யாருக்கும், எதற்கும் பயமில்லை..! பாஜகவில் சேர்ந்தது குறித்து கைலாஷ் கெலாட் பேட்ட...
சரிவுக்குப் பிறகு மீண்டும் மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
மும்பை: தொடர்ந்து 4 நாட்கள் சரிவை முறியடித்த பிறகு, புளூ சிப் பங்கு நிறுவங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி, டெக் மஹிந்திரா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் உயர்ந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் 1,112.64 புள்ளிகள் உயர்ந்து 78,451.65 ஆக இருந்தது.
இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 239.37 புள்ளிகள் உயர்ந்து 77,578.38 புள்ளிகளில் நிலைபெற்றது. எனினும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வீழ்ச்சி சந்தையின் ஏற்றத்தை சற்று கட்டுப்படுத்தியது.
அதே வேளையில் கடந்த ஏழு நாட்கள் சரிவுக்கு பிறகு தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 64.70 புள்ளிகள் உயர்ந்து 23,518.50 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 பங்குகளில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, டைட்டன், டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், பவர் கிரிட், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. இதற்கு நேர்மாறாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி, டாடா ஸ்டீல் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று ரூ.1,403.40 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்ற நிலையில, உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,330.56 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடிந்த நிலையில் ஐரோப்பிய சந்தைகள் சரிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்றைய (திங்கள்கிழமை) வர்த்தகத்தில் பெரும்பாலும் உயர்ந்து முடிவடைந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.25 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 73.12 டாலராக உள்ளது.
மகாராஷ்டிரத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளை (நவம்பர் 20, 2024) மும்பை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.