`ஏடிஎம் இயந்திரத்தில் பல மடங்கு லாபம்'- பிரபலங்களை வைத்து `பலே' மோசடி; கோவையில் ...
Cyber Crime: பேஸ்புக் காதலி சொன்ன ஆசை வார்த்தை; 74 வயது முதியவர் ரூ. 3 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?
மும்பையில் வசிக்கும் 74 வயது முதியவர் ஒருவர் ஃபேஸ்புக் காதலி சொன்ன ஆலோசனையைக் கேட்டு ரூ.3.7 கோடியை இழந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 74 வயது முதியவருக்கு ஃபேஸ்புக் மூலம் திவ்யா சர்மா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் பேஸ்புக் மூலம் சாட்டிங் செய்துகொண்டனர். அதன் பிறகு மொபைல் போன் நம்பர்களைப் பகிர்ந்து கொண்டனர். இது அவர்களுக்குள் நட்பைத் தாண்டிக் காதலாக மாறியது.
திவ்யா தான் டெல்லியைச் சேர்ந்த பொனாஷா ஸ்டோரில் வேலை செய்வதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 20 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். அதோடு அவர் சொன்ன நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான பதிவு லிங்க் ஒன்றையும் திவ்யா முதியவருக்கு அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து முதியவர் ஜூலையில் இருந்து செப்டம்பர் வரை அப்பெண் சொன்ன நிறுவனத்தில் ரூ.3.7 கோடி அளவுக்கு முதலீடு செய்தார்.

அவர் முதலீடு செய்த தொகை ரூ.8.8 கோடியாக அதிகரித்து இருப்பதாக வெப்சைடில் காட்டியது. இதனால் அந்தப் பணத்தை எடுக்க முதியவர் முயன்றார். ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை.
அதனை எடுக்க பல்வேறு வகையான வரிகளைச் செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் முதலீடு செய்த கம்பெனி ஊழியர்கள் யாரும் போனை எடுக்கவில்லை. இதனால் முதியவர் தனது பேஸ்புக் காதலி திவ்யாவிடம் இது குறித்து தெரிவித்தார்.
அதற்கு திவ்யா நமக்குள் இருக்கும் உறவு குறித்து உங்களது குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவிப்பேன் என்று கூறி மிரட்டினார். அதோடு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் மிரட்டினார். இதையடுத்து முதியவர் இது குறித்து தனது மகனிடம் தெரிவித்தார்.
அவரது மகன் முதியவர் முதலீடு செய்த கம்பெனி குறித்து விசாரித்தபோது அது போலியானது என்று தெரிய வந்தது. இதையடுத்து இது குறித்து முதியவர் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைன் மோசடியால் கல்லூரி மாணவர் தற்கொலை
மும்பை காட்கோபர் பகுதியில் வசித்து வந்த விவேக் (20) என்ற மாணவர் ஆன்லைன் மோசடியால் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அம்மாணவனின் தந்தை போலீஸில் புகார் செய்துள்ளார்.
மாணவனின் தந்தை விஜய் இது தொடர்பாக ரயில்வே போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ''என் மகன் கிரிப்டோகரன்சி டிரேடிங் ஆப் ஒன்றைப் பதிவிறக்கம் செய்து அதில் முதலில் ரூ. 3 ஆயிரம் முதலீடு செய்தார். அது இரண்டு மடங்காகக் கிடைத்தது. அதன் பிறகு ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் ரூ.6 லட்சம் கிடைக்கும் என்று சொன்னார்கள்.
எனது மகன் என்னிடம் பணம் வாங்கி ரூ. 4 லட்சம் வரை முதலீடு செய்தான். ஆனால் ஒரு முறை ரூ.1.2 லட்சத்தைச் சம்பந்தப்பட்ட கம்பெனி சொன்ன வங்கிக்கணக்கிற்கு அனுப்பியபோது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாகக் கூறி பணம் திரும்ப வந்துவிட்டது.

அப்போது என் மகனிடம் ஏற்கனவே முதலீடு செய்த பணம் பறிபோய்விட்டதாகச் சொன்னேன். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்குச் சென்ற என் மகன் வெளியில் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றான். அதன் பிறகு வரவேயில்லை. அவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்'' என்று தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மொபைல் செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விஜய் போலீஸாருக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்.