தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது: நிர்மலா சீதாராமன்
IPL Mega Auction : 'உச்சபட்ச விலைக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர்; ரிஷப் பண்ட்!' - பரபரக்கும் ஏலம்!
ஐ.பி.எல் மெகா ஏலம் பிரமாண்டமாக சவுதியில் நடந்து வருகிறது. 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ளும் இந்த ஏலத்தில் முதல் Marquee Set இப்போது முடிந்திருக்கிறது. ஸ்ரேயாஷ் ஐயர், ரிஷப் பண்ட் உட்பட ஸ்டார் வீரர்களெல்லாம் இந்த செட்டில்தான் ஏலம் விடப்பட்டிருந்தனர். அணிகள் இந்த வீரர்களுக்கு பல கோடிகளை அள்ளிக் கொடுத்திருக்கின்றன. ஸ்ரேயஸ் ஐயர் ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் விலைக்கு விற்கப்பட்டிருக்கிறார்.
முதல் வீரராக அர்ஷ்தீப் சிங்கின் பெயரை ஏலதாரர் உச்சரித்தார். வழக்கமாக, ஏலத்தின் பெரும்பாலான சமயங்களில் அமைதியாகவே இருக்கும் பழக்கமுடைய சென்னை அணி முதல் ஆளாக அர்ஷ்தீப் சிங்குக்கு கையை தூக்கினர். டெல்லியும் சென்னையுடன் போட்டியில் இறங்கியது. 7.25 கோடி ரூபாய் வரைக்கும் சென்னை அணி ரேஸில் இருந்தது. இதன்பின் சென்னை பின் வாங்க ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் போன்ற அணிகள் களத்தில் குதித்தன. கையில் 41 கோடியை மட்டுமே வைத்துக் கொண்டு அர்ஷ்தீப்புக்கு 15 கோடி ரூபாய் வரைக்கும் சென்றனர். கடைசியில் சன்ரைசர்ஸ் அணி 15.75 கோடி ரூபாய்க்கு அர்ஷ்தீப் சிங்கை வாங்கியது. பஞ்சாப் RTM கார்டோடு வந்தது. புதிய RTM விதிமுறையின் படி அர்ஷ்தீப் சிங்குக்கு சன்ரைசர்ஸ் எவ்வளவு கொடுக்க விரும்புகிறார்கள் என கேட்கப்பட்டது. சன்ரைசர்ஸ் 18 கோடி வரை கொடுக்கலாம் என சொல்ல, பஞ்சாப் RTM கார்டை பயன்படுத்தி 18 கோடிக்கு அர்ஷ்தீப்பை வாங்கியது.
மூன்றாவது வீரராக ஸ்ரேயாஷ் ஐயர் பெயர் உச்சரிக்கப்பட்டது. கடந்த சீசனில் கொல்கத்தா அணியை சாம்பியனாக்கிய கேப்டன். அத்தோடு டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என பல அணிகளுக்கும் கேப்டனுக்கான தேவை இருந்ததால் ஸ்ரேயாஷ் அதிகத் தொகைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்ரேயாஷ் எதிர்பார்ப்புகளையெல்லாம் மிஞ்சி 26.75 கோடி ரூபாய்க்கு ஐ.பி.எல் ஏல வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிகத் தொகைக்கும் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். ஸ்ரேயாஷை விடுவித்த கொல்கத்தா அணியேதான் அவருக்கு முதலில் கையை தூக்கி ஏலத்தை தொடங்கி வைத்தது. பஞ்சாப் அடுத்ததாக களத்தில் குதித்தது. தொகை கையை மீறி சென்றவுடன் ஒரு கட்டத்தில் கொல்கத்தா ரேஸிலிருந்து பின் வாங்கியது. டெல்லி இப்போது களத்தில் குதித்தது. டெல்லி, பஞ்சாப் இரண்டு அணிகளுக்குமே கேப்டன் தேவை என்பதால் இருவரும் விடாமல் கையை தூக்கிக் கொண்டிருந்தனர். 26.25 கோடியை எட்டிய சமயத்தில் டெல்லி கொஞ்ச நேரம் யோசித்து 26.50 கோடிக்கு கையை தூக்கியது.
பஞ்சாப் யோசிக்காமல் மீண்டும் கையை தூக்க டெல்லி பின் வாங்கியது. பஞ்சாப் ஸ்ரேயாஷ் ஐயரை 26.75 கோடிக்கு வாங்கியது. கையில் 110.50 கோடியோடு களத்தில் குதித்த பஞ்சாப் கிட்டத்தட்ட 44 கோடி ரூபாயை ஏலம் ஆரம்பித்த முதல் சில நிமிடங்களிலேயே செலவளித்தது.
இடையில் ரபாடாவை 10.75 கோடிக்கும் பட்லரை 15.75 கோடிக்கும் குஜராத் அணி வாங்கியது. கடந்த முறை 24.75 கோடி என்ற ரெக்கார்ட் விலைக்கு ஏலம் போயிருந்த ஸ்டார்க் இந்த முறை 15.75 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார்.
ஸ்ரேயாஷ் ஐயரை போன்றே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்டும் ஏல அரங்கில் பரபரப்பை கிளப்பினார். ரிஷப் பண்ட்டுக்கு ஆரம்பத்தில் பெங்களூருவும் லக்னோவும் போட்டி போட்டன. 12 கோடியை நெருங்குகையில் பெங்களூரு பின்வாங்க சன்ரைசர்ஸ் களத்தில் குதித்தது. சன்ரைசர்ஸூம் லக்னோவும் மோதி பண்டின் விலையை 20 கோடிக்கும் மேல் உயர்த்தினர்.
இறுதியாக லக்னோ 20.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால், டெல்லி RTM கேட்கவே லக்னோவிடம் பண்ட்டுக்கான உச்சபட்ச விலை கேட்கப்பட்டது. லக்னோ 27 கோடி சொல்ல டெல்லி பின் வாங்கியது. இதன்மூலம் லக்னோ பண்ட்டை 27 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட வீரர் எனும் பெருமையை சில நிமிடங்களிலேயே ஸ்ரேயஸ் இழந்தார். பண்ட் அந்தப் பெருமையைப் பெற்றார்.
ரிஷப் பண்ட், ஸ்ரேயாஷ் இருவருக்கும் மட்டுமே அணிகள் 53.75 கோடி ரூபாய் செலவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.