Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?
Doctor Vikatan: மாத்திரை போட்டால் மட்டுமே வரும் periods; சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?
Doctor Vikatan: என் வயது 35. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனக்கு உடல் பருமன் பிரச்னை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக periods வருவதில் பிரச்னை இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கொரு முறை மருத்துவரைப் பார்த்து அவர் கொடுக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் பீரியட்ஸ் வரும். இல்லாவிட்டால் வராது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு... சித்த மருத்துவம் உதவுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

உங்களுடைய கேள்வியிலேயே உங்கள் பிரச்னைக்கான பதிலும் இருக்கிறது. மாதவிடாய் பிரச்னைகளுக்கு உடல் பருமன் மிக முக்கியமான காரணம். உடல் பருமனைக் குறைத்தாலே மாதவிடாய் சுழற்சி சீராவதை உணர்வீர்கள்.
மாத்திரை எடுத்தால்தான் பீரியட்ஸ் வருவதாகச் சொல்கிறீர்கள்.. மருத்துவரிடம், அதற்கான காரணம் கேட்டீர்களா, எதற்காக மாத்திரை என்று சொன்னாரா என்ற தகவல்கள் இல்லை.
உடல் பருமனைக் குறைக்க நீங்கள் முதலில் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும். பகலில் தூங்குவதையும் அதிக உணவுகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்ப்பது, செயற்கை நிறமி மற்றும் மணம் சேர்க்கும் உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரம் நடைப்பயிற்சி செய்யலாம். யோகாவும் உதவும். உடலை இளைக்கச் செய்கிற உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகள் தவிர்த்து, ஆவியில் வெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். காலை உணவுக்கு முளைக்கட்டிய தானியங்கள், அவல் போன்றவற்றை 50 கிராம் அளவு எடுத்துக்கொள்ளலாம். கூடியவரையில் சமைக்காமல் சாப்பிடுவது சிறந்தது.

உங்களுக்கு தைராய்டு பாதிப்பு இருக்கிறதா என்று டெஸ்ட் செய்து பார்க்கவும். ஒருவேளை இருந்தால் சித்தாவிலோ, அலோபதியிலோ அதற்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். தைராய்டை குணப்படுத்தாமல் மாதவிடாய் பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கக்கூடாது. மாதவிடாயை முறைப்படுத்தக்கூடிய இயற்கையான மருத்துவமுறைகள் சித்தாவில் உள்ளன. இரண்டு பல் மலைப்பூண்டை, ஒரு கப் பாலில் வேகவைத்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். கறிவேப்பிலையை அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் காலையில் சாப்பிடுங்கள்.
முருங்கைக்கீரை, தினம் 2 எள்ளுருண்டைகள், கல்யாண முருங்கையில் அடை, தோசை போன்றவற்றைச் செய்து சாப்பிடுங்கள். மலைவேம்புச் சாற்றை மாதத்தில் மூன்று முறை 15 முதல் 20 மில்லி அளவுக்கு காலையில் குடிக்கலாம். கழற்சிக்காய் என்று சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதன் விதைகளை தினம் 5 என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தாலும் மாதவிடாய் சுழற்சி முறைப்படும். இவையெல்லாம் பொதுவான ஆலோசனைகள். எந்தச் சிகிச்சையாக இருந்தாலும் முறைப்படி மருத்துவரை சந்தித்து, அவர் பரிந்துரையோடு மருந்துகளை எடுத்துக்கொள்வதுதான் சரி.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.