IPL 2025 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்த 13 வயது வீரர்; சூர்யவன்ஷிக்கு 1.1 கோடி கொடுக்க என்ன காரணம்?!
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் மிக இளவயது நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. இந்தியாவின் U-19 போட்டிகளில் விளையாடிவரும் இவர் ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் சரியான வயது 13 ஆண்டுகள் 244 நாட்கள். இவரை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான், டெல்லி கேப்பிடல் அணிகள் போட்டிப்போட்டன. இறுதியில் 1.1 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தனது 12 வயதில் வினு மங்கட் டிராபி தொடரில் பீகாருக்காகக் களமிறங்கிய வைபவ், ஐந்து போட்டிகளில் 400 ரன்கள் அடித்து அசத்தினார். தொடர்ந்து, 2023 நவம்பரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) இந்தியா A, இந்தியா B, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் மோதும் தொடரில், இந்தியா B அணியில் வைபவ் இடம்பெற்றார்.
சூர்யவன்ஷி யு-19 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற இந்தியா U19 Vs ஆஸ்திரேலியா U19 இளையோர் டெஸ்ட் போட்டியில், 58 பந்துகளில் சதமடித்து அசத்தினார் வைபவ். 13 வயதிலேயே தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது இந்திய வீரரின் அதிவேக சதமாகவும், உலக அளவில் இது இரண்டாவது அதிவேக சதமாகவும் பதிவானது.
இந்தியாவின் பிரதான உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் பீகார் அணிக்காக 12 வயதில் களமிறங்கி ஏற்கெனவே பிரபலமடைந்தவர் சூர்யவன்ஷி. தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடி வருகிறார்.
பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, 2011 மார்ச் 27-ல் பீகாரின் தாஜ்புர் கிராமத்தில் பிறந்தவர். சிறுவயதில் இவரது கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்த தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுத்தி ஊக்கமளித்துள்ளார். முன்னாள் ரஞ்சி வீரர் மணீஷ் ஓஜா, வைபவுக்கு பயிற்சியளித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் சாதனைகள் தனக்கு பெருமையளிப்பதாகக் கூறும் அவரது தந்தை சஞ்சீவ், ஐபிஎல்லுக்காக வழங்கப்படும் பணம் அவரது விளையாட்டைப் பாதிக்கக்கூடும் என்ற கவலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
"பணம் நல்லதுதான். அது எப்போது கிடைத்தாலும் வைபவின் FD கணக்கில் போட்டுவிடுவேன். என்னுடைய பயம் அவர் இந்த சூழலை எப்படி கையாளப்போகிறார் என்பது பற்றிதான். இது குறித்து அவரிடம் பேசவில்லை. ஆனால் நிச்சயம் பேசுவேன். இந்த ஐபிஎல் ஏலம் அவரது தலைக்குள் ஏறாதபடி பார்த்துக்கொள்வேன். அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது" என்று பேசியுள்ளார் சஞ்சீவ்.
சஞ்சீவ் ஒரு ட்ராவிட்டின் ரசிகர். IPL-ல் ட்ராவிட் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராஜஸ்தானில் தனது மகனும் இடம்பெற்றுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன், சூர்யவன்ஷியை கவனித்து வருகிறார், அவரது வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்து வருகிறார் என்று சஞ்சீவ் கூறியுள்ளார்.
மேலும் அவர், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் அல்லது ரியான் பராக் என பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளது. அவர்களின் வழியை எனது மகனும் பின்பற்றுவான் என நம்புகிறேன்" என்றும் கூறியுள்ளார்.