பிக் பாஸ் 8: 12வது வாரத்தில் வெளியேறக் காத்திருக்கும் போட்டியாளர்கள்!
Brain Rot என்பது என்ன? - இளைஞர்கள் 'விழித்துக்கொள்ள' வேண்டிய நேரமிது - எச்சரிக்கும் மனநல ஆலோசகர்!
சமூக வலைதளங்களில் அதிகமாக புலங்கத் தொடங்கியிருக்கும் வார்த்தை Brain Rot. இது ஆன்லைன் வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கும் தலைமுறையின் மனநலம், அறிவாற்றல் பாதிப்படைவதைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சொல்லாக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இந்த சொல்லை அறிவித்திருக்கிறது. Rot இதன் முக்கியத்துவம் என்ன, டெக்னாலஜியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இந்த வார்த்தையை தெரிந்து வைத்திருக்க வேண்டியது ஏன் என விரிவாக பார்க்கலாம்.
Brain Rot
நாம் எல்லாருமே மூளைக்குள் புகைமூட்டமாக இருப்பதுபோன்ற தெளிவற்ற நிலையை அனுபவித்திருப்போம். இரவு தாமதமாக தூங்கினால், நாள்கணக்கில் சரியான தூக்கம் இல்லாதபோது, அதிகப்படியாக மது அருந்திய அடுத்தநாள்கூட அப்படி இருக்கும்.
அந்த நேரத்தில் எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது, நாம் வேலை செய்யும் திறன் மங்கிவிடும், எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கடுப்பாக, கவலையாக, மந்தமாக, மனச்சோர்வுடனேயே காணப்படுவோம்.
இந்த காலத்தில் பலர் நன்றாக தூங்கி, மது அருந்தாமல் இருந்தாலும் இதே நிலையை அனுபவிக்கின்றனர். காரணம், நீண்ட நேரமாக மொபைல் அல்லது கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் எதையாவது பார்த்துக்கொண்டிருப்பது. இதைத்தான் பிரைன் ராட் என அழைக்கின்றனர். இன்றைய இளைஞர்களை இது வெகுவாக பாதித்துள்ளது. இது குறித்து மனநல ஆலோசகர் தேவகியிடம் பேசினோம்.
"பிரெயின் ராட்டை மருத்துவரீதியிலான பிரச்னையாக இதுவரை அங்கீகரிக்கவில்லை என்றாலும், இந்த பிரச்னை சமூகத்தில் இருப்பது உண்மை எனக் கண்டறிந்துள்ளனர்.
மணிநேரக் கணக்காக சமூக வலைதளங்களில் உலாவுவதும், மொபைல் ஸ்கிரீனை எந்த இலக்கும் இல்லாமல் ஸ்க்ரோல் செய்வதுமாக நாம் ஒரு நாளில் அளவுக்கு அதிகமான தகவல்களை பெற்றுக்கொள்கிறோம். ஆனால் அவை பெரும்பாலும் அர்த்தமே இல்லாத தகவல்கள். எதிர்மறை செய்திகள் மற்றும் பொய் செய்திகள் மனதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். செலிபிரிட்டிகளின் அதிக பணம் செலவு செய்து எடுக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். நீங்கள் பார்க்கும் மற்றவர்களின் வாழ்க்கைமுறையை உங்களுடன் ஒப்பிடுவதனால் மனவருத்தம் ஏற்படும். அரை மணிநேரம் சமூக வலைதளங்களில் சுற்றிவந்தாலே நம் மனம் பல்வேறு உணர்வுகளில் ஊசலாடிவிட்டிருக்கும். அதிக அளவிலான தகவல்களை அல்லது கண்டெண்ட்களை உள்வாங்கி கிரகிக்க முயலும்போது நாமக்கு தவிர்க்க முடியாத மனச்சோர்வு ஏற்படும். இதனால் நாம் உத்வேகம் இழக்க நேரிடும்.
பாஸிடிவ்வான உற்சாகம் தரக்கூடிய கண்டென்களை மட்டுமே பார்ப்பவன்/ள் நான் என்கிறீர்களா? நீங்கள் புலன்களுக்கு குளிர்ச்சியான ஒரு வீடியோபைப் பார்க்கிறீர்கள் என்றால் உங்களுக்கு டோபோமைன் என்ற மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும். நீங்கள் அதுபோன்ற வீடியோக்களைத் தொடர்ந்து பார்க்கும்போது மீண்டும் மீண்டும் டோபோமைன் சுரக்க முடியாமல் உங்களுக்கு ஒருவகை போதாமை ஏற்படும். அதனால் இன்னும் அதிக கண்டெண்ட்களைத் தேடுவீர்கள். இது உங்களை மொபைல் ஸ்கிரீனுக்கு அடிமையாக்கும். மொபைலுக்கு வெளியில் இருக்கும் எதிலுமே நாட்டம் இல்லாத மனநிலை ஏற்படும். கவனச் சிதறல், பணியில் தொய்வு என காலப்போக்கில் இது உங்கள் செயலாற்றலைக் குறைத்துவிடும்.
பிரைன் ராட்டால் ஏற்படும் பிற சிக்கல்கள்!
சமூக வலைதளங்களில் இருக்கும் ஒரு பிரச்னை FoMO - Fear of Missing Out. மற்றவர்களுக்கு தெரிந்த ஒன்று நமக்குத் தெரியாதபோது, நாம் சமூகத்துடன் ஒத்திசைந்து வாழவில்லை என்ற பயம் ஏற்படும். இது மனதில் பதட்டத்தை (Anxiety) உருவாக்கும். இதுவும் நமக்கு அடிக்ஷனை ஏற்படுத்தும். இப்போதெல்லாம் உறக்கத்தின்போது கூட மொபைலை அருகில் வைத்துக்கொள்கின்றனர். தூக்கத்தின் நடுவில் கூட எழுந்தாலும் எதாவது மெஸ்ஸேஜ் வந்திருக்கிறதா எனப் பார்க்கின்றனர்.
"இரவில் மொபைல் பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அது நம் உயிரியல் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவே பல உடல், மன நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
பிரைன் ராட் நம் தினசரி வாழ்வில் அடிமையாதல் (Addiction), மன பதற்றம் (Anxiety), மன அழுத்தம் (depression), தனிமை (Loneliness) என அடுக்கடுக்காக பிரச்னைகளை உருவாக்கும் சாத்தியங்கள் உள்ளது.
வாழ்க்கை முறை பிரச்னைகள்...
நீங்கள் மெட்ரோவிலோ அல்லது ரயிலிலோ போகம்போது பார்த்தால் மக்கள் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளாமல் தனித்தனியாக மொபைலை பார்த்துக்கொள்கின்றனர். நண்பர் கூட மொபைலைப் பார்த்துதான் பேசிக்கொள்கின்றனர். 'people have alienated themself from people'. ஒரே வீட்டில் வாழும் கணவன் மனைவி 'சாப்பிட வாங்க' என மெஸ்ஸேஜில் அழைத்துக்கொள்ளும் நிலை இருக்கிறது. குழந்தைகள் கையிலும் மொபைலை கொடுக்கின்றனர், கிட்டத்தட்ட எல்லாருமே தனிமையில் தள்ளப்பட்டுவிட்டனர்.
ஒரு குழந்தை ஒரு விஷயத்தை பேப்பரில் பார்பதற்கும், நேரில் பார்பதற்கும், மொபைலில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. சின்ன வயதில் நாம் என்ன விதைக்கிறோமோ அதுதான் நம் ஆளுமையாக வளரும். இன்றைய குழந்தைகள் வயதுக்கு மீறிய விஷயங்களை மொபைலில் பார்க்க நேர்கிறது. குடும்ப சூழல், பெற்றோர், பள்ளி, சுற்றம், ஆசிரியர்கள் எல்லாமும் சரியாக இருந்தாலும் மொபைலில் இருக்கும் உலகம் மோசமானதாக இருக்கும்பட்சத்தில் அதுவே குழந்தையின் ஆளுமையை அதிகம் பாதிக்கும்.
அதிக நேரம் மொபைலில் நாம் பார்க்கும் தகவல்களில் பெரும்பாலனவை நமக்குத் தேவையில்லாதவையே. இவை நமது மூளைக்கு போலியான மகிழ்வை அல்லது பொழுதுபோக்கை அளித்து நம் அறிவாற்றலை மந்தப்படுத்தும்.
'power of makeup' என ஒரு வீடியோ பரவியது அதில் அடர்த்தியான நிறம் கொண்ட பெண்ணை பல லேயர் மேக்கப்கள் செய்து பொலிவான பெண்ணாக காட்டுகிறார்கள். இது பார்க்க நேர்மறையான வீடியோ போலத் தோன்றினாலும், இதைப் பார்க்கும் நம் ஊர் பெண்களுக்கு எவ்வளவு எதிர்மறை எண்ணங்கள் தோன்றி மறைந்திருக்கும்?
எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்?
அதீதமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். யூடியூபில் நீண்ட நேரம் வீடியோ பார்ப்பது, சமூக வலைதளங்களை ஸ்க்ரோல் செய்வது, இணையத்தில் மாறி மாறி பல விஷயங்களைத் தேடுவது, அடிக்கடி மெஸ்ஸேஜ் வந்திருக்கிறதா என சோதிப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றைச் செய்யும்போது நீங்கள் உங்கள் மூளையை அளவுக்கதிகமாக தூண்டுகிறீர்கள். டிஜிட்டல் உலகின் தகவல் வெள்ளத்தில் மூழ்கும்போது நீங்கள் பிரெய்ன் ராட் ஆகிறீர்கள்.
சமூக வலைதள போதை இருப்பவர்கள் அடிக்கடி சமூக வலைதளங்களை செக் செய்யும் பழக்கம் கொண்டிருப்பர். இதை நிறுத்த முயற்சிக்கும்போது மனதில் ஒருவகை அமைதியின்மை ஏற்பட்டு மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் உலவும் நிலை ஏற்படும்.
இந்த பிரச்னைகளிலிருந்து வெளியேறுவது கடினம் என்றாலும், அதற்கான சிறந்த தருணம் இதுதான்.
Brain Rot -லிருந்து வெளியேறுவதெப்படி?
உங்கள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டரில் செலவழிக்கும் நேரத்தை (ஸ்கிரீன் டைம்) திட்டமிட்டு குறைக்க தயாராக வேண்டும்.
கேம் விளையாடுவது, சமூக வலைதளங்களைப் பார்ப்பது, இணையத்தில் தேடுவது என எந்தெந்த விஷயத்துக்கு அதிக நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதை கண்டறிய வேண்டும். இதற்கு டிஜிட்டல் வெல்பீயிங் போன்ற செயலிகள் உள்ளன.
பயன்படுத்தும் ஒவ்வொரு செயலியிலும் ஸ்கிரீன் டைம் செட் செய்ய வேண்டும். செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு நோட்டிஃபிகேஷனை ஆஃப் செய்ய வேண்டும். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக இருந்தாலும் உங்களுக்கு அவசியமில்லை எனில் அதை நீக்கி விடவும். தூங்குவதற்கு முன் மொபைலை எடுக்கக் கூடாது.
நீங்கள் சமூக வலைதளங்களில் என்ன காண்கிறீர்கள் என்பதை கவனத்துடன் தேர்ந்தெடுங்கள். அடிக்கடி பதட்டம் மற்றும் எதிர்மறை உணர்வுகளைத் தூண்டும் பக்கங்களை அன்ஃபாலோ செய்யுங்கள். ஒரே வகையாக இல்லாமல் பலவகை செய்திகள் பெரும்படி ஊடகங்களை ஃபாலோ செய்யுங்கள்.
நீங்கள் உங்களது ஸ்கிரீன் டைமை குறைக்கத் தொடங்கி விட்டாலே மாற்றங்களை உணர ஆரம்பிப்பீர்கள். உங்கள் தூக்க சுழற்சி சரியானாலே பல உடல், மன சிக்கல்கள் விலகத்தொடங்கும்.
இந்த மாற்றத்தை ஏற்படுத்த உங்களுக்கு சுய-ஒழுக்கம் (Personal discipline) அவசியம். எவ்வளவு நேரம் ஸ்கீன் பார்க்க வேண்டும் என்பதை தொடக்கத்தில் கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.
இப்போதெல்லாம் யாருக்கும் மொபைலைத் தாண்டிய பொழுதுபோக்கு நடவடிக்கைகள் எதுவுமில்லை. குறைந்தபட்சம் நாம் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும். காடு, மலை என செல்ல வேண்டிய அவசியமில்லை. பீச்சுக்கு செல்வது மொட்டை மாடியில் நிற்பது, பார்க்குக்கு செல்வது, கோவிலுக்கு செல்வது போன்ற பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெறும் காலில் பீச்சிலோ, கோவிலிலோ நடப்பது நமக்கு இதமளிக்கும்.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் குறித்த விழிப்புணர்வு வேண்டும். பக்கத்து வீட்டுக்காரர்களிடமாவது பேச வேண்டும். குடும்ப உறவுகளை பாதுகாக்க வேண்டும். சித்தப்பா-சித்தி, அத்தை-மாமா போன்ற உறவினர்களை மாதம் ஒருமுறையாவது சந்திக்க வேண்டும். கிரியேட்டிவாக ஓவியம் வரைதல் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
காலை எழுந்தவுடன் மொபைலைக் கையில் எடுக்காமல் 90 நிமிட சுழற்சியை மேற்கொள்வது உதவும். 90 நிமிட சுழற்சி என்றால் 30 நிமிடம் உடற்பயிற்சி, 30 நிமிடம் தியானம் அல்லது யோகா, 30 நிமிடம் அந்த நாளுக்கான திட்டமிடல் மற்றும் நேற்று நடந்த நல்ல விஷயங்களை எழுதுதல். தினமும் காலையில் 90 நிமிடங்கள் ஒதுக்க முடியாதவர்கள் 30 நிமிடங்கள் ஒதுக்கி 10, 10 நிமிடங்கள் செய்தால் கூட போதும்.
நம்மால் எதையெல்லாம் மாற்ற முடியாதோ அதற்காக வருத்தப்படமால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மூளைக்கு ஒரே மாதிரியான தூண்டுதலை அளவுக்கதிகமாக கொடுக்காமல், விதவிதமான தூண்டுதல்களை வழங்க வேண்டும். வழக்கமான பாதையில் அல்லாமல் வேறு பாதையில் அலுவலகத்துக்கு செல்லுதல், ஒரு நாள் ரயிலில் அல்லாமல் பஸ்ஸில் செல்லுதல், வழக்கமான கடைகளுக்கு பதில் வெவ்வேறு கடைகளுக்குச் செல்லுதல் என மூளையை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்.
உங்களுக்கான சின்ன சின்ன சவால்களை வைத்துக்கொள்ளுங்கள். கோலம் போடுவதைக்கூட இந்த மாதத்தில் (மார்கழி) சவாலாக கொண்டு செய்யலாம். நம் மூளை ஒரு அதிசயமான உறுப்பு, அது சாகும்வரை புதிதாக கற்றுக்கொண்டே இருக்கும். மூளையை சோர்வடைய விடாமல் வைத்திருக்க பழைய விளையாட்டுகள் எல்லாம் பெருமளவு உதவும். குழந்தைகளை பாண்டி, கேரம், லெமன் இன் த ஸ்பூன் போன்ற விளையாட்டுகள் விளையாட ஊக்குவியுங்கள். இதனால் கண்ணுக்கும் மூளைக்குமான ஒத்திசைவு சரியாக ஆரோக்கியமானதாக இருக்கும். நீங்கள் ஆரோக்கியமாகவும் தெளிவாகவும் வாழ உங்கள் சுயக்கட்டுப்பாடும், ஸ்கிரீனுக்கு வெளியே கிடைக்கும் பழக்கங்களும் உதவும்.