விருது பெற்றதில் மகிழ்ச்சி; அனைவருக்கும் நன்றி: அஜித் குமார்
IPL 2025 : பட்டையைக் கிளப்பும் Uncapped பிளேயர்ஸ்; தயாராகும் எதிர்கால இளம்படை | Uncapped 11
இன்றைய தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல் மிகப் பெரும் பாதையை ஏற்படுத்தித்தரும் ஊடக வெளிச்சம் மிக்க தொடராக இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சஹால், குல்தீப் யாதவ், மணீஷ் பாண்டே, சுப்மன் கில், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ருத்துராஜ், தீபக் சஹார் என ஐ.பி.எல்லால் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பைப் பெற்றவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாமல் நீள்கிறது.

அந்த வகையில், நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியில் தங்களுக்கான இடத்தைப் பிடிக்க எக்கச்சக்க வீரர்கள் வரிசையில் நிற்கின்றனர். அவ்வாறு இந்த சீசனில் Uncapped பிளேயராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வருங்கால இந்திய வீரர்களை வரிசையாகப் பார்க்கலாம்.
பிரியான்ஷ் ஆர்யா:
இந்த சீசனில் பஞ்சாப் அணியின் வெற்றிகளுக்கு முக்கியமான வீரர்களில் மிக முக்கியமானவர் பிரியான்ஷ் ஆர்யா. டெல்லியைச் சேர்ந்த இந்த 24 வயது இளம்வீரருக்கு அதிரடி பேட்டிங்தான் கைவந்த கலை. இங்கு டிஎன்பிஎல் இருப்பது, அங்கிருக்கும் டெல்லி பிரீமியர் லீக்கில் கடந்த ஆண்டு 608 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்த இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் தைரியமாக ரூ. 3.8 கோடிக்கு வாங்கியது. அதைவிட தைரியமாக பிரியான்ஷை ஓப்பனிங்கில் இறக்கியது பஞ்சாப். இந்த சீசனில் முதல் போட்டியிலேயே 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 47 ரன்கள் அடித்து 3 ரன்களில் அரைசதத்தை மிஸ் பண்ண பிரியான்ஷ், அடுத்த இரண்டு போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்.

ஆனால், அதற்கடுத்த போட்டியில் சென்னைக்கு எதிராக 39 பந்துகளில் சதமடித்து சிஎஸ்கே பவுலர்களை திணறடித்து அனைவரின் பார்வையையும் தன்மீது விழச் செய்தார். இந்த சீசனின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் இன்னிங்ஸாகவும் இது பதிவாகியிருக்கிறது. அடுத்தடுத்த ஆட்டங்களில் 20, 30 என அடித்துக்கொண்டிருந்த பிரியான்ஷ் கொல்கத்தாவுக்கெதிரான ஆட்டத்தில் அரைசதமடித்து அசத்தினார். 9 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் என 323 ரன்கள் குவித்து, டாப் 10 ரன் ஸ்கோரர் பட்டியலில் 10-வது இடம் பிடித்திருக்கிறார். தனது அறிமுக சீசனிலேயே அதிரடி பாணியை கையிலெடுத்திருக்கும் பிரியான்ஷ் இந்த சீசன் முடிவில் இந்திய அணியின் கதவைத் தட்டும் நபராக இருப்பார்.
ப்ரசிம்ரன் சிங்:
2019 முதல் 2022 வரையில் பஞ்சாப் அணியில் ஓரிரு ஆட்டங்கள் என கிடைக்கின்ற வாய்ப்புகளில் ஆடிவந்த ப்ரசிம்ரன், கடந்த இரண்டு சீசன்களிலும் 300+ ரன்கள் அடித்து பஞ்சாப் அணியின் நம்பிக்கைக்குரிய முழுநேர பேட்ஸ்மேனாக உருவெடுத்து, அதை நடப்பு சீசனிலும் அச்சு பிசுராமல் தொடர்கிறார். பஞ்சாப்பின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் பிரியான்ஷின் அதிரடிக்கு சற்றும் குறைவில் ஆடிவருகிறார் ப்ரசிம்ரன்.

இந்த சீசனில் முதல் நான்கு போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டும் நன்றாக ஆடி அரைசதமடித்த ப்ரசிம்ரன், கடைசி ஐந்து போட்டிகளில் 4 போட்டிகளில் 30+ ரன்கள் அடித்து அசத்தியிருக்கிறார். அதிலும், கொல்கத்தாவுக்கெதிரான போட்டியில் 83 ரன்கள் அடித்து சற்று தொலைவில் சதத்தைத் தவறவிட்டார். இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 292 ரன்கள் குவித்திருக்கிறார். முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் என உள்ளூர் கிரிக்கெட்டில் சுமார் 80 இன்னிங்ஸ் ஆடி 40+ ஆவரேஜ் மற்றும் 7-வது ஐ.பி.எல் சீசன் என ப்ரசிம்ரன் அனுபவ Uncapped வீரராக காத்திருக்கிறார்.
விக்னேஷ் புத்தூர்:
இந்த சீசனில் மும்பை அணியின் முதல் கண்டுபிடிப்பு கேரளாவைச் சேர்த்த 24 வயது இளம் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர். சேப்பாக்கத்தில் சென்னைக்கெதிரான போட்டியில் அறிமுகமான விக்னேஷ் புத்தூர், மற்ற பவுலர்கள் விக்கெட் எடுக்கத் தடுமாறியபோது, ருத்துராஜ், ஷிவம் டுபே, தீபக் ஹூடா என 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அந்தப் போட்டியில் மும்பை தோற்றிருந்தாலுமே, தனது அறிமுகப் போட்டியில் ஒரு பவுலராக வெற்றிபெற்றார். பொதுவாக ஸ்பின் பவுலர்கள் போடும் வேகத்தை விடவும், சற்று இழுத்துப்பிடித்து மெதுவாகப் பந்துவீசுவதே இவரின் பலம்.

சென்னைக்கெதிரான போட்டிக்குப் பிறகு ஒரு சில போட்டிகளில் அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டாலும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டாவது எடுத்தார். ரூ. 30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட விக்னேஷ் புத்தூர் இதுவரை 5 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மும்பை அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும்போது எக்கச்சக்க அனுபவமும் சேர்ந்தே கிடைக்கும். அந்த அனுபவங்களை விக்னேஷ் புத்தூர் பெற்று நிச்சயம் மேலும் வளரக்கூடும்.
அஸ்வினி குமார்:
விக்னேஷ் புத்தூரைப் போல மும்பை அணியின் இரண்டாவது சிறந்த கண்டுபிடிப்பு அஸ்வினி குமார். கொல்கத்தாவுக்கெதிரான போட்டியில் களமிறங்கிய இந்த 23 வயது இளம் வேகப்பந்துவீச்சாளர், தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பைக்கு வெற்றியைப் பரிசளித்தார். அந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அஸ்வினி குமார் வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கூடவே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

பின்னர், அணியில் பும்ரா இணைந்த பிறகு ஒரு சில ஆட்டங்களில் பென்ச்சில் உட்காரவைத்தாலும், அடுத்து வாய்ப்பு கிடைத்த இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதுவரையில் 3 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அஸ்வினி குமாருக்கு, மும்பை அணியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வாய்ப்புகளும், பும்ரா, போல்ட் ஆகியோரின் பந்துவீச்சு ஆலோசனைகளும் கிடைக்கும்போது அவரின் பந்துவீச்சு மேலும் மேம்படும்.
சாய் கிஷோர்:
ஐ.பி.எல்லில் குஜராத் அணியை ஒரு மினி தமிழ்நாடு அணி என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு கிட்டத்தட்ட குஜராத்தின் எல்லாப் போட்டிகளிலும் சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான், வாஷிங்க்டன் சுந்தர் ஆகிய நால்வரும் பிளெயிங் லெவனில் இடம்பெறுகின்றனர். இதில், சாய் சுதர்சன் பேட்டிங்கில் கன்சிஸ்டன்சியாக ஆடி ஆரஞ்சு கேப் தன்வசமாகியிருப்பதைப் போல, பவுலிங்கில் அதே அளவுக்கு கன்சிஸ்டன்சியாக பர்பில் கேப்பை நோக்கி விக்கெட்டுகளை வீழ்த்திவருகிறார் சாய் கிஷோர்.

8 போட்டிகளில் 8 எக்கனாமியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்பில் கேப் ஹோல்டர் பட்டியலில் 7-வது இடம்பிடித்திருக்கிறார் சாய் கிஷோர். ஒரேயொரு போட்டியில் மட்டுமே விக்கெட் வீழ்த்தவில்லை. குஜராத் அணி இந்த சீசனில் டாப் 4 ரேஸில் இருப்பதற்கு சாய் கிஷோரின் அபார பந்துவீச்சும் ஒரு காரணம்.
ஆயுஷ் பதோனி:
லக்னோ அணியில் பூரான், மார்ஷ், மார்க்ரம், பண்ட், மில்லர் ஆகிய பெரிய பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும், எல்லா ஆட்டங்களில் நம்பிக்கை வைத்து களமிறக்கப்படும் வளரும் பேட்ஸ்மேனாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் ஆயுஷ் பதோனி. மிடில் ஆர்டரில் ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்றவாறு களமிறக்கப்படும் ஆயுஷ் பதோனி, 10 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட டக் அவுட் ஆகாமல், 22 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என ஒரு அரைசதம் உட்பட 252 ரன்கள் குவித்திருக்கிறார்.

லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் அடிக்குமளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் கிடைக்கின்ற வாய்ப்புகளில் தனது ஆட்டத்தை மேம்படுத்திவருகிறார். பூரான் போன்ற பெரிய சிக்ஸ் அடிக்கக் கூடிய அணியில் சவாலுக்கு தானும் சிக்ஸ் அடிக்கும் ஆயுஷ் பதோனி, கிடைக்கின்ற வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி இந்திய அணியிலும் ஒருநாள் சிக்ஸ் அடிக்கக்கூடும்.
திக்வேஷ் ரதி:
ஐ.பி.எல்லில் இன்றும் பேட்ஸ்மேன்கள் கணிக்கத் திணறும் மிஸ்ட்ரி ஸ்பின்னர் சுனில் நரனைப் போலவே, இந்த சீசனில் திக்வேஷ் ரதி என்ற தரமான ஸ்பின்னரை அறிமுகப்படுத்தியிருக்கிறது லக்னோ. ரூ. 30 லட்சத்துக்கு வாங்கப்பட்ட திக்வேஷ் ரதி, 10 போட்டிகளில் ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். விக்கெட்டுகள் எண்ணிக்கைப் பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், 7.7 எக்கனாமியில் பந்துவீசியிருப்பதைப் பார்க்கும்போதே பேட்ஸ்மேன்கள் எப்படி இவரின் பந்துவீச்சை சமாளிக்கப் போராடியிருக்கிறார்கள் என்று புரியும்.

பவர்பிளே, மிடில் ஓவர்ஸ் என எங்கு கொடுத்தாலும் ரன்களை சிக்கனமாக விட்டுக்கொடுத்து அணிக்குத் தேவையான நேரத்தில் விக்கெட் எடுத்துவருகிறார். குறிப்பாக, மும்பை vs லக்னோ போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நமன் திரை சரியான நேரத்தில் விக்கெட் எடுத்து மேட்சையே மாற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதோடு, கொல்கத்தாவுக்கெதிரான போட்டியில் மிஸ்ட்ரி ஸ்பின் ஐகான் சுனில் நரனையும் விக்கெட் எடுத்து அசத்தினார். இதேபோன்று தொடர்ச்சியாக சிறப்பாகப் செயல்படும்போது, ஒருநாள் இந்தியாவின் சுனில் நரைனாக இந்திய அணியிலும் இடம்பிடிக்கலாம்.
வைபவ் அரோரா:
கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியில் ஸ்டார்க்குக்கும், ஹர்ஷித் ராணாவுக்கும் நடுவில் தனது பந்துவீச்சால் தனித்துவமாகத் தெரிந்தவர் வைபவ் அரோரா. 2022-ல் பஞ்சாப் அணியில் தனது பயணத்தைக் தொடங்கிய வைபவ் அரோரா, 2023 முதல் கொல்கத்தா அணியில் ஆடி வருகிறார். இதில், கடந்த சீசனில் மொத்தமாகவே 11 விக்கெட்டுகள் வீழ்த்திய வைபவ் அரோரா, இந்த சீசனில் கொஞ்சம் முன்னேறி 8 போட்டிகளிலேயே 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இந்த சீசனில் கொல்கத்தாவுக்கு அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இவரே முதலிடத்தில் இருக்கிறார். வருண் சக்கரவர்த்தியும், ஹர்ஷித் ராணாவும் தலா 11 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும், வைபவ் அரோராவை விட கூடுதலாக ஒரு போட்டியில் ஆடிருக்கின்றனர். 2022-ல் 3 விக்கெட்டுகள், 2023-ல் 5 விக்கெட்டுகள், 2024-ல் 11 விக்கெட்டுகள், இந்த சீசனில் 8 போட்டிகளிலேயே 11 விக்கெட்டுகள் என ஒவ்வொரு சீசனிலும் முன்னேறிக்கொண்டே வரும் இவர், இதன் அடுத்தகட்டமாக இந்திய அணியிலும் இடம்பிடிக்கூடும்.
அங்கிரிஷ் ரகுவன்ஷி:
நடப்பு சீசனில் பேட்டிங்கில் பெரிய பெரிய வீரர்கள் இருந்தும் சோபிக்காத கொல்கத்தா அணியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கேப்டன் ரஹானேவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் 20 வயது இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி. கடந்த சீசனில், 10 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 163 ரன்கள் அடித்த நிலையில், இந்த சீசனில் 8 போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 197 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதிலும், சீனியர் பேட்டர்களுக்கு மத்தியில் ஒரு நிலையான இடத்தில இறங்கும் வாய்ப்பு கிடைக்காதபோதும், ஹைதராபத்துக்கெதிரான ஒரு போட்டியில் அரைசதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அடுத்தடுத்த போட்டிகளில் பேட்டிங்கில் நிலையான இடம் கிடைக்கும்பட்சத்தில் நிச்சயம் கொல்கத்தாவின் வெற்றிக்குப் பங்களிப்பதோடு இந்திய அணியின் கதவையும் தட்டக்கூடும்.
அனிகேட் வர்மா:
இந்த சீசனில் ஹைதராபாத் அணியின் சைலன்ட் ஹிட்டரே இந்த 23 வயது இளம் வீரர் அனிகேட் வர்மாதான். தனது முதல் போட்டியில் ராஜஸ்தானுக்கெதிராக 286 ரன்கள் அடித்த ஹைதாபாத் அணி, அதன்பிறகு ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்கள் அடிக்கவே தடுமாறியது. அப்படிப்பட்ட சூழலில், டெல்லிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத்தின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன் அடிக்கவே திணறிய வேளையில், தனியாளாக 6 சிக்ஸ், 5 பவுண்டரி என அதிரடியாக 74 ரன்கள் குவித்தார்.

அப்போட்டியில் ஹைதராபாத் அணி தோற்றாலுமே, எப்போதும் டாப் ஆர்டரை பெரிதும் நம்பிக்கொண்டிருந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஒரு ஹார்ட் ஹிட்டர் பேட்ஸ்மேனாக அனிகேட் வர்மா கிடைத்தார். மொத்தமாக 9 போட்டிகளில் 190 ரன்கள் அடித்திருக்கும் அனிகேட் வர்மா, அதில் 132 ரன்களை 4 பவுண்டரி, 16 சிக்ஸ் மூலம் மட்டுமே அடித்திருக்கிறார். தனது அறிமுக சீசனிலேயே அதிரடி காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அனிகேட் வர்மா. கூடிய சீக்கிரம் இந்திய அணியின் கவனமும் இவர்மீது விழலாம்.
ஆயுஷ் மாத்ரே:
சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் பேட்டிங், பவுலிங். ஃபீல்டிங் என எதுவுமே சரியாக அமையாத சூழலில், டாப் ஆர்டரில் அதிரடி காட்டக்கூடிய வீரராக சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் 18 வயது ஆயுஷ் மாத்ரே. ருத்துராஜுக்குப் பதில் அணியில் இணைந்த ஆயுஷ் மாத்ரே, மும்பைக்கெதிரான போட்டியில் ஒன்டவுனில் இறங்கி அதிரடியாக 15 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என 32 ரன்கள் குவித்தார். அடுத்து, ஹைதராபத்துக்கெதிரான போட்டியிலும் இதே பாணியைக் கடைப்பிடித்த ஆயுஷ் மாத்ரே, அப்போட்டியில் ஓப்பனிங்கில் இறங்கி 19 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 30 அடித்து அசத்தினார்.

மொத்தமாக இரண்டே போட்டிகள்தான் ஆடியிருந்தாலும், சிஎஸ்கே-வின் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக உருவெடுத்திருக்கிறார். உள்ளூர் போட்டிகளில், முதல் தர கிரிக்கெட்டில் 16 இன்னிங்ஸ்களில் 504 ரன்களும் (ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் 176), லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் 458 ரன்களும் (ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் 181) அடித்து அசத்தியதால் சிஎஸ்கே-வுக்குள் நுழைந்திருக்கும் ஆயுஷ் மாத்ரே, இங்கும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடும்போது இந்திய அணியின் கதவுகளும் திறக்கும்.
வைபவ் சூர்யவன்ஷி:
ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை யாரு செய்யாத, இனிமேல் யாரேனும் செய்வாரா என்று யோசிக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி. மிகக் குறைந்த வயதில் ஐ.பி.எல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர், மிகக் குறைந்த வயதில் களமிறங்கிய வீரர் என்ற சாதனையெல்லாம் சும்மா கிடைக்காது என்றும் சொல்லும் வகையில் தனது ஐ.பி.எல் கரியரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். லக்னோவுக்கெதிரான அந்தப் போட்டியில் 3 சிக்ஸ், 2 பவுண்டரி என 34 ரன்கள் அடித்தார். அடுத்து இரண்டாவது போட்டியில் (ஆர்.சி.பி), 2 சிக்ஸ் உட்பட 16 ரன்கள் அடித்தார்.

ஆனால், இதெல்லாம் சாம்பிள்தான், இனிமேதான் இந்தக் காளியோட ஆட்டமே ஆரம்பம்னு, தனது மூன்றாவது போட்டியிலேயே 17 பந்துகளில் அரைசதம், 35 பந்துகளில் சதம் என குஜராத் பவுலர்களை திணறடித்து, அனைவரையும் தன்பக்கம் திருப்பினார். இப்போட்டியில் மட்டும் 11 சிக்ஸ், 7 பவுண்டரி என 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார். கூடிய சீக்கிரம் இந்திய அணியிலும் இதே அதிரடியை அவர் காட்டக்கூடும்.
இவர்களைத் தவிர, டெல்லியின் அபிஷேக் போரல், விப்ராஜ் நிகாம், பெங்களுருவின் சுயாஷ் சர்மா, ஷேக் ரஷீத் உள்ளிட்ட Uncapped பிளேயர்ஸ் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சீனியர்களுக்கு சவால் அளிக்கும் கவனம் ஈர்த்த Uncapped பிளேயர்ஸ் பிளெயிங் 11:
வைபவ் சூர்யவன்ஷி, ப்ரியன்ஸ் ஆர்யா, ஆயுஷ் மாத்ரே, ப்ரசிம்ரன் சிங், ஆயுஷ் பதோனி, அங்கிரிஷ் ரகுவன்ஷி (இம்பேக்ட் பிளேயர்), அனிகேட் வர்மா, சாய் கிஷோர், விக்னேஷ் புத்தூர், திக்வேஷ் ரதி, வைபவ் அரோரா, அஸ்வினி குமார்.
இந்த அணிக்கு அனுபவம் குறைவாக இருந்தாலும், இளங்கன்று பயமறியாது என்ற இளம்படையாக இது இருக்கிறது.