Doctor Vikatan: டூத் பேஸ்ட்டா, பல் பொடியா... இரண்டில் எது சிறந்தது, கைகளால் பல் துலக்கலாமா?
Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர், பல வருடங்களுக்குப் பிறகு டூத் பேஸ்ட் உபயோகிப்பதை நிறுத்திவிட்டு, பல் பொடி பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். மருத்துவர் பரிந்துரைத்ததாகச் சொல்கிறார். பல் துலக்க டூத் பேஸ்ட் பயன்படுத்துவது சரியா அல்லது பல் பொடி பயன்படுத்துவது சரியா...? விரல்களால் பல் துலக்குவது சரியா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி
பற்களைச் சுத்தப்படுத்த டூத் பேஸ்ட்தான் சிறந்தது என்பதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. உங்கள் நண்பருக்கு எந்த மருத்துவர், எதற்காக அதைப் பரிந்துரைத்தார் என்ற தகவல்கள் இல்லை.
பல் பொடி என்பது தூளாக இருப்பதால், அதில் பற்களை, எனாமலை பாதிக்கும் சொரசொரப்புத் தன்மையை ஏற்படுத்தும் ஏஜென்ட்டுகள் அதிகம் இருக்கக்கூடும். தொடர்ந்து பல் பொடியை உபயோகித்து, பல் துலக்குபவர்களுக்கு, பற்கள் சீக்கிரமே தேய்ந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். டூத் பேஸ்ட் என்பது சொரசொரப்புத்தன்மை அற்றதாக இருப்பதால், அதை உபயோகிப்பதுதான் பற்களுக்குப் பாதுகாப்பானது. பேஸ்ட் வைத்துப் பல் துலக்கும்போது வாயும் பற்களும் சுத்தமான உணர்வு கிடைக்கும்.
பற்களைத் துலக்க டூத் பிரஷ் கண்டிப்பாக உபயோகிக்க வேண்டுமா, வெறும் விரல்களால் பல் துலக்கினால் போதாதா என்று கேட்டிருக்கிறீர்கள். சரியான டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி, பல் துலக்கும்போது, பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்கு, உணவுத்துகள்கள் போன்றவை எல்லாம் வெளியேறும். அதுவே விரல்களால் பல் தேய்த்தால், உங்களால் மேலோட்டமாக மட்டும்தான் தேய்க்க முடியும். விரல்களை பல் இடுக்குகளுக்குக் கொண்டு போக முடியாது.
பற்கள் முறைப்படி சுத்தப்படுத்தப்பட்டால்தான் வாய் ஆரோக்கியமாக இருக்கும். இல்லாவிட்டால் வாய் துர்நாற்றம், சொத்தைப் பற்கள், பல் தொடர்பான பிற பாதிப்புகள் ஏற்படலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.