Arasan: `புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள்’ - அனிருத்தை வாழ்த்திய சிம்பு
Bison: ``எந்த நிகழ்வுகளும் உண்மையாகக் காட்டப்படவில்லை!" - ரிலீஸுக்கு முன் மாரி செல்வராஜ் அறிக்கை!
மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பைசன்' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.
அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் `பைசன்' திரைப்படம் என இத்திரைப்படம் தொடங்கிய நாள் முதல் பேசப்பட்டு வந்தது.
`பைசன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் மணத்தி கணேசனின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.

துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
படத்தின் டிரெய்லர் கடந்த திங்கட்கிழமை வெளியானதிலிருந்து இப்படத்தின் கதை தென்மாவட்டங்களில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தியது என இணையத்தில் பேசப்பட்டது.
நாளை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ``பைசன் (காளமாடன்) இத்திரைப்படம் எனது பால்யகால நாயகன் `மணத்தி' P. கணேசன் அவர்களின் வாழ்வையும் உழைப்பையும் கபடியையும் அவர் அடைந்த பெருவெற்றியையும் கருவாக வைத்து உருவாக்கப்பட்டது தான் என்றாலும் இத்திரைக்கதை பல தென்மாவட்ட இளைஞர்களின் வாழ்வையும் ஏக்கத்தையும் கனவையும் வலிகளையும் சேர்த்து புனையப்பட்ட ஒரு முழு புனைவு திரைக்கதையே ஆகும்.

ஆகவே இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் என இத்திரைக்கதையில் சித்தரிக்கப்பட்ட அனைத்தும் என் ஆன்மாவின் புனைவே தவிர யாரையும் எந்த நிகழ்வுகளையும் உண்மையாகக் காட்டப்படவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
பைசன் (காளமாடன்) என்பவன் நிச்சயம் ஒருவன் அல்ல, தென்மாவட்டத்தில் தன் இலக்கை நோக்கி பயணிக்கத் துடிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் சாயலை கொண்டவன்தான் என் காளமாடன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.