புதுச்சேரி: `பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு' த.பெ.தி.க - நா.த.க இடையே மோதல்......
BB Tamil 8 Day 94: சாச்சனாவின் சகுனியாட்டம்; உஷாரான முத்து; `வெளில போங்க’ - பிக் பாஸ் வார்னிங்
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு எச்சரிக்கை, எவிக்ஷன் பயமுறுத்தல் என்று கலவையான எபிசோடாக இருந்தது.
புதிதாக வந்தவர்கள், வந்த சூடு உடனே ஆறிப் போய் என்ன செய்வதென்று விழிக்கிறார்கள். ‘தாங்களும் போட்டியாளர்கள்’ என்கிற தங்க வாய்ப்பை மறந்து விட்டு விருந்தினர்கள் போலவே நடந்து கொள்கிறார்கள்.
விஷால் நள்ளிரவின் தனிமையில் காமிரா முன்பு பேசிக் கொண்டிருந்தார். டேமேஜ் கண்ட்ரோல் முயற்சியாக இருக்கலாம். தர்ஷிகா, தர்ஷிகாவின் அம்மா, அன்ஷிதா ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டார். ‘விஷால் யாருன்னு காட்ட வந்தேன். என்னையும் மீறி என்னென்னவோ நடந்துச்சு’ என்பது அவரது மனவருத்தம்.
நாள் 94.
‘ச்சே.. ரவீந்தர் மட்டும் இந்த கேம்ல இருந்திருந்தா ஆட்டம் செமயா இருந்திருக்கும்’ என்று பலரும் அவரை உசுப்பேற்றியிருப்பார்கள் போலிருக்கிறது. எனவே வந்ததில் இருந்தே ரவி ஓவர்டைமில் மற்றவர்களின் மண்டையைக் கழுவும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அது சுவாரசியமான மைண்ட் கேமாக இருந்தால் பரவாயில்லை. மற்றவர்களின் ஆட்டத்தைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது.
முத்துவிடம் அமர்ந்த ரவி, “பாராசூட்ல குதிச்சு ரிஸ்க் எடுத்த பரிசு TTF. நான் ஏன் பெட்டியை எடுக்கணும்ன்னு ரயான் கேட்கறான். 2 டாப்பர்களை நீ எக்ஸ்போஸ் பண்ணனும்னு சொல்லியிருக்கேன். இல்லைன்னா அவங்களா வாக்அவுட் ஆகணும். ரெட் கார்ட் கொடுக்கணும். இப்ப வெதர் மாறியிருக்குன்னு சொன்னேன்’ என்று சொல்வதின் மூலம் முத்துவின் தன்னம்பிக்கையை குலைக்க ரவி முயற்சி செய்தாரோ?! “சரி விடுங்க. அவர் வந்த வேலையை பண்ணிட்டு இருக்காரு” என்று பின்னர் தீபக்கிடம் அசால்ட்டாக சொன்னார் முத்து.
பழைய அணி x புதிய அணி என்று வீடு இரண்டாகப் பிரிந்திருப்பது இயல்பான விஷயம். இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டதை நேற்று வந்தவர்கள் எடுத்துச் செல்ல விட மாட்டோம் என்று பழைய அணி மூர்க்கமாக எதிர்க்கும். இந்த விஷயம் புதிய அணிக்குத் தெரிந்தாலும் ‘இயன்ற வரை ஆட்டத்தைக் கலைப்போம். வந்த வரை லாபம்’ என்கிற பேட்டர்னில் செயல்படும். ரவி செயல்படுவது இந்த வகையில் என்று தோன்றுகிறது. மாகப என்பதற்கு ‘மண்டையைக் கழுவ பார்க்கறாங்க’ என்று புது அர்த்தத்தை தந்தார் தீபக். இதற்கு ஜாக்குலின் ரசித்து சிரித்தார்.
முத்துவிடம் பேசி முடித்த ரவி, பின்னர் ரயானிடம் சென்று “ரெண்டு பேருக்கு வெளில நல்ல செல்வாக்கு இருக்கு. உன்னால டாப் 5ல தான் வர முடியும். அதுவே உனக்கு போதுமா.. ஆனா பெட்டியை எடுன்னு சொல்ல வரலை.. அருண், பவித்ராலாம் சம்பாதிக்க முடியும்” என்றெல்லாம் ரயானிடம் ஆசை காட்ட அவரோ “இல்லைங்க ஃபைனலிஸ்ட் வரைக்கும் வந்துட்டேன். இனிமே பின்னாடி போறதில அர்த்தமில்ல. அடுத்த படிக்கட்டுதான் இலக்கு” என்றார் தீர்மானமாக.
இப்படி ஒவ்வொருவரிடமும் பெட்டி பற்றி ரவி கேன்வாஸ் செய்து கொண்டிருக்க, பிக் பாஸால் உள்ளே அழைக்கப்பட்டார். “வெளியுலக விஷயங்களை சொல்லக் கூடாதுன்னு ஏற்கெனவே எச்சரிச்சேன் இல்லையா.. ஆனா நீங்க வோட்டிங் பத்தி, மக்கள் கருத்து பற்றி எல்லாம் பேசறீங்க. நீங்கன்றதாலதான் உள்ளே கூப்பிட்டேன். உங்களுக்கே இது நல்லா தெரியும்” என்று வறுத்தெடுத்த பிக் பாஸ் “நீங்க கேம் ஆடுங்க. ஆனா என் கிட்ட ஆடாதீங்க” என்பதை விதம் விதமான சொற்களால் புரிய வைத்து “நீங்க என் மனசுல இருக்கீங்க” என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் விட வைத்து ரவியை வெளியே அனுப்பினார். ‘அடிச்சுக்கூட கேட்பாங்க. சொல்லாதீங்க’ என்றது ஹைலைட்.
எண்பதுகளின் தமிழ் சினிமா பஞ்சாயத்து சீன்களில் “இப்படி ஆளாளுக்கு மூஞ்சை பார்த்துட்டு உக்காந்து இருந்தா எப்படி.. யாராவது பேசுங்கப்பா. சட்டுபுட்டுன்னு பேசி முடிங்க” என்று ஒரு கேரக்டர் சீனுக்காக லீட் எடுத்துக் கொடுக்கும். அது போல “சாப்பிட்டு சும்மா உக்காந்திருந்தா எப்படி. புதுசா வந்தவங்க ஏதாவது பண்ணுங்க. எங்களை எண்டர்டெயின் பண்ணுங்க” என்று ஆரம்பித்து வைத்தார் தீபக். “உங்க பேச்சுல திமிர் தெரியுது” என்று சுனிதா இதை ஆட்சேபிக்க, “நல்லாத் தெரியுதா.. தெரிஞ்சுட்டுப் போகட்டும்’ என்றார் அசால்ட்டாக.
இந்தச் சண்டை கொஞ்ச நேரம் சென்று அவர்களுக்கே போரடித்து ஸாரி சொல்லி ஓய்ந்தார்கள். ‘ஓகே.. நாமதான் ஏதாவது செஞ்சாகணும். இல்லைன்னா சானலை மாத்திடுவாங்க’ என்று பிக் பாஸ் நினைத்தாரோ, என்னவோ ‘காரெக்டர் ரோல்’ டாஸ்க்கை ஆரம்பித்தார். தமிழ் சினிமாவின் கேரக்டரில் வாழ்ந்து நடனமாடும் அரதப் பழசான டாஸ்க்.
ரிவ்யா என்கிற க்யூட் கேர்ளாக ரியா கொஞ்சி கொஞ்சிப் பேசினார். காத்துவாக்குல ரெண்டு காதல் ‘கதீஜா’வாக தர்ஷா. (சமந்தா இதைப் பார்க்காமல் இருக்க வேண்டும்). கண்ணனைத் தேடும் மீராவாக ‘லேடி’ அம்பி கேரக்டரில் பவித்ரா. சந்தோஷ் சுப்பிரமணியத்தின் ஹாசினியாக ஜாக்குலின். (சவுந்தர்யாவிற்கு தந்திருக்கலாம்!) ‘சுமார் மூஞ்சி குமாராக’ முத்து (அட்டகாசம் செய்தார்). புதன் என்கிற பெயர் ரயானுக்கு. (புதன் கிழமை ஒளிபரப்பான எபிசோடு என்பதால் போலிருக்கிறது). சிம்பு பாணியில் இருந்தது.
துணிப்பையைத் தூக்கிக் கொண்டு முத்துக்கோட்டையிலிருந்து தப்பி வந்த அபலைப் பெண்ணாக சவுந்தர்யா. (கில்லி திரிஷா). தலைவிரி கோலத்தில் இருந்தார். தேவசேனாவாக பேசி பயமுறுத்தினார் வர்ஷினி. ‘கலக்கி’ என்கிற பெயரில் விநோதமான டாக்டராக இருந்தார் சுனிதா. ‘கேடி வாத்தி’ விஷாலாம். வாரணம் ஆயிரம் சூர்யாவாக அருண். (பிக் பாஸ் டீமிற்கு சூர்யா மீது என்ன கோபமோ?). மங்காத்தா அஜித்தாக கம்பீரமாக உலா வந்தார் சிவா. (ஆனால் பிறகு மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது).
இது போன்ற ஃபேன்ஸி டிரஸ் காம்படிசன் என்றால் இந்த இரண்டு கேரக்டர்களையும் தவிர்க்கவே முடியாது. படையப்பா மற்றும் நீலாம்பரி. ‘பெரியப்பா’ தீபக், ரஜினி வாசனையுடன் சற்று பேசினார். (ஒட்டு தாடி ரொம்ப மோசம்!). ‘நான் காலேஜ் படிக்கறேன்’ என்று அநியாயம் செய்தார் அர்னவ். ‘இன்னுமா’ என்று கேட்டு கலாய்த்தார் முத்து. அலைபாயுதே மாதவனாம். ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்த்திபன் கரிகாலன் சோழனாக ரவி. நீலாம்பரியாக சாச்சனா ஒட்டவேயில்லை.
இந்த கேரக்டர்கள் வரிசையில் டாஸ்க் முழுவதும் ‘சுமார் மூஞ்சி குமாராகவே’ வாழ்ந்தவர் முத்துதான். ‘செமஜி.. செமயா இருந்துச்சுஜி..’ என்றே சமாளித்துக் கொண்டிருந்தாலும் காரெக்டரில் இருந்து வெளியே வரவில்லை. ஆனால் விசேவின் வாய்ஸில் விஷாலாக இருந்தால் இன்னமும் சிறப்பாக பேசியிருப்பார். அதற்கு அடுத்த இடம் ஜாக்குலினுக்கு. ‘ஹாசினி’ பாத்திரத்தில் துள்ளி துள்ளி குதிப்பது இம்சையாக இருந்தாலும் தன் பங்களிப்பை தொடர்ந்து தந்தது பாராட்டத்தக்கது.
பவித்ராவிடம் பிரபோசல் செய்தார் அர்னவ். ‘உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனக்கல. ஆனா நடந்துருமோன்னு பயமாயிருக்கு’ என்று இவர் சொல்ல ‘பயமா இருந்தா ஏன் பேசறேள். தள்ளிப் போங்கோ’ என்று பவித்ரா சொன்னது நல்ல கவுன்ட்டர். ‘கண்ணனைத் தேடிட்டிருக்கேன். எனக்கு அண்ணனைத் தேடலை” என்று சொல்லியிருந்தால் இன்னமும் நல்ல பன்ச்சாக இருந்திருக்கும்.
‘கலக்கி’ டாக்டரான சுனிதா, முத்துவின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்துப் பார்த்து ‘ஸ்ட்ராட்டஜி.. ஸ்ட்ராட்டஜின்னு கேக்குது’ என்றது நல்ல குறும்பு. “ஆமாம்..ஜி. செமஜி.’ என்று அதற்கு சந்தோஷப்பட்டார் டுமாரு. தீபக் மனதில் பெட்டி பெட்டி என்று கேட்கிறதாம். ‘உங்களுக்கு வயசாயிடுச்சு. உங்களைத்தான் முதலில் செக் பண்ணணும்’ என்று பெரியப்பாவிடம் சுனிதா சொன்னதை ரஜனி ரசிகர்கள் பார்க்காமல் இருந்திருக்க வேண்டும்.
முதல் பாடல் சவுந்தர்யாவிற்கு. கில்லி திரிஷா மாதிரி ஆடுவார் என்று பார்த்தால் எதையோ செய்தார். “அர்னவ் ரொம்ப வன்மத்தைக் கொட்டறார். நல்லாவே இல்ல” என்று சுனிதா தலைமையில் சில பெண்கள் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள். ‘லல்வுன்னு என் கிட்ட வந்தா தொலைச்சிடுவேன்’ என்று அர்னவ்வை எச்சரித்தார் சுனிதா.
‘அடியே கொல்லுதே’ பாடல் ஒலிக்க கிடாரை தூக்கிக் கொண்டு ஓடினர் அருண். அந்தப் பாடலுக்கு அவர் நடனம் ஆடிய விதம் ரசிக்கும்படியாக இருந்தது (நடன உதவி: விஷால்). சுவாசினியாக நடித்து இம்சிக்கும் ஜாக்கைப் பற்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘பெண்களை துரத்தறது மட்டும்தான் டாஸ்கா?’ என்று சாச்சனா கேட்டது ஒரு நல்ல கேள்வி. (சினிமாவில் அதுதானே பெரும்பாலும் இருக்கிறது!).
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலிருந்து தீம் மியூசிக் ஒலிக்க சிரமப்பட்டு நடனம் ஆடிய ரவி, ஒரு கட்டத்தில் முடியாமல் இறங்கி விட்டார். ‘உம் முயற்சியைக் கண்டு மெச்சினோம்’ என்று பிக் பாஸ் பாராட்டியதில் நெகிழ்ந்து விட்டார். தசாவதாரம் படத்திலிருந்து ‘முகுந்தா. முகுந்தா’ பாடல் ஒலிக்க, பவித்ரா சென்று ஆடியது நன்று. எந்தப் பாடல் போட்டாலும் அந்த vibe-க்கு செல்லும் சவுந்தர்யாவின் உற்சாகமும் பார்க்க சுவாரசியமாக இருந்தது. இந்தப் பாடலின் நடுவே பாட்டி வாய்ஸ் வரும் போது சாச்சனாவை விஷால் தள்ளிக் கொண்டு வந்தது காமெடி.
‘விளையாடு மங்காத்தா’ பாடல் ஒலிக்க, அவசரமே படாமல் கம்பீரமாக நிதானமாக நடந்து வந்து காரெக்டருக்கு சிறப்பு சேர்த்தார் சிவப்பு. அவர் ஆடிய நடனமும் சிறப்பு. தர்ஷாவும் ரியாவும் கூட ஆடி உதவி செய்தார்கள். இத்துடன் இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிக் பாஸ் அறிவிக்க மக்கள் பெருமூச்சு விட்டார்கள்.
லவ் டிராக் காரணமாக தர்ஷிகாவின் ஆட்டம் பின்னால் போகிறது’ என்று தர்ஷிகாவை அமர வைத்து பவித்ரா சொன்ன எச்சரிக்கை ஒரு நல்ல காட்சி. இதை மேற்கோள் காட்டி பவித்ராவைப் பாராட்டிக் கொண்டிருந்தார் சிவா. “நீ உப்பு போட்டுதான் சாப்பிடறியா?’ என்று டாஸ்க்கில் தர்ஷிகா கேட்டது, அவரது வீட்டாரை கஷ்டப்படுத்தியதாம். ஆனால் தர்ஷிகா மன்னிப்பு கேட்ட காட்சி வரவில்லை என்று வருத்தப்பட்டார்.
‘பிளேபாய்’ என்று சொல்லி விஷாலை கதற விட்ட சாச்சனா, அடுத்ததாக ஜாக்கை குறி வைத்திருக்கிறார் போலிருக்கிறது. முத்து - ஜாக்குலின் காம்பினேஷன் வெளியே வேறு விதமாக தெரிகிறது என்பதைப் போல் பற்ற வைத்து, அண்ணனை வில்லியிடமிருந்து காப்பாற்றுவது போல சாச்சனா சீன் போட, அதனால் மனம் வருந்திய ஜாக்குலின் ‘அவன் என் தம்பி’ என்று தீபக்கிடம் புலம்பினார். முத்து இதைப் பற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை. ‘நாம தப்பில்லை. கடந்து போயிடணும். அவ்வளவுதான்’ என்றார் அசால்ட்டாக.
‘என்ன ஆனாலும் பெட்டி எடுக்க மாட்டேன். முட்டி மோதி அடுத்த இடத்திற்கு போகத்தான் முயற்சி செய்வேன்.’ வர்ஷினியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜாக்குலின்.
வீட்டின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ என்கிற வாய்ஸ் ஓவர் வருகிற நேரத்தில் ‘விளக்கைப் போடுங்கடா’ என்று டீமிற்கு சொன்ன பிக் பாஸ், தர்ஷா, சாச்சனா, ரியா, வர்ஷினி, சிவா ஆகிய ஐந்து நபர்களையும் லிவ்விங் ஏரியாவிற்கு வரவழைத்தார். “என்ன இப்ப.. வெளில போறதா இருந்தா ஜாலியா போகலாம்” என்று சாச்சனா ஈஸியாக எடுத்துக் கொள்ள, ரியாவோ மாலை மாலையாக கண்ணீர் விட்டார்.
“எத்தனையோ முறை வார்ன் பண்ணிட்டேன். வெளியுலக விஷயங்களைப் பேசக்கூடாதுன்னு. கேக்க மாட்றீங்க. இது உங்களுக்கு கிடைத்த இன்னொரு வாய்ப்பு. (சாச்சனாவிற்கு மூன்றாவது). உருப்படியா பயன்படுத்திக்கங்க. இல்லைன்னா கிளம்புங்க” என்று அவர் கடுமையாக எச்சரிக்க, அனைவரும் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் சிவா மட்டும் விடியற்காலை வரை தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேயிருந்தது பரிதாபம்.
‘ஆடிய ஆட்டம் என்ன?’ இன்றும் தொடரும் போலிருக்கிறது. முத்து, தீபக் போன்றவர்கள் எல்லாம் டான்ஸ் ஆடுவதை பார்த்து தீர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.!