மாணவா் பாதுகாப்புக் குழு கூட்டங்களை பள்ளிகளில் நடத்த உத்தரவு
IPL Mega Auction: `நடராஜனுக்காக போட்டியிட்ட 3 அணிகள்' - ரூ.10 கோடியை தாண்டிய ஏலம்
ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. 500 வீரர்களுக்கும் மேல் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான செட் ஒன்று ஏலம் விடப்பட்டது. இந்த செட்டில் தமிழக வீரரான நடராஜனும் ஏலத்தில் விடப்படிருந்தார். அதில் ரூ.10 கோடிக்கும் மேல் நடராஜன் விலை போயிருக்கிறார்.
கடந்த சீசன்களில் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்காக நடராஜன் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். சன்ரைசர்ஸ் அணி கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. அந்த சீசனில் 14 போட்டிகளில் ஆடி 19 விக்கெட்டுகளை நடராஜன் வீழ்த்தியிருந்தார். ஆனாலும் சன்ரைசர்ஸ் அணி அவரை தக்கவைக்கவில்லை. இடதுகை வேகப்பந்து வீச்சாளராக அபாயகரமாக வீசக்கூடியவர் என்பதால் நடராஜன் ஏலத்தில் அதிக டிமாண்டை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேமாதிரியே ஏல அரங்கில் அவரின் பெயர் உச்சரிக்கப்பட்டவுடனேயே போட்டி தொடங்கிவிட்டது.
சன்ரைசர்ஸ் அணிதான் முதலில் கையைத் தூக்கியது. உடனே பெங்களூரு அணியும் போட்டியில் இறங்கியது. இருவரும் மாற்றி மாற்றி போட்டி போட்டு நடராஜனின் விலையை ஏற்றினர். ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி ஒதுங்கிக் கொண்டது. டெல்லி அணி பெங்களூருவுக்கு போட்டியளிக்கும் வகையில் கோதாவில் இறங்கியது. டெல்லி அணி பெங்களூருவுக்கு கடுமையாக போட்டியளித்தது. கடைசி வரை விடவே இல்லை. இறுதியாக 10.75 கோடி ரூபாய்க்கு நடராஜன் டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.
நடராஜன் இதற்கு முன் இரண்டு முறை ஐ.பி.எல் ஏலத்துக்கு வந்திருக்கிறார். ஆனாலும் இந்த முறைதான் மிக அதிக விலைக்கு நடராஜன் விலை போயிருக்கிறார். டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராக தமிழக வீரரான ஹேமங் பதானிதான் பொறுப்பேற்றிருக்கிறார். அதனாலே கூட நடராஜனை எடுத்தே ஆக வேண்டும் என்கிற உறுதியோடு கூட அவர் செயல்பட்டிருக்கலாம்.