Doctor Vikatan: மன அழுத்தம், கவலையால் முடி கொட்டுமா? மனநலனுக்கும் தலைமுடிக்கும் தொடர்பு உண்டா?
Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக கவலையும் மன அழுத்தமும் மிக அதிகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் முடி உதிர்வும் அதிகரித்திருக்கிறது. கவலைப்பட்டால் முடி உதிரும் என்று காலங்காலமாகச் சொல்லப்படுவதில் உண்மை உள்ளதா... மனநலனுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தொடர்பு உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

மனநலனுக்கும், கூந்தல் ஆரோக்கியத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. முடி உதிர்வை பாதிக்கும் மனம் தொடர்பான பிரச்னைகளில் முதலிடம் மன அழுத்தம் எனப்படும் ஸ்ட்ரெஸ்ஸுக்கு உண்டு. மன அழுத்தம் அதிகமாவதன் விளைவால் ஏற்படுகிற முடி உதிர்வுப் பிரச்னையை அலோபேஷியா அரியேட்டா (Alopecia areata), டெலோஜன் எஃப்ளுவியம் (Telogen effluvium) மற்றும் ட்ரைக்கோ டில்லோமேனியா (Trichotillomania) என மூன்றாக வகைப்படுத்தலாம்.
இவற்றில் 'அலோபேஷியா அரியேட்டா'வில், ரத்த வெள்ளை அணுக்கள், ஃபாலிக்கிள் எனப்படும் கூந்தலின் வேர்ப்பகுதியைத் தாக்கி, கூந்தல் வளர்ச்சியைத் தடைசெய்வதுடன், முடி உதிர்வுக்கும் காரணமாகும். 'டெலோஜன் எஃப்ளுவியம்' என்கிற நிலையில் அதீத மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக, வளரும் நிலையில் உள்ள முடிக் கற்றைகள், உதிர்வதற்கு முன்பான ஓய்வுநிலைக்குத் தள்ளப்படும். அதிக டென்ஷன், கவலையில் இருக்கும் நாள்களைத் தொடர்ந்து முடி உதிர்வும் அதிகமாக இருப்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா... காரணம் இதுதான். சாதாரணமாக தலை சீவும்போதும் தலைக்குக் குளிக்கும்போதும் கொத்துக் கொத்தாக முடி உதிர்வதெல்லாம் இந்தப் பிரச்னையால்தான்!

அடுத்தது 'ட்ரைக்கோடில்லோமேனியா'. அரியவகை மனநல பாதிப்பான இதில், உடலில் எங்கு முடிகள் இருந்தாலும், அதைப் பிடுங்க நினைப்பார்கள். நெகட்டிவ் எண்ணங்கள், மன உளைச்சல், படபடப்பு, தோல்வி, தனிமை, அதீத களைப்பு, விரக்தி மனநிலை போன்றவை ஏற்படுகிறபோது, முடிகளைப் பிடுங்கி எறிய ஓர் உந்துதல் உண்டாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள், தங்களது மனநலப் பிரச்னைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாதவரை, இவர்களது முடி உதிர்வுப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது. மன அழுத்தத்தால் உண்டாகிற முடி உதிர்வுப் பிரச்னை நிரந்தரமானதல்ல. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினாலே, கூந்தல் உதிர்வு சரியாகும்.
எனவே, உடல்நலம் சரியில்லாதபோது மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுப்பது போல மனநலம் சரியில்லாதபோதும் அதை கவனிக்க வேண்டும். உங்களால் உங்கள் மனநலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியாத பட்சத்தில் மருத்துவரையோ, உளவியல் ஆலோசகரையோ நாடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.