நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!
Doctor Vikatan: நாளுக்கு நாள் அதிகரிக்கும் மூட்டுவலி; Uric Acid அதிகரித்தது தான் காரணமா?
Doctor Vikatan: என் வயது 43. கடந்த சில மாதங்களாக மூட்டுகளில், கால்களில் வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் எடுத்தும் குணம் தெரியவில்லை. பிளட் டெஸ்ட் செய்து யூரிக் ஆசிட் அளவை சரிபார்க்கும்படி சொல்கிறாள் என் தோழி. யூரிக் ஆசிட் என்பது என்ன... யூரிக் அமிலத்துக்கும் மூட்டுவலிக்கும் தொடர்பு உண்டா...?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

யூரிக் ஆசிட் (Uric Acid) என்பது நம் உடலின் இயற்கையான கழிவுப்பொருள். இது நாம் சாப்பிடுகிற உணவுகளிலிருந்தும் வரலாம். குறிப்பாக, அசைவ உணவுகள், ஆல்கஹால் போன்றவற்றில் இருக்கலாம். உயிரணுக்கள் டிஎன்ஏ மற்றும் ஆர்என்வின் கட்டுமானத் தொகுதிகளை உருவாக்கப் பயன்படுத்தும் இரண்டு ரசாயன சேர்மங்களில் ஒன்று பியூரின் (Purine). அது உடைக்கப்படும்போதும் யூரிக் ஆசிட் உருவாகும்.
யூரிக் ஆசிட் என்பது நம் சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் வழியே வெளியேறிவிடும். அதன் மூலம் உடல், யூரிக் அமிலத்தின் அளவை சரியான அளவில் தக்கவைக்கும். சிலருக்கு மரபியல் காரணமாக இயல்பிலேயே அளவுக்கதிக யூரிக் அமிலம் சுரக்கும் அல்லது யூரிக் அமிலத்தை அவர்களால் முழுமையாக வெளியேற்ற முடியாமல் இருக்கும். யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது அது படிகங்களாக உருமாறி, எலும்பு மூட்டுகளில் போய் சேர்ந்துகொள்ளும். அந்த நிலையை 'கௌட்' (Gout) என்கிறோம். பொடாக்ரா (podagra) என்ற இந்தப் பிரச்னை பொதுவாக பெருவிரலை பாதிக்கிறது. இதனால் வலி அதிகமாக இருக்கும்.
இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை எடுக்காவிட்டாலும் சில நாள்களில் தானாகவே சரியாகிவிடும். சில நேரங்களில் யூரிக் அமிலமானது நீண்ட நாள்களாகச் சேர்ந்ததன் விளைவாக டோஃபி (Tophi) என்ற பிரச்னை வரலாம். யூரிக் அமிலம் படிகங்களாக மாறி மூட்டுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள திசுக்களில் படிந்துவிடும். இந்தப் படிகங்களின் திரட்சியே டோஃபி என்று அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகலாம்.

இந்த பாதிப்பைத் தவிர்க்க அசைவ உணவுகளைத் தவிர்ப்பது, ஆல்கஹாலை தவிர்ப்பது, ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரைச்சத்து அதிகமுள்ள பழங்களை நிறைய எடுப்பதைத் தவிர்ப்பது போன்றவை முக்கியம். சிறிதளவு பழங்கள் சாப்பிடுவதால் யூரிக் ஆசிட் அதிகரிக்காது. அளவுக்கதிகமாக எடுக்கும்போதுதான் பிரச்னையே.
இது மட்டுமன்றி, உயர் ரத்த அழுத்தம், உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பதும் இந்தப் பிரச்னையை உருவாக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பது முக்கியம். அதுதான் அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும். ஒருவேளை மரபியல் ரீதியாக ஒருவருக்கு யூரிக் ஆசிட் அதிகம் சுரக்கும் பிரச்னை இருந்தால், மருத்துவரிடம் பேசி, சிகிச்சை எடுப்பது பலன் தரும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
