ஆந்திரா: தன்னைக் கடித்த பாம்பை போதையில் திரும்பக் கடித்துத் துப்பிய நபர்; உயிருக...
Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போனால் சூடான எண்ணெய் விடுவது சரியா?!
Doctor Vikatan: தூங்கும்போது சில நேரங்களில் காதுக்குள் பூச்சி புகுந்துவிடுவது நடக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் காதுக்குள் சூடான எண்ணெய் விட்டால் பூச்சி வெளியே வந்துவிடும் என்கிறார்களே, அது சரியா... பூச்சி போனால் வேறு ஏதேனும் பிரச்னை வருமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.

காதுக்குள் பூச்சி சென்றுவிட்டால் அதற்கான சரியான தீர்வு, காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் சென்று அதை அப்புறப்படுத்துவதுதான். அது நடைமுறையில் சாத்தியம் இல்லாதபோது முதலுதவி செய்து நிவாரணம் பெறலாம்.
மிதமான சூடுநீரில் உப்பு கலந்து காதுக்குள் விடலாம் அல்லது மிதமான சூட்டில் சுத்தமான எண்ணெய் விடலாம். நீர் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். அதிகம் சூடு இல்லாமல் இருப்பது மிக அவசியம். இவ்வாறு செய்வதால் பூச்சி வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்; அப்படி பூச்சி வெளியேறாவிட்டாலும் அது இறந்து விடுவதால் காது ஜவ்வைக் கடிப்பது போன்ற தொந்தரவுகள் ஏற்படாது. மருத்துவரிடம் சென்று காண்பிக்கும் வரை நமக்கு சிறிது நேரம் கிடைக்கும்.

காதிலிருந்து சீழ் அல்லது நீர் ஏற்கெனவே வந்திருந்தாலோ அல்லது காது ஜவ்வில் ஓட்டை இருப்பது மருத்துவர் மூலம் தெரிந்திருந்தாலோ, காதுக்குள் நீர் அல்லது எண்ணெய் ஊற்றாமல் இருப்பது மிக அவசியம். மருத்துவர் பரிந்துரையின் பேரில் வாங்கிவைத்த, காதுக்குள் விடும் சொட்டு மருந்து இருந்தால் அதை எமர்ஜென்சியாக பயன்படுத்தலாம்.
காதுக்குள் பூச்சிகள் செல்வதால் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எறும்பு, சின்ன வண்டு போன்ற பூச்சிகள் காதுக்குள் சென்று காது ஜவ்வு அல்லது சருமப் பகுதியைக் கடிப்பதால் வலி அல்லது ரத்தக் கசிவு ஏற்படலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.