RCB vs PBKS : 'எங்களோட பேட்டிங்லதான் பெரிய பிரச்சனை இருக்கு!' - கேப்டன் ரஜத் பட்...
Doctor Vikatan: மாத்திரையை தண்ணீரில் விழுங்குவது, சப்பி சாப்பிடுவது.. என்ன வித்தியாசம்?
Doctor Vikatan: சில மாத்திரைகளை தண்ணீரில் விழுங்குகிறோம். சில மாத்திரைகளை சப்பி சாப்பிடச் சொல்கிறார்கள். இன்னும் சில மாத்திரைகளை தண்ணீரில் கரைத்துக் குடிக்கிறோம். இந்த வேறுபாடுக்கு என்ன காரணம், இதை விளக்கிச் சொல்ல முடியுமா?
பதில் சொல்கிறார் திருப்பூர் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரும், மருந்தியல் மருத்துவ நிபுணருமான டாக்டர் ஸ்ரீவித்யா.

எந்த வயதினருக்கு, எந்தப் பிரச்னைக்கு மாத்திரைகள் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து இது தீர்மானிக்கப்படும். அதாவது அந்த மாத்திரையானது உடலின் எந்தப் பகுதியில் கிரகிக்கப்பட வேண்டுமோ அதைப் பொறுத்தும் பரிந்துரைக்கப்படும்.
சில மாத்திரைகளை சப்பி சாப்பிடச் சொல்வார்கள். அது வாயிலேயே கரைந்து, உமிழ்நீர் வழியே உடலுக்குள் போய் விடும். அதன் விளைவாக உடனடியாக அந்த மாத்திரை வேலை செய்யத் தொடங்கும். சில மாத்திரைகளை தண்ணீரில் விழுங்கச் சொல்வோம். அந்த மாத்திரை கல்லீரலுக்குள் போய், பிறகு வயிற்றுக்குள் போய், பிறகு சிறுகுடலுக்குள் சென்றுதான் உட்கிரகிக்கப்படும்.
இவை தவிர 'என்டெரிக்-கோட்டடு' (Enteric coated tablets ) வகை மாத்திரைகள் என இருக்கின்றன. இந்த மாத்திரைகளில் ஒருவிதமான பூச்சு இருக்கும். இந்தப் பூச்சுகள் சில மாத்திரைகள் அமிலத்தில் கரைந்து போவதைத் தடுப்பதற்காக போடப்படுகின்றன.

என்டெரிக்-கோட்டடு மாத்திரைகள் சிறுகுடலுக்குப் போய்தான் உட்கிரகிக்கப்படும். எனவே, மாத்திரையானது எங்கே உட்கிரகிக்கப்படுகிறது, எவ்வளவு நேரத்தில் உட்கிரகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே பரிந்துரைக்கப்படும்.
பொதுவாகவே மாத்திரைகளில் அசிடிக் மற்றும் பேசிக் என இருவகை உண்டு. அதாவது அந்த மாத்திரையின் மூலக்கூறுகள் அசிடிக் தன்மை கொண்டவையாக இருந்தால் அவை வயிற்றுப்பகுதியில் உட்கிரகிக்கப்படும். அதுவே பேசிக் வகை மாத்திரைகள் குடலில் உட்கிரகிக்கப்படும். எனவே, உங்கள் வயது, என்ன பிரச்னை, அதன் தீவிரம் போன்ற பல விஷயங்களைப் பொறுத்து மருத்துவர் இதை முடிவு செய்வார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
