Dominic and the Ladies' Purse Review: மெர்சல் மம்மூட்டி, மலையாளத்தில் கௌதம் மேனன்; கூட்டணி வென்றதா?
முன்னாள் காவல்துறை அதிகாரியான சி.ஐ. டோமினிக், தற்போது கொச்சியில் தனியார் டிடெக்ட்டிவ் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார். அவர் அளித்த விளம்பரத்தைப் பார்த்து உதவியாளராகச் சேர வந்த விக்கி (கோகுல் சுரேஷ்) என்ற இளைஞரைப் பணியில் சேர்த்துக் கொள்கிறார். இருவரும் இணைந்து சில திருமணம் தாண்டிய உறவுகள் குறித்த புலனாய்வு வழக்குகளை விசாரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்குச் சொந்தக்காரரான மாதுரி (விஜி வெங்கடேஷ்) தான் சென்ற மருத்துவமனையில் ஒரு பர்ஸினை கண்டெடுத்ததாகவும், அதை அதற்குரிய உரிமையாளரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றும் கேட்கிறார். அது குறித்து விசாரிக்க ஆரம்பிக்கும் டோமினிக், பர்ஸின் உரிமையாளரான பெண்ணை காணவில்லை என்ற உண்மையைக் கண்டறிகிறார். இதற்குப் பின்னர் என்ன ஆனது, அந்த பெண்ணைக் கண்டுபிடித்தாரா என்பதை சொல்கிறது இந்த ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’.
புலனாய்வு பணிகளை அநாயாசமாகச் செய்யும் உடல்மொழி, வந்து விழுகின்ற வார்த்தைகளிலெல்லாம் நையாண்டித்தனம், அதை சிரிக்காமல் செய்யும் மிடுக்கான தோற்றம் என கவர்ந்திழுக்கிறார் மம்மூட்டி. குறிப்பாக அத்தனை உயரத்திலிருந்தாலும் சுயபகடி செய்து கொள்வது, “நான் எனது கவனத்தை விட்டுவிட்டேன்” என்று உணரும் இடத்தில் கொடுக்கும் சின்ன முகபாவனை ஆகிய இடங்களில் நடிப்பு பீக் அடித்திருக்கிறது. நந்திதா பாத்திரத்தின் நடனத்தைப் பார்த்து மெய்சிலிர்க்கும் இடமும் மம்மூக்கா ஸ்பெஷல்! ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு வாட்சன் போல டோமினிக்கின் விக்கியாக வலம் வருகிறார் கோகுல் சுரேஷ். இருவரின் புலனாய்வு கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்திருக்கிறது. நந்திதாவாக சுஷ்மிதா பட் நாட்டிய கலைஞராகச் செய்யும் முகபாவனைகளில் ஈர்க்கிறார். விஜி வெங்கடேஷ் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதை செல்வனே செய்திருக்கிறார். ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிகர் வினித் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவில் கொச்சி, மூணாறு பகுதிகளின் எழிலைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆர் தேவ், அழுத்தமான ப்ரேம்களால் காட்சியின் வீரியத்தை அதிகரித்திருக்கிறார். முன்னுக்குப் பின் நகரும் கதைக்களத்தை படத்தொகுப்பாளர் அந்தோணி எந்த வித குழப்பமும் இல்லாமல் தெளிவாகக் கோர்த்திருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் கூலாகச் செல்லும் தர்புகா சிவாவின் பின்னணி இசை, கதையின் திருப்பத்துக்கு ஏற்றவாறு வேகத்தை அதிகரித்திருக்கிறது. சலூன் கடையின் சீட், துப்பறியும் அறையின் செட்டப், பரதநாட்டிய செட்டப் எனக் கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார் கலை இயக்குநர் அருண் ஜோஸ். சின்ன சின்ன சண்டை அசைவுகள் என்றாலும் அதைத் துப்பறியும் நபரின் நுட்பமான பாணியில் வடிவமைத்திருக்கிறது சுப்ரீம் சுந்தர், ஆக்ஷன் சந்தோஷ் கூட்டணி.
தனது ஸ்டைலிஷான மேக்கிங்குடன் மலையாளத் திரையுலகில் தடம் பதித்திருக்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். படம் ஆரம்பித்து சிறிது நேரம் மம்மூட்டியின் கதாபாத்திரத்தன்மையை விளக்குவதாகவே காட்சிகள் நகர்கின்றன. அதைக் ரசிக்கும்படியான திரைக்கதையில் கொடுத்திருப்பது படத்தோடு நம்மை ஒன்றச் செய்கிறது. ஆனால் அந்த ஆரம்பக்கட்ட காட்சிகளுக்குப் பிறகு புதிரைப் போட வேண்டிய காட்சிகள், வெறும் வசனங்களால் மட்டுமே நகர்வது அயர்ச்சி! ஒரு லேடீஸ் பர்ஸில் தொடங்கி, காணாமல் போன ஒரு பெண், அடுத்து ஒரு ஆண் என்று கேட்கும் போதே ஆவலைத் தூண்டும் நீரஜ் ராஜன் கதை, திரைக்கதையாக மாறும் இடத்தில் சற்றே தடுமாறியிருக்கிறது. இதற்கு 'பேட்ச்ஒர்க்' பார்க்க அத்தனை பாரத்தையும் மம்மூட்டியின் நடிப்பின் மீது சுமத்தியிருக்கிறார்கள்.
இடைவேளைக்குப் பிறகு ‘இனிதான் ஆரம்பம்’ என இருக்கை நுனிக்கு வருகிற காட்சிகளை எதிர்பார்க்க, கங்கில் நெருப்பை மூட்டுவது போல அ…டு…த்..து... எ..ன்..ன பொறுமையாகப் பேசி, வேகத்தைக் குறைத்து மயக்கநிலைக்குக் கொண்டு போகிறது நீரஜ் ராஜன், டி.ஆர். சூரஜ் ராஜன், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியின் திரைக்கதை. இருப்பினும் இறுதி முடிச்சுகளை அவிழ்த்தவிதம், அதில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் நம்மைத் திடுக்கிட வைத்து கொஞ்சம் நம்பகத்தன்மையோடு முடிவது ஆறுதல். ஆனால் சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களைச் சுவாரஸ்யத்துக்காக ‘ஷாக் வேல்யூ’வாக பயன்படுத்தியிருப்பது படக்குழுவினரின் பொறுப்பற்றத்தன்மையையே காட்டுகிறது. அவர்கள் அந்தக் குற்றத்தை ஏன் செய்தார்கள் என்ற பின்கதையும் பலவீனமாக இருப்பதே இந்தச் சிக்கலுக்கு மற்றுமொரு காரணம்!
மொத்தத்தில் தொழில்நுட்பரீதியாகச் சிறப்பாகவும், திரைக்கதையில் ஏற்றம் இறக்கம் நிறைந்ததாகவும் இருக்கும் இந்த ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’-ல் பர்ஸினை அவர் கண்டுபிடித்தாலும், ஏனோ கால்வாசி பணத்தினைக் காணவில்லை.