Kollywood 2025 : `ஒன்லி வீச்சுதான்!' - 2025-ல் வெளியாகவுள்ள பெரிய படங்களின் ரிலீஸ் டேட் விவரங்கள்!
இந்தாண்டு வெளியாகவிருக்கும் பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு எப்போதும் அதிகப்படியான எதிர்பார்பு நிலவும். அப்படியான மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனவரி மாதத்திலிருந்தே பெரிய ஹீரோ படங்களின் ரேஸ் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அஜித்தின் `விடாமுயற்சி' திரைப்படமும் தள்ளிப்போனது. ஆதலால் இந்த ரிலீஸ் ரேஸ் பிப்ரவரி மாதத்திலிருந்து தொடங்கவிருக்கிறது... என்னென்ன படங்கள் இந்த ரேஸில் இருக்கிறது தெரியுமா?
அஜித்:
`விடாமுயற்சி' திரைப்படம் பிற்போடப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே `இருங்க பாய்' மொமன்ட்டைப் போல பிப்ரவரி 6-ம் தேதி திரைப்படம் வெளியாகும் என அறிவித்தது லைகா நிறுவனம். `பண்டிகை தினத்தன்று படம் வெளிவரவில்லை எனக் கவலைக் கொள்ள வேண்டாம். படம் வெளியாகும் தினம் பண்டிக்கை நாளாக மாறும்' என நடிகர் அஜித்தும் இயக்குநரிடம் கூறியிருக்கிறாராம். இந்த வருடத்தின் முதல் பெரிய ஹீரோ ரிலீஸாக இப்படம் வெளியாகவிருக்கிறது. கடந்தாண்டு அஜித்தின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. `விடாமுயற்சி' , `குட் பேட் அக்லி' என இரண்டு படங்களிலும் பிஸியாக இருந்தார் அஜித். அந்தப் படங்களெல்லாம் வரிசையாக இந்த வருடம் வெளியாகவிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் `விடாமுயற்சி' திரைப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரனின்`குட் பேட் அக்லி' திரைப்படமும் இந்தாண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தாண்டு டபுள் ரிலீஸை கையில் வைத்திருக்கிறார் அஜித்!
தனுஷ்:
பிப்ரவரி மாதம் தனுஷ் இயக்கியிருக்கும் `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் திரைக்கு வருகிறது. `ஜென்-சி' வைப்பில் இப்படத்தை இளைஞர்களை வைத்தே தனுஷ் இயக்கியிருக்கிறார். இதுமட்டுமல்ல, இவர் இயக்குயிருக்கும் `இட்லி கடை' திரைப்படமும் இந்தாண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. நடிகராக மட்டுமன்றி தனுஷ் இயக்குநராக களமிறங்கியிருக்கும் இரண்டு திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகிறது. மேலும், சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் `குபேரா' திரைப்படமும் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா:
கடந்தாண்டு சூர்யா நடித்திருந்த `கங்குவா' திரைப்படம் நவம்பர் மாதத்தில் வெளியாகியிருந்தது. கடந்தாண்டு இவருக்கு இந்த ஒரு ரிலீஸ்தான். இதை தாண்டி கார்த்திக் சூப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பம்பரமாய் சுற்றி வந்தார் சூர்யா. இதில் கார்த்திக் சுப்புராஜின் `ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் `சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பு தற்போது மற்றொருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.
விக்ரம்:
கடந்தாண்டு தங்கலானாக மிரட்டியிருந்தார் விக்ரம். பெரும் சிரத்தைக் கொடுத்து இப்படத்திற்க்காக விக்ரம் உழைத்திருந்தார். இப்படத்திற்குப் பிறகு `சித்தா' அருண் குமார் இயக்கத்தில் `வீர தீர சூரன்: பாகம் 2' திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். ஒரே இரவில் நடக்கும் சம்பவம்தான் இத்திரைப்படத்தின் கதையாம். இந்தப் படமும் இம்மாதம் வெளியாகும் என முன்பு அறிவித்திருந்தனர். ஆனால், இப்படத்தை தற்போது மார்ச் மாதம் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். `சித்தா' அருண்குமாரை தொடர்ந்து `மாவீரன்' படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வினுடன் இணைந்திருக்கிறார் விக்ரம். அவர் இயக்கும் படத்தில்தான் தற்போது விக்ரம் நடித்து வருகிறார்.
விஜய்:
விஜய்யின் கடைசி திரைப்படமான `தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் தன்னுடைய கட்சிப் பணிகளையும் கவனித்து வருகிறார் விஜய். இப்படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என முன்பே அறிவித்துவிட்டது படக்குழு. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவிருக்கிறது.
ரஜினி:
ரஜினியின் `கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பும் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது. அத்திரைப்படமும் இந்தாண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர `ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினி `ஜெயிலர் 2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு ப்ரோமோவும் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இப்படங்களை தாண்டி கமல், சிம்பு நடிக்கும் தக் லைஃப் திரைப்படமும் ஜூன் மாதம் 5-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
கடந்தாண்டு சிம்புவின் எந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஒரு இடைவெளிக்குப் பிறகு சிம்பு நடித்திருக்கிற இப்படம் வெளியாகிறது. `நாயகன்' படத்திற்குப் பிறகு மீண்டும் கமலும் மணி ரத்னமும் இணைந்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு நிலவுகிறது. மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாம். இந்தப் படமும் இந்தாண்டு வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தாண்டி சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார் எஸ்.கே!