Dhoni : 'தோனிங்ற ஒரு ஆளுக்கு அவ்ளோ மாஸா?' - வியக்கும் ஆஸ்திரேலிய வீரர்!
ஐ.பி.எல் போட்டிகளில் தோனிக்கு கிடைப்பதைப் போன்ற வரவேற்பை நான் இதற்கு முன் வேறு எங்குமே கண்டதில்லை என வியந்து பேசியிருக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேஸர் மெக்கர்க்.
ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் ஐ.பி.எல்-இல் டெல்லி அணிக்காக ஆடி வரும் வீரர். கடந்த சீசனில் 9 போட்டிகளில் ஆடி 330 ரன்களை எடுத்திருந்தார். இதில், ஹைலைட் அவரின் ஸ்ட்ரைக் ரேட்தான். 230 க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். அதிரடியாக ஆடி எதிரணியின் பௌலர்களை துவம்சம் செய்தார். மெகா ஏலத்தில் கடுமையான டிமாண்டை ஏற்படுத்தப்போகும் வீரராக இருப்பார். இவர்தான் இப்போது தோனியைப் பற்றி வியந்து பேசியுள்ளார்.
அவர் பேசியிருப்பதாவது, 'டெல்லி அணிக்காக எங்களின் ஹோம் கேம்களை விசாகப்பட்டினத்தில் ஆடினோம். எங்களின் ஹோம் என்பதால் மைதானம் முழுவதும் நீல நிற ஜெர்சிக்களாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், ரசிகர்கள் அத்தனை பேரும் தோனி 7 என பொறிக்கப்பட்ட மஞ்சள் ஜெர்சியை அணிந்து வந்திருந்தனர். அதுவே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
தோனி பெவிலியனிலிருந்து வரும்போது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் போன்று நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. நான் என் காதுகளை பொத்திக் கொண்டேன். அதன்பின் உள்ளே வந்து அவர் ஒரு சிக்சரை அடித்தார்.
அப்போது எழும்பிய ஆரவாரம் இன்னும் பெரிதாக இருந்தது. என் வாழ்நாளில் அப்படிப்பட்ட வரவேற்பையும் ஆரவாரத்தையும் நான் பார்த்ததே இல்லை. ஒரே ஒரு வீரருக்காக இவ்வளவு அன்பும் செலுத்தப்படுகிறது என்பதை நம்பவே முடியவில்லை. ஐ.பி.எல் இல் என்னுடைய செயல்பாட்டை கடந்து எனக்கு மிக நெருக்கமான தருணமென்றால் இதுதான்.' என்றார்.