Diwali: குழந்தைகளுக்குக் கிடைத்த தீபாவளி காசு; என்ன செய்யலாம்?
"இந்து அல்லாதோர் வீட்டுக்குச் சென்றால் பெண்களின் காலை உடையுங்கள்" - பாஜக Ex. MP பேச்சால் சர்ச்சை
மத்திய பிரதேசம் மாநிலத்தின், முன்னாள் போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. அவர் பெற்றோர்கள், தங்கள் மகள்கள் இந்து அல்லாதோர் வீடுகளுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் மீறினால் அவர்களின் காலை உடைக்க வேண்டுமென்றும் பேசியிருக்கிறார்.
இந்த மாத தொடக்கத்தில் போபாலில் ஆன்மிக நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பிரக்யா, பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் பிள்ளைகளுக்கு 'உடல்ரீதியான' தண்டனைகளை வழங்க வேண்டும் எனக் கூறினார்.

"உங்கள் மனதை வலிமைப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்களுக்கு கீழ்படியவில்லை என்றால், இந்து அல்லாதவரின் வீட்டுக்குச் சென்றால், மறுசிந்தனைக்கு இடமின்றி அவள் காலை உடையுங்கள். பெற்றோர் சொல்வதைக் கேட்காத, சொற்களுக்குக் கீழ்படியாதவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
உங்கள் குழந்தைகளின் நன்மைக்காக அவர்களை அடிக்க வேண்டியிருந்தால் அதிலிருந்து பின்வாங்காதீர்கள். பெற்றோர்கள் அப்படிச் செய்வது குழந்தைகளின் நன்மைக்காகத்தான். அவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து காப்பதற்காக" எனப் பேசியுள்ளார் அவர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டுள்ளது.
மேலும் அதில், "மதிப்புகளைப் பின்பற்றாத, பெற்றோரின் பேச்சைக் கேட்காத, பெரியவர்களை மதிக்காத பெண்கள் வீட்டை விட்டு ஓடிப்போகத் தயாராக இருப்பவர்கள்... அவர்களைக் கண்காணியுங்கள்" என்றும் கூறியுள்ளார்.

பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்வினையாற்றியுள்ளனர்.
விமர்சனம்
குறிப்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பூபேந்திர குப்தா, "மத்தியப் பிரதேசத்தில் ஏழு வழக்குகளில் (மத மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள்) மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கும்போது, ஏன் இவ்வளவு சத்தமும் வெறுப்பும் பரப்பப்படுகிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.