற்றி பொம்மையை பிடுங்கிக் கொண்டது போல தத்தளித்தார். அவர் ஏன் பொம்மையை ஜாக்குலினிடம் தந்தார் என்பதும் புரியவில்லை. எனவே முதல் சுற்றை ரத்து செய்த பிக் பாஸ் “மீண்டும் மொதல்ல இருந்து ஆடுங்க” என்று சொல்ல தர்ஷிகாவின் முகத்தில் வெற்றிப் புன்னகை. பொம்மையை தொட்டிக்குள் வைத்துதான் மாற்ற வேண்டுமாம். திருத்தி ஆடப்பட்ட இந்த முதல் சுற்றில் சவுந்தர்யா அவுட். (இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!).
இரண்டாவது சுற்றில்தான் ஒரு மிகப் பெரிய டிராமா நடந்தது. மஞ்சரியின் பொம்மையை கைப்பற்றி வைத்துக் கொண்டார் அன்ஷிதா. மஞ்சரியின் கையில் ஜாக்குலின் பொம்மை இருந்தது. ஜாக்குலின் கையில் தீபக்கின் பொம்மை இருந்தது. மற்றவர்களின் பொம்மைகள் அனைத்தும் ஸ்லாட்டிற்குள் வைக்கப்பட்ட நிலையில் இந்த மூன்று நபர்களின் பொம்மைகளுக்குள்தான் போட்டி.
‘தீபக்கின் பொம்மை வைக்கப்பட்டால், தான் மஞ்சரியின் பொம்மையை வைக்கத் தயார் என்று பிடிவாதமாக இருந்தார் அன்ஷிதா. எனில் ஜாக்குலின் அவுட் ஆவார். “தீபக் நாமினேஷனில் இல்லை. நான் இருக்கிறேன். ஒருவேளை இது நாமினேஷன் பாஸிற்கான ஆட்டமாக இருந்தால் நான் எப்படி வெளியேற முடியும்.. அஸ்க்கு புஸ்க்கு.. நான் மாட்டேன்” என்று ஜாக்குலின் அடம்பிடித்ததில் ஒரு நியாயம் இருந்தது.
அன்ஷிதா - மஞ்சரி - ஜாக்குலின் = டிரையாங்கிள் டிராமா
‘மஞ்சரியின் பொம்மை உள்ளே செல்லக்கூடாது’ என்று அன்ஷிதா அடம்பிடிப்பது தொடர்பாக மஞ்சரிக்குள் நெருடலும் சந்தேகமும் எழுந்தது இயல்பான விஷயம். “நீ அவ கிட்டயே போய் நேராப் பேசிடு” என்று சரியான அட்வைஸ் தந்தார் முத்து. மஞ்சரி விசாரிக்கச் சென்ற போது “எனக்கு தீபக் பொம்மை உள்ளே போகணும். அவ்வளவுதான்” என்று பாவனையாகச் சொன்னார் அன்ஷிதா. ஆனால் அது உண்மையான காரணம் அல்ல என்பது பச்சையாகத் தெரிந்தது. அவருக்கு மஞ்சரி மீதுதான் ஏதோ கோபம்.
தான் விசாரித்தும் அன்ஷிதா சொல்லாததால் மஞ்சரிக்கும் பிடிவாதம் அதிகரித்தது. ‘என்ன நடந்தாலும் பொம்மையை வைக்க மாட்டேன்” என்று அவர் சொல்ல ‘அதையும் பார்த்து விடலாம்” என்று அன்ஷிதாவும் மல்லுக்கட்டினார். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. இவர்களுக்கு செக் பாயின்ட் வைக்க பிக் பாஸ் என்னென்னமோ செய்தார். “பொம்மையை வைக்காதவர்கள் கார்டன் ஏரியாவில்தான் இருக்க வேண்டும். தண்ணீர், உணவு, கழிப்பறை வசதி கிடையாது” என்று அறிவித்துப் பார்த்தார். ம்ஹூம்.. பிடிவாதம் கலையவில்லை.
‘யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுங்களேன்’ என்றாலும் அதற்கு மூவரும் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் மஞ்சரி விட்டுத் தர தயாராகி விட்டார். அவருக்கு இயற்கை அழைப்பின் அவசரம் தாங்க முடியவில்லை போல. “ஓகே.. உன்னை நம்பி போறேன். என் பொம்மையக் காப்பாத்துவல்ல?” என்று மஞ்சரி கேட்க ‘டபுள் ஓகே’ என்று சம்மதம் தெரிவித்தார் ஜாக்குலின். இப்படியாக ஜாக்குலின் பொம்மை காப்பாற்றப்பட்டது. இனி அவர் மஞ்சரிக்குத் தந்த வாக்குறுதியை காப்பாற்றியாக வேண்டும்.
எனவே போட்டியானது ஜாக் Vs அன்ஷிதாவாக மாறியது. இதுவே மஞ்சரி Vs அன்ஷிதாவாக இருந்தால் இன்னமும் ரணகளமாக இருந்திருக்கும். நேரம் கடந்து கொண்டே இருந்தது. பிக் பாஸ் என்னெ்னமோ செய்து பார்த்தார். மற்ற எல்லோரையும் உள்ளே அனுப்பி கதவை மூடினார். ‘சரி.. தூங்கலாம்’ என்று படுத்த ஜாக்குலினை நாய் குரைக்க வைத்து எழுப்பினார். இப்படி மறைமுகமான நெருக்கடிகளைத் தாண்டி நள்ளிரவிற்கு மேல் இருவரும் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
நேரம் அதிகாலை 03:10. அன்ஷிதா முகத்தைக் கோணிக் கொண்டு காலைப் பின்னிக் கொண்டு அவஸ்தையுடன் அமர்ந்திருந்தார். இயற்கை அழைப்புப் பிரச்னை. பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவர் “இப்ப நான் எழுந்தா இங்கயே போயிடுவேன்” என்கிற அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே ஒரு கட்டத்தில் பொம்மையை தூக்கிக் கொண்டு அவஸ்தையுடன் வீட்டிற்குள் ஓட “பைத்தியக்காரி” என்று திட்டிக் கொண்டே பவித்ராவும் பின்னால் ஓடினார்.
“அவளுக்கு பாத்ரூம் பிரச்னை வரும். தாங்க மாட்டா” என்று முன்னரே மஞ்சரி இதைக் கணித்து விட்டார். பாத்ரூம் போன ஆசுவாசத்துடன் திரும்பிய அன்ஷிதா ஒருவழியாக பொம்மையைக் கொண்டு போய் வைக்க மஞ்சரி காப்பாற்றப்பட்டார். தீபக் அவுட் ஆனார். “இப்பவாவது போய் தூங்குங்க.. என்னையும் கொஞ்ச நேரம் தூங்க விடுங்க” என்று அவர்களை உள்ளே அனுப்பி வைத்து பெருமூச்சு விட்டார் பிக் பாஸ்.
அன்ஷிதா ஏன் தோற்றுப் பேனாார்?
இந்த மும்முனைப் போராட்டத்தில் நடந்த உள்குத்துக்களைப் பற்றி சற்று ஆராய்ந்து விடுவோம். ‘தீபக் பொம்மை உள்ளே போக வேண்டும். மஞ்சரியின் பொம்மை போகக்கூடாது’ என்று அடம்பிடித்த அன்ஷிதா, அதற்கான காரணத்தை முதலில் வெளிப்படையாக சொல்லவில்லை. பிறகு மஞ்சரி மீண்டும் கேட்ட போதுதான் விஷயம் வெளியே வந்தது. “இப்பத்தான் கேம் ஆரம்பிச்சிருக்கு” என்று பொம்மை டாஸ்க் ஆரம்பித்த போது மஞ்சரி சொன்ன கமெண்ட் அன்ஷிதாவைப் புண்படுத்தியிருக்கிறது. வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்தவர் இதைச் சொன்னால், இத்தனை நாட்கள் கஷ்டப்பட்ட நாங்கள் என்ன தக்காளி தொக்கா?” என்று சீண்டப்பட்டிருக்க வேண்டும். எனவே மஞ்சரியை எப்படியாவது ஆட்டத்தில் இருந்து வெளியேற்ற பிடிவாதத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆக இது சீனியர், ஜூனியர் ஈகோ பிரச்சினை. இதையும் தாண்டிய உள்குத்துக்களும் இருக்கலாம்.
அன்ஷிதாவின் உறுதியைப் பார்த்த போது அவர்தான் இறுதி வரை தாக்குப் பிடிப்பார் என்று நான் நினைத்தேன். ஆனால் முடிவு மாறியதற்கு என்ன காரணம்? சற்று யூகித்துப் பார்க்கிறேன். இயற்கையின் அழைப்பு காரணமாக ஜாக்குலினைக் காப்பாற்றி விட்டு மஞ்சரி சென்று விட்டார். “பதிலுக்கு என்னைக் காப்பாத்துவேன்னு நம்பறேன்” என்று அவர் கேட்க ஜாக்குலினும் வாக்கு தந்து விட்டார். எனவே அந்த வாக்கை ஜாக்குலின் நிச்சயம் காப்பாற்றியே ஆக வேண்டும். இது சார்ந்த மனநெருக்கடி அவருக்கு தன்னிச்சையான உறுதியைத் தந்திருக்கும்.
ஆனால் அன்ஷிதாவின் கதையைப் பாருங்கள். அவருக்கு மஞ்சரியின் மீதுதான் வெறுப்பு. ஆனால் யாருடைய பொம்மையைக் காப்பாற்ற வேண்டும் என்று அன்ஷிதா போராடிக் கொண்டிருக்கிறாரோ, அந்த தீபக் உள்ளே நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார். ‘எனக்காக கஷ்டப்படுகிறாய்.. நன்றி’ என்று சொல்லவில்லை. கூட நிற்கவில்லை. இந்த உணர்வு அன்ஷிதாவின் மனஉறுதியை ஆழ்மனதிற்குள் புகுந்து கலைத்திருக்கலாம். எனவேதான் ஒரு கட்டத்தில் விட்டுக் கொடுத்து விட்டார். மனது எவ்வாறு எண்ணங்களை அடுக்குகிறதோ, அதற்கேற்பதான் உடலும் செயல்படும் என்பதற்கான உதாரணம் இது.
இந்த பொம்மை டாஸ்க்கின் இடையில் பழைய உரையாடலின் பகையை வைத்து கொண்டு மஞ்சரியுடன் சவுந்தர்யா நடத்திய விதாண்டா விவாதம் இருக்கிறதே?! முற்றிலும் சிறுபிள்ளைத்தனமான உரையாடல் அது. ‘ச்சீ பே..’ என்று பள்ளிப்பிள்ளைகள் ஒழுங்கு காட்டுவதற்கான செயலை சவுந்தர்யா மேற்கொண்டார்.
“என் பொம்மையை மட்டும் காப்பாத்திடு.. நாளைக்கு இவங்கள வெச்சுக்கறேன்” என்று ஜாக்குலினிடம் மஞ்சரி சொல்லியிருக்கிறார். ஆக.. அடுத்த எபிசோடில் அனல் பறக்கும் என்று எதிர்பார்ப்போம்.