மெக்சிகோவுக்கு அமெரிக்கா பெயர் சூட்டிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதிலடி!
Food & Health: காய்ச்சல் இருக்கும்போது சாப்பிட வேண்டிய உணவுகள்!
காய்ச்சல் வந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். மருந்துகள் கொடுப்பதால் மட்டுமே காய்ச்சலை முற்றிலும் குணப்படுத்திவிட முடியாது. ‘காய்ச்சல் குணமாவதற்குத்தான் மருந்து சாப்பிட்டுவிட்டோமே...’ என்று எளிதில் ஜீரணமாகாத உணவுகளைச் சாப்பிட்டால் மூன்று நாள்களில் சரியாக வேண்டிய காய்ச்சல், மேலும் நீடிக்கும். ஆகவே காய்ச்சலின்போது மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உட்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் வந்தவர்களுக்கு இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகள் சிறந்தவை. இவற்றைத் தனியாகச் சாப்பிட முடியாது. எனவே, சிலர் பாலில் நனைத்துச் சாப்பிடுவார்கள். இது நல்லதுதான் என்றாலும், ஒன்றுக்குமேல் சாப்பிட முடியாது. எனவே, இணை உணவாக கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லித்தழை துவையல், புதினாத் துவையல் மற்றும் பச்சை மிளகு, புதினா, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த துவையல் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். சளிக்காய்ச்சல், தலைவலி, தும்மல், இருமல், ஜலதோஷம் இருக்கும்போது தூதுவளைத் துவையல் ஓர் அருமையான இணை உணவு.
பகல் உணவில் குழைய வேகவைத்த புழுங்கலரிசிச் சோற்றுடன் மிளகு ரசம் சேர்த்துச் சாப்பிடலாம். வெள்ளைப் பூண்டு, மிளகு, வெந்தயம் சேர்த்துச் செய்த ரசம், சூப், குழம்பு போன்றவற்றையும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த புழுங்கலரிசிப் பொங்கலும் நல்லது.
இரவு உணவு, காலை உணவைப்போல ஆவியில் வேகவைத்த உணவுகளான இட்லி, இடியாப்பமாக இருந்தால் நல்லது. பாலில் வெள்ளைப் பூண்டு சேர்த்து வேகவைத்து மிளகுத்தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி அருந்துவது நல்லது. காய்ச்ச்சல் வந்தவர்கள் எப்போதும் வெந்நீர் அருந்துவது நல்லது.
பிரெட், பால் சாப்பிடலாம். இவற்றைச் சாப்பிடும்போது வாழைப்பழம் சாப்பிடாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். `காய்ச்சல் நேரங்களில் பழமா?’ என்று பெரும்பாலானவர்கள் சாப்பிடுவதில்லை. இந்த நேரத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடலாம்.
வீடுகளில் வளர்க்கும் துளசி, ஓமவல்லி, தூதுவளை இலைகளுடன் மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து, தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, வடிகட்டி குடிப்பதும் காய்ச்சல் நேரங்களில் பலன் தரும். பத்து மிளகை வாணலியில் வெறுமனே கருகுமளவுக்கு வறுத்து, அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்துக் கஷாயமாக்கிக் குடிக்க வேண்டும்.
உடல்நலக்குறைவின்போது நார்ச்சத்து குறைந்த உணவுகளையே பெரும்பாலும் உட்கொள்ளச் சொல்வார்கள். அதற்கு ஏற்றது பார்லி. எளிதில் செரிமானமாகும் பார்லி, சளி சவ்வுப்படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றக்கூடியது. ஆகவேதான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுப்பது அந்தக் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.
ஒரு டேபிள்ஸ்பூன் பார்லியை அரை வேக்காடாக வேகவைத்து பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளுடன் ஐந்து பல் பூண்டு சேர்த்து நன்றாகக் குழைய வேகவைக்க வேண்டும். பிறகு இன்ஸ்டன்ட் சூப் பவுடர் சேர்த்துக் கொதிக்கவைத்து மிளகுத் தூள், உப்பு, கொழுப்பு நீக்கிய பால் (சிறிது) சேர்த்துப் பரிமாறலாம். சூப்பை பார்லியுடன் சேர்த்தும், சேர்க்காமலும் குடிக்கலாம். பொதுவாகவே, காய்ச்சல் வந்த நேரங்களில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்பதே நல்லது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...