ரூ. 100 கோடி இணைய மோசடி: சீனாவைச் சேர்ந்த நபர் தில்லியில் கைது!
G20: உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் திட்டங்களை விளக்கிய பிரதமர்; என்னென்ன தெரியுமா?
2333இந்தியப் பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன் ஒருபகுதியாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு சென்றார். அங்கு பிரேசிலுக்கான இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி மற்றும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை சம்ஸ்கிருதத்தில் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி, நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தி உற்சாகமாக வரவேற்றனர். அதைத் தொடர்ந்து பிரேசிலில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, ``கடந்த ஆண்டு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடந்த உச்சிமாநாட்டில், "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற கருத்தை முன்வைத்தோம். இந்த அழைப்பு தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.
உலகளாவிய மோதல்களால், தெற்கின் நாடுகளில் உணவு, எரிபொருள், உர தட்டுப்பாடு நெருக்கடி ஏற்பட்டு மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். எனவே நாடுகளுக்குள் நடக்கும் சவால்களையும், போர், பதற்றங்கள் ஆகியவற்றை நாம் மனதில் கொள்ளும்போதுதான், இந்த மாநாட்டின் விவாதங்கள் வெற்றிகரமாக முடியும். டெல்லி உச்சிமாநாட்டின் போது, ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு ஜி20-ன் நிரந்தர உறுப்பினர்களை வழங்குவதன் மூலம் உலகளாவிய தெற்கின் குரலை வலுப்படுத்தினோம்.
அதுபோலவே, உலகளாவிய நிர்வாக நிறுவனங்களையும் நாம் சீர்திருத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 250 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றியிருக்கிறது. நாட்டில் 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்களை விநியோகித்து வருகிறது. 550 மில்லியன் மக்கள் உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பயனடைகிறார்கள். 300 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் வங்கிகளுடன் இணைக்கப்பட்டு கடன் அணுகல் வழங்கப்பட்டுள்ளனர். நாங்கள் இயற்கை விவசாயம், கரிம வேளாண்மை மட்டுமல்லாமல் புதிய தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்திவருகிறோம்.
சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நிதி சேர்க்கைக்கு பெரிதும் உதவி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய மாதிரியை உருவாக்கி வருகிறோம். தற்போதைய ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பிரேசில், வறுமைக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஓரணியாக செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இந்த கருத்தை இந்தியா ஆதரிக்கிறது." எனப் பேசினார்.