Kantara: ``விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன!" - காந்தாரா குறித்து நெகிழும் ஜெயராம்!
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதற்கு முந்தைய பாகத்தின் ப்ரீக்வல் கதையைச் சொல்கிறது இந்த சாப்டர். இப்படத்தில் ருக்மணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம் ஆகியோரும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ராஜசேகரா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் அவ்வளவு நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருந்தார். தற்போது இப்படத்தில் நடித்தது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார் நடிகர் ஜெயராம்.
அந்தப் பதிவில் அவர், "`காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு நீங்கள் அளித்திருக்கும் அளவற்ற அன்பு, விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளுக்கு ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் வார்த்தைகள் எனக்கு விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன. மேலும் இந்தப் படம் உங்களுடன் இவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பது என்னை மகிழ்ச்சியால் நிரப்புகிறது.
இந்த அழகிய செய்தி இன்று ஆயுத பூஜை என்ற புனிதமான நாளில் என்னை வந்தடைந்திருப்பது இந்தத் தருணத்தை இன்னும் சிறப்பாக்குகிறது.
இது கடின உழைப்பு மற்றும் ஆசிர்வாதங்களைக் கொண்டாடும் ஒரு நாள். இதைவிட சிறந்த பாராட்டுகளை நான் எதிர்பார்க்கவே இல்லை.
மேலும், இந்தப் பயணத்தில் என்னை நம்பியதற்காக ரிஷப் ஷெட்டிக்கு என் மனமார்ந்த நன்றி! இந்தப் படத்திற்குப் பின்னால் உழைத்த முழு குழுவினருக்கும் என் முழு அன்பு தருகிறேன்.
அவர்கள்தான் எங்களை மிளிர வைத்தார்கள். இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்கு நன்றி. இந்த அன்பு என்றென்றும் என்னுடன் இருக்கும்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.