GST 2.0: ரியல் எஸ்டேட்டிற்கு இனி சூப்பர் எதிர்காலம்; வீடு வாங்கினாலும், கட்டினால...
புதுக்கோட்டை புல்வயல் பாலதண்டபாணி திருக்கோயில் : சங்கடம் தீர்க்கும் குமரமலை சங்கு தீர்த்தம்!
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதற்கேற்ப தமிழகத்தின் மலைத்தலங்கள் பலவற்றிலும் முருகப்பெருமானின் திருக்கோயில்கள் பல அமைந்துள்ளன. மலைகளில் சிறந்தது பழநி மலை என்பார்கள்.
அந்தப் பழநி மலையில் கோயில் கொண்டு அருளும் பால தண்டாயுதபாணியை ஒருமுறை சென்று வழிபட்டால் கிடைக்கும் வரங்கள் ஏராளம். அப்படிப்பட்ட பழநிக்கு இணையான தலங்கள் பல நம் தேசத்தில் உள்ளன. அவற்றில் முக்கியமானது குமரன் மலை. இதைக் குமரமலை என்றும் சொல்வார்கள்.
புதுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது புல்வயல் கிராமம். இந்தக் கிராமத்துக்கு அருகே காணப்படும் குன்றின் மீது அமைந்திருக்கிறது, குமரன்மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில் ஆகும்.

பார்ப்பதற்கு மிகச்சிறிய மலையாகத் தோற்றமளித்தாலும் இந்த மலையின் புகழும் மகிமையும் பெரியது. இங்கே சுவாமி பால தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார்.
பாலதண்டாயுதபாணியை சக்தி வாய்ந்த தெய்வம் என்று போற்றுகிறார்கள் இந்த ஊர் மக்கள். இவர், பழநி மலை முருகனுக்கு நிகரானவராக அருள்வதால் இத்தலமே பழநிக்கு நிகரானது என்றும் போற்றுகிறார்கள்.
இதை உறுதிப்படுத்தும்விதமாகப் பல சம்பவங்கள் இந்தத் தலத்தில் நிகழ்ந்துள்ளன.
முருகப் பெருமானின் தீவிர பக்தர் சேதுபதி என்பவர். அவர் சிறுவயதிலிருந்தே வருடந்தோறும் தவறாமல் பழநிக்குப் பாத யாத்திரை செல்லும் பழக்கம் உடையவர். எப்போதும் அந்த முருகனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பவர். அவரின் பக்தியை சோதிக்க விரும்பினார் முருகப்பெருமான்.
ஒருமுறை அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அது பழநிக்குப் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டிய காலம். ஆனால் அவர் உடல் நிலை ஒத்துழைக்காது என்றும் எனவே பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் பலரும் கூறினர். ஆனால் சேதுபதியோ என்ன ஆனாலும் அந்த பாலதண்டபாணியியை தரிசித்தே தீருவேன் என உறுதிபூண்டார். தள்ளாத நிலையிலும் தன் பயணத்த் தொடர்ந்தார். உடல் சோர்ந்தது. கண் இருண்டது. சுயநினைவின்றி ஒரு மலையடிவாரத்திலேயே, 'முருகா' என்று சொல்லியபடிமயங்கி விழுந்தார்.
முருகன் மனம் இரங்கினார். அவரது கனவில் தோன்றி, “இந்தக் குன்றின்மீதும் நானே குடியிருக்கிறேன். எனது அருள் நிறைந்த அந்த இடத்திலேயே என்னை வேல் வைத்து இனி வழிபடு” என்று கூறி மறைந்தார்.

முருகன் கூறியபடியே மலைமீது ஏறிச் சென்ற சேதுபதி வேல் ஒன்றை நட்டு முருகப்பெருமானை வழிபடத் தொடங்கினார். அந்தக் குன்றே இப்போது குமரன் மலை எனப்படுகிறது. பிற்காலத்தில் அவர் வழிபாடு செய்த இடத்திலேயே கோயில் எழுப்பப்பட்டது.
மலைமீது அழகுமிளிர அருள்புரிகிறார் பால தண்டாயுதபாணி. பழநி முருகன் இடக்கையை இடுப்பில் வைத்தபடி அருள்வார். இந்தக் கோயிலின் முருகனோ இடக்கையைத் தொங்கவிட்டபடி அருள்கிறார்.
பழநி மலைக்குச் செல்ல முடியாதவர்கள் குமரமலை தண்டாயுதபாணியை வணங்கிச் செல்கிறார்கள். குமரமலை முருகனை வேண்டிக்கொண்டு, இங்குள்ள சங்கு தீர்த்த நீரைப் பருகினால் வாத நோய் உள்ளிட்ட தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. வாத நோய் தீர்ந்தால், பாதம் அடித்து வைக்கிறோம் என்று வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். மலைப் படிக் கட்டுகளில் தென்படும் பாதச்சுவடுகள் பக்தர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறியதைத் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் தங்கள் வளைகாப்பின்போது கோயில் அர்த்த மண்டபத்தில் உள்ள வேலுக்கும் வளையல் சாத்தி வழிபடுகிறார்கள். இதனால், சுகப் பிரசவம் கிட்டும் என்பது நம்பிக்கை.
சுற்றியிருக்கும் பல கிராமங்களிலிருந்தும் பாதயாத்திரையாக வந்து பாலதண்டாயுதபாணியின் அருளைப் பெறுகிறார்கள் மக்கள்.
திங்கள்கிழமை, அமாவாசை, விசாகம் நட்சத்திரம், கார்த்திகை நட்சத்திரம் ஆகிய நாள்களில் விரதமிருந்து முருகப் பெருமானை வணங்கினால் நினைத்த காரியங்கள் யாவும் நடைபெறும். சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும், சகல சௌபாக்கியங்கள் யாவும் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.
முருகப்பெருமான் வரங்களை வாரி வழங்கும் வள்ளலாக இத்தலத்தில் அருள்பாலிப்பதால் மக்கள் இந்த பால தண்டபாணியைப் போற்றி வழிபடுகிறார்கள்.
இயற்கை எழில் சூழ்ந்த இந்தத் தலத்துக்கு ஒருமுறை வந்து சென்றாலே வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வசமாகும்.