பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?
CT: `BCCI-க்கு முன் பாகிஸ்தான் இந்த `முடிவு' எடுக்க வேண்டும்' - முன்னாள் கேப்டன் அறிவுரை
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் சூழலில், தாங்கள் அங்கு செல்ல மட்டோம் என்பதில் இந்திய அணி உறுதியாக இருப்பதால், ஐ.சி.சி தரப்பிலிருந்து போட்டி அட்டவணை உட்பட எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், இந்திய அணி தங்கள் நாட்டுக்கு வந்து விளையாட வேண்டும் எனத் தொடர்ந்து கூறிவருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய அணியும் விராட் கோலியும் பாகிஸ்தானில் விளையாட விரும்புவதாகவும், அந்நாட்டு அரசு அதைத் தடுப்பதாகவும் வெளிப்படையாகப் பேசினார். இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப், ``சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.
சமீபத்திய நிகழ்ச்சியொன்றில் பேசிய ரஷீத் லத்தீஃப், ``இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுப்பதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுக்க வேண்டும். சாம்பியன்ஸ் டிராபி இனி நடக்கக் கூடாது. ஆப்கன் போராக இருந்தாலும் சரி, கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, எப்போதும் நாங்கள்தான் பலிகடாக்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராகப் போராட முடியாது. அவர்கள் பாகிஸ்தானைத் தள்ளுவதற்கான வாய்ப்பிருக்கிறது. நாங்கள் கைகோர்த்து அதற்கு எதிராகப் போராடுகிறோம். ஆனால், இந்தியா இதைப் புறக்கணித்தால், நாங்கள் எங்கே நிற்போம் என்பதுதான் ஒரேயொரு அச்சம்." என்று தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடக்குமா நடக்காதா, இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடத்தப்படுமா, பாகிஸ்தான் அதற்கு ஒப்புக்கொள்ளுமா, இல்லையென்றால் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் மொத்தமாக வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்பதற்கெல்லாம் ஐ.சி.சி வாய் திறந்தால் மட்டும்தான் பதில் கிடைக்கும்.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...