என் பேட்டிங் வளர்ச்சிக்குக் காரணம் தினேஷ் கார்த்திக்: ஜிதேஷ் சர்மா
Ishan Kishan : 'இஷன் கிஷன் செய்தது மடத்தனம்..!' - ஏன் தெரியுமா?
'ஹைதராபாத் vs மும்பை!'
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்தப் போட்டியில் இஷன் கிஷன் அவுட் ஆன விதம்தான் சமூகவலைதளங்களில் இன்னமும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

'இஷன் கிஷன் சர்ச்சை!'
அம்பயர் அவுட்டே கொடுக்காமல் இஷன் கிஷன் தாமாகவே வெளியேறியிருந்தார். இதை 'Spirit of the Game' என மும்பை வீரர்களே பாராட்டியிருந்தனர். ஆனால், உண்மையில் இஷன் கிஷன் செய்தது மடத்தனமே. ஏன் தெரியுமா?
தீபக் சஹார் லெக் ஸ்டம்ப் லைனில் வீசிய அந்த பந்தை லெக் சைடிலேயே தட்டிவிட இஷன் கிஷன் முயன்றார். ஆனால், அது மிஸ் ஆனது. லெக் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பந்து அவருக்கு நெருக்கமாக சென்று கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது. அம்பயர் ஒயிடு கொடுக்க கையை பக்கவாட்டில் உயர்த்த பார்க்கிறார், அதற்குள் இஷன் கிஷன் வேகமாக க்ரீஸை விட்டு பெவிலியனுக்கு நடக்க தொடங்கிவிட்டார்.
அம்பயருக்கே இப்போது குழப்பம். ஒயிட் கொடுப்பதா அவுட் கொடுப்பதா என்று. ஏனெனில், பௌலிங் அணி அப்பீல் செய்தால்தான் அம்பயரால் ஒரு முடிவை சொல்ல முடியும். ஆனால், தொடக்கத்தில் மும்பை வீரர்கள் யாருமே அப்பீலுக்கும் செல்லவில்லை. இஷன் கிஷன் வெளியேறுகிறார்.

அம்பயர் குழம்பி நிற்கிறார் என்பதை அறிந்தவுடன்தான் தீபக் சஹார், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரைகுறையாக அப்பீலுக்கு செல்கின்றனர். அம்பயர் அதை வைத்துக் கொண்டு அவுட் கொடுத்துவிடுகிறார்.
'அப்பீல் செய்யப்பட்டதா?'
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் அப்பீலே இல்லாமல் அம்பயர் அவுட் கொடுத்துவிட்டார். அதனால் இந்த முடிவு செல்லாது என பேசி வருகின்றனர். ஆனால், நிலைமையை உணர்ந்து சுதாரித்துக் கொண்டு தீபக் சஹாரும் ஹர்திக்கும் ஒப்புக்காகவாது அரைகுறையாக விக்கெட் கேட்டிருந்தார்கள். ஆக, அதுவும் அப்பீல்தான்.

அதனால் இங்கே பிரச்சனை அம்பயர் இல்லை. இஷன் கிஷனின் நடவடிக்கைதான் பிரச்னை. இப்போதைய டி20 சூழலையே புரிந்துகொள்ளாமல் சமயோஜிதமே இல்லாமல் இஷன் முடிவெடுத்திருந்தார்.
சச்சின், கில்கிறிஸ்ட் போன்ற வீரர்களெல்லாம் முன்பு இதேபோல அம்பயர் அவுட் கொடுக்காவிடிலும் அவுட் என அவர்கள் உணரும்பட்சத்தில் தாமாகவே வெளியேறியிருக்கிறார்கள்.
விளையாட்டின் அறத்தை காக்கும் செயலாக அதைப் பார்க்கலாம். ஆனால், இப்போது இது DRS காலம். இங்கே பேட்டருக்கு தன்னுடைய விக்கெட்டில் சந்தேகம் இருப்பின் ரிவியூவ் எடுக்கலாம். அதேமாதிரிதான் பௌலிங் அணியும். அவர்கள் விக்கெட் என நினைத்து அம்பயர் அவுட் கொடுக்காவிடில் ரிவியூவ்க்கு செல்லலாம்.
'ரிவியூவ் வாய்ப்பு...:
இப்போது கள தீர்ப்பை தாண்டி அம்பயரின் முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பிருக்கிறது. இப்படியொரு சூழலில் எதோ பெரிய மனதை காட்டுகிறேன் என இஷன் கிஷன் அவராகவே வெளியேறுவதுதான் பிரச்னை. இத்தனைக்கும் ஸ்நிக்கோ மீட்டர் அவர் எட்ஜ்ஜே ஆகவில்லை என காட்டுகிறது.

ஆக, இரட்டை மனதோடுதான் இஷன் கிஷன் வெளியேறியிருப்பார். இதுதான் மடத்தனம். அந்த பந்தில் இஷன் எட்ஜ் ஆகிவிட்டார் என மும்பை நினைத்தால் அவர்கள் ரிவியூவ் எடுக்கட்டுமே. அதில் இஷன் அவுட் ஆனால் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு வேளை அவுட் இல்லையென்றால் மும்பைக்கு 2 ரிவியூவ்க்களில் ஒரு ரிவியூவ் காலி ஆகியிருக்கும்.
அது சன்ரைசர்ஸ் அணிக்குதான் சாதகம். இப்போதைய சூழலில் களத்தில் பேட்டிங்கை தாண்டியும் வீரர்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இப்படித்தான் பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கையில் ரிவியூவ் இருந்தும் ரஹானே ரிவியூவ் எடுக்காமல் அம்பயரின் முடிவை ஏற்று பெவிலியனுக்கு திரும்பியிருந்தார்

'அணிக்கே இழப்பு!'
ரீப்ளேவில் அது அவுட்டே இல்லை என தெரிய வந்தது. ரஹானேவின் அந்த விக்கெட் ஆட்டத்தையே மாற்றிவிட்டது. பஞ்சாப் அணி ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகக்குறைந்த ஸ்கோரை டிபண்ட் செய்திருந்தது. ஆக, இந்த DRS விஷயத்திலும் பேட்டர்கள் கொஞ்சம் சமயோஜிதமாக நடக்க வேண்டும். அங்கே போய் தங்களின் தாராளமனதை காட்டக்கூடாது. ஏனெனில், அது தனிப்பட்ட வீரருக்கு மட்டுமில்லை. அணிக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது.