`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
Fastag: இனி டோல் பக்கத்தில் போய் ரீசார்ஜ் பண்ணமுடியாது;உங்கள் அக்கவுன்ட் ஏன் பிளாக் லிஸ்ட் ஆகிறது?
நீங்கள் கார் வைத்திருப்பவர்கள் என்றால், இந்த விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். இன்று திங்கள் கிழமை காலை முதல் ஃபாஸ்டேக் பயனாளிகளுக்குப் புதுச் சட்டங்களைப் பிறப்பித்திருக்கிறார்கள்.
இந்த முறை கொஞ்சம் அதிரடியான சில சட்டதிட்டங்களைப் பிறப்பித்திருக்கிறது NPCI (National Payments Corporation of India). அது என்னனு பார்க்கலாம்!உங்கள் வாலட்டில் பணம் இல்லை எனும் பட்சத்தில், இதுவரை ‛டோல்கேட்டுக்குப் பக்கத்தில் போயிட்டு டாப்அப் பண்ணிக்கலாம்’ என்பதாக இருந்திருப்பீர்கள்தானே! இனி அப்படி பண்ண முடியாது. 60 நிமிடங்கள்… அதாவது ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே உங்கள் வாலட்டில் பணத்தை டாப்அப் செய்திருக்க வேண்டும். இனி பக்கத்தில் போய்விட்டு ரீசார்ஜ் செய்தால், இரட்டைக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்க.
அதேபோல் உங்கள் Fastag அக்கவுன்ட் Blacklist-ல் இருந்து, அது உங்களுக்குத் தெரியாதபட்சத்தில், நீங்கள் டோல்கேட்டைக் கடந்திருந்தால்… அப்போதும் உங்களுக்கு இரட்டைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

இன்னொரு முக்கியமான விஷயம் - நீங்கள் டோல்கேட்டைக் கடந்துவிட்டீர்கள். பணமெல்லாம் முறையாக எடுக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம்; நீங்கள் டோலைக் கடந்த 10 நிமிடத்தில் உங்கள் அக்கவுன்ட் ஏதோ சில காரணங்களால் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டது என்றாலும், பரிவர்த்தனை ரத்து ஆகி உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், இப்போது ஒருமுறை வேண்டுமானால் திரும்பப் பெறலாமாம். இந்த விதிமுறைகளை மீறும் டோல் பயனாளர்களிடம் இருந்து இரட்டை அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.
உங்கள் கார், ஃபாஸ்டேக் பார்கோடைக் கடந்து 15 நிமிடங்கள் ஆனபிறகு, டோல்கேட் பரிவர்த்தனைகளை நிகழ்த்தாமல் இருந்தீர்கள் என்றால், அதற்கும் கூடுதல் கட்டணம்.
ஓகே! அது என்ன பிளாக்லிஸ்ட்? உங்கள் ஃபாஸ்டேக் கணக்கு பிளாக்லிஸ்ட் ஆவதற்குச் சில விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. கீழ்க்கண்ட இந்த விஷயங்களையும் தவறாமல் கடைப்பிடித்து விடுங்கள்.

உங்கள் Fastag கணக்கில் KYC (Know Your Customer) எனும் சமாச்சாரம், பூர்த்தி செய்யப்படாமலோ, அப்டேட் செய்யாமல் நிலுவையில் இருந்தாலோ பிளாக்லிஸ்ட் ஆகும்.
உங்கள் வாகனத்தின் சேஸி எண், நம்பர் பிளேட், உங்கள் புகைப்படம், தொலைபேசி எண் போன்றவை லிங்க் செய்யப்படாமலோ, அப்டேட் செய்யப்படாமல் இருந்தாலோ பிளாக்லிஸ்ட் ஆகும். இவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும்.
உங்கள் ஃபாஸ்டேக் வாலட்டில் பணம் போதுமான அளவு இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள். சிலர் வங்கிக் கணக்கையும் வாலட்டையும் குழப்பிக் கொள்வார்கள். வாலட்டிலும் கவனம் தேவை. பணம் இல்லாதபட்சத்திலும் பிளாக்லிஸ்ட் ஆகலாம்.
உங்கள் வாகனத்தின் எண்ணுக்குச் சில சட்டச் சிக்கல்கள்… போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதங்கள் நிலுவையில் இருக்கும் பட்சத்திலும் பிளாக்லிஸ்ட் செய்யப்படலாம்.
ஒவ்வொரு டேல்கேட்டைக் கடந்ததும், உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஆகவே, இனி ட்ரிப் போகும்போது, கார்களில் ஹெட்லைட் எரிகிறதா… டயர்களில் காற்று இருக்கிறதா… இன்ஜின் லைட் ஒழுங்காக இருக்கிறதா என்று எல்லா செக்லிஸ்ட்டையும் செய்து கொள்வதுபோல், ஃபாஸ்டேக் கணக்கிலும் பணம் இருக்கிறதா, பிளாக்லிஸ்ட் ஆகியிருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்த்துவிட்டுக் கிளம்புங்கள் மக்களே!

சரி; இந்தக் கடுமையான நடைமுறைகள் எதற்கு? சுங்கச்சாவடிகளில் முறைகேடுகளைத் தவிர்க்கத்தான் இந்தச் சட்டதிட்டங்கள் என்கிறது NPCI. உங்கள் கருத்து என்ன?