"இந்து அல்லாதோர் வீட்டுக்குச் சென்றால் பெண்களின் காலை உடையுங்கள்" - பாஜக Ex. MP ...
Doctor Vikatan: இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு; ஆஞ்சியோ, சிடி ஆஞ்சியோ எது பெஸ்ட்?
Doctor Vikatan: இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதை ஆஞ்சியோகிராம் மூலம் கண்டுபிடிக்கிறோம். இந்த டெஸ்ட்டுக்கு பதில் சிடி ஆஞ்சியோ செய்யலாம், ஸ்கேன் மாதிரி சுலபமான டெஸ்ட் அது என்கிறார்களே! அது உண்மையிலேயே துல்லியமானதுதானா? அது பற்றி விளக்கவும்.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

ஆஞ்சியோகிராம் என்பது இதயத்தின் ரத்தக்குழாய்களில் நேரடியாக கான்ட்ராஸ் டை (Contrast dye ) எனப்படும் திரவத்தைச் செலுத்தி, எக்ஸ்ரே போன்ற மெஷினை வைத்துப் பார்த்து, மேற்கொள்ளப்படுகிற சோதனை. இது மிகவும் துல்லியமானது.
ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், ரத்தக்குழாய் அடைப்பு அதிகமாக இருப்பது தெரிந்தால், பலூன் வைத்து அந்தக் குழாயை விரிவுபடுத்தி, ஸ்டென்ட் எனப்படும் உலோக கருவியை உள்ளே பொருத்திவிடுவார்கள். இதை ஆஞ்சியோபிளாஸ்டி என்கிறோம். எனவே, ஆஞ்சியோகிராம் செய்கிறபோது, உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டியும் செய்துவிட முடியும்.
பிபி, சுகர், கொலஸ்ட்ரால், குடும்ப பின்னணியில் உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள், இதயத்தின் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரிந்தவர்கள், அடிக்கடி நெஞ்சுவலியை உணர்பவர்கள், எக்கோ பரிசோதனையில் மாறுதல்கள் இருப்பவர்கள் போன்றோருக்கெல்லாம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்வதுதான் சரியானது.
ஏனென்றால், டெஸ்ட் செய்த உடனேயே அதற்கான தீர்வையும் காண முடியும்.

அதுவே, ஒரு நபருக்கு 35-40 வயதுதான் ஆகிறது, இசிஜியில் மாறுதல்கள் தெரிகின்றன, வலியும் இருக்கிறது, பிபி, சுகர போன்ற ரிஸ்க் காரணிகள் இல்லாதவர், குடும்ப பின்னணியில் இதய நோய் இல்லாதவர் என்ற நிலையில், இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.
அப்படிப்பட்டவர்களுக்கு சிடி ஆஞ்சியோ டெஸ்ட் செய்து பார்க்கலாம். இது ஸ்கேன் செய்வது போன்ற எளிமையான பரிசோதனைதான். இதற்காக மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டியதில்லை. புறநோயாளியாகவே சென்று டெஸ்ட் செய்து கொண்டு வீடு திரும்பலாம்.
இந்த டெஸ்ட்டுக்கு முன் கையில் இன்ஜெக்ஷன் ஒன்று போடுவார்கள். பிறகு இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம்.
சிடி ஆஞ்சியோவில் நார்மல் என ரிசல்ட் வந்தால், அது 99.5 சதவிகிதம் நம்பகமானது. அதுவே, அடைப்பு இருப்பதாக ரிசல்ட் வந்தால், அது 70 முதல் 75 சதவிகிதம்தான் நம்பகமானது. எனவே, அடைப்பு இருப்பது உறுதியானால், ரெகுலர் ஆஞ்சியோதான் செய்ய வேண்டியிருக்கும்.

எனவே, அடைப்பு இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே சிடி ஆஞ்சியோ பரிசோதனையைப் பரிந்துரைப்போம்.
மற்றவர்களுக்கு மருத்துவமனையில் அட்மிட் ஆகி, கைவழியே ஊசி போடப்பட்டு, இன்வேசிவ் முறையில் ரெகுலர் ஆஞ்சியோ செய்வதுதான் சிறந்தது. இதற்காக 4 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.