அதிமுக: "தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்?" - இபிஎஸ்யை விமர்சித...
Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர் விளக்கம்
தினமும் 10 ஆயிரம் அடி நடந்தால் ஆரோக்கியமாக இருப்போம் என்று நாமெல்லாரும் நம்பிக் கொண்டிருக்க, ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் 'Interval Walking போங்க. நல்லாயிருப்பீங்க' என்கிறார்கள்.
அதென்ன Interval Walking? ஈரோடைச் சேர்ந்த விளையாட்டு மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்யா விக்னேஷ் கோபிநாத் விளக்குகிறார்.

''ஒரு நாளில் 10,000 அடிகள் நடப்பதற்கு குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் தேவைப்படும். ஜப்பானிய Interval Walking-ஐ சிரமமின்றி குறைந்த நேரத்தில் செய்யலாம். பலனை எடுத்துக்கொண்டால், அதே அல்லது அதற்கும் மேல் கிடைக்கும்.
இடைவெளி நடைப்பயிற்சி என்பதுதான் இதன் அர்த்தம். இந்த நடைப்பயிற்சியில் 3 நிமிடம் வேகமாக நடக்க வேண்டும். அடுத்த 3 நிமிடம் சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி மாற்றி மாற்றி 5 முறை நடக்க வேண்டும். அதாவது, ஒரு முறைக்கு முதல் 3 நிமிடம் வேகமாகவும், அடுத்த 3 நிமிடம் சாதாரணமாகவும் நடக்க வேண்டும். இதுபோல 5 முறை செய்ய வேண்டும். இதை செய்வதற்கு மொத்தம் 30 நிமிடம் ஆகும்.
ஒரு வாரத்தில் 5 அல்லது 6 நாள்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். முதன் முதலில் ஆரம்பிக்கும்போது, 2 முறை (12 நிமிடம்) மட்டும் செய்யலாம். உடல் பழகிய பிறகு மெதுவாக 5 முறை வரை கூட்டிக்கொள்ளலாம்.

'இடைவெளி நடைப்பயிற்சி' தொடர்பாக ஜப்பானில் நடைபெற்ற ஆராய்ச்சிகள், இது தரும் நன்மைகளை பட்டியலிட்டிருக்கின்றன.
* உடல் எடை குறைதல்
* ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த கட்டுப்பாடு
* தசை வலிமை
* வளர்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரித்தல்
* இதய ஆரோக்கியம் மேம்படல்
* நினைவாற்றல், கவனிக்கும் திறன் அதிகரித்தல்
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாதல்
* நல்ல மனநலம் மற்றும் நல்ல தூக்கம்
* இளைஞர்கள் முழுமையாக 5 முறை செய்யலாம்.
* நடுத்தர வயதில் இருப்பவர்கள், முதியவர்கள் ஒருநாளைக்கு 2 அல்லது 3 முறை செய்ய தொடங்கலாம்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப் பயனுள்ள நடைப்பயிற்சி இது. ஆனால்,லோ சுகர் பிரச்னை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
* கர்ப்பிணிப்பெண்கள், மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்டு நடக்க வேண்டும்.

* திடீரென அதிக வேகத்தில் தொடங்கக்கூடாது. முதலில் வார்ம் அப் அவசியம்.
* இந்த நடைப்பயிற்சியை செய்கையில் உடலில் எங்காவது வலி ஏற்பட்டால் உடனே நிறுத்த வேண்டும்.
* உடலில் தண்ணீர்ச்சத்து அவசியம். நடைப்பயிற்சியின்போது நீர்ச்சத்து குறைந்தால் மயக்கம் வரலாம், கவனம்.
'எனக்கு 30 நிமிடம் நடக்க நேரம் கிடைப்பதில்லை' என்பவர்கள், காலை 15 நிமிடம், மாலை 15 நிமிடம் என பிரித்தும் செய்யலாம். அப்படி செய்தாலும் பலன் ஒரே மாதிரிதான் கிடைக்கும். காலையில் செய்யும் போது நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கும். மாலையில் செய்யும் போது மன அழுத்தம் குறைந்து ஆழ்ந்த தூக்கம் வரும்.

நடைப்பயிற்சி செய்பவர்கள், புரதம் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான மாவுச்சத்து மற்றும் காய்கறிகள் அவசியம். அதிக எண்ணெய் உணவுகள், ஜங்க் உணவுகள் தவிர்க்கவும். நடைப்பயிற்சிக்கு முன்பும் பின்பும் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும்.
* 3 முதல் 6 மாதங்களில் எடை குறைவது தெளிவாக தெரியும்.
* ஒரு வருடத்தில் இதய ஆரோக்கியம், ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு, உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
ஆனால், தொடர்ச்சியாக நடந்தால் மட்டுமே பலன் தரும். அதுதான் உடல் நலனுக்கு உண்மையான சாவி'' என்கிறார் டாக்டர் சத்யா விக்னேஷ் கோபிநாத்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...